குஜராத் படுகொலைகளும் விடுதலையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

குஜராத் படுகொலைகளும் விடுதலையும்

  குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்தவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். 

 இதுதொடர்பான வழக்கில் 11 பேருக்கு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அவர்கள் 15 ஆண்டுகாலம் சிறையில் கழித்த பிறகு, தங்களை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களுக்கான தண்டனைக்குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதையடுத்து, விடுதலை தொடர்பாக பரிசீலிக்க பஞ்ச் மகால் மாவட்ட ஆட்சியர் சுஜால் மாயாத்ரா தலைமையில் ஒரு குழுவை குஜராத் அரசு அமைத்தது. அந்தக் குழு, குறிப்பிட்ட கைதிகளின் ஆயுள் தண்டனையைக் குறைப்பதற்கு பரிந்துரைத்து, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதன் அடிப்படையில் 11 ஆயுள் தண்டனைக் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 11 பேரும் கோத்ரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.  விடுதலை ஆன 11 பேரையும் சிறையின் முன்பு பெரும் ஆரவாரத் தோடு ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் வரவேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு மேள தாளத்தோடு அழைத்துச்சென்றனர்.

கொடூரக் கொலைகுற்றவாளிகளான இவர்கள் சிறுமி மற்றும் நிறைமாத கர்ப்பிணியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு கொலையும் செய்ய முயன்றுள்ளனர். இதில் சிறுமி மரணமடைந்தார். பில்கிஸ் பானுவும் இறந்து விட்டதாக கருதிக் குற்றவாளிகள் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் மயங்கிக்கிடந்த பில்கிஸ்பானு மயக்கம் தெளிந்து அருகில் உள்ள ஊருக்குச் சென்று தன்னைக் காப்பாற்ற வேண்டினார்; ஆனால் ஊர்க்காரர்கள் எவரும் அவருக்கு உதவ முன்வராததால் அவராகவே அருகில் உள்ள காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். 

 பிறகு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக விசாரணை நடந்தது, இந்த நிலையில் குஜராத்தில் விசாரணை நடந்தால் நியாயம் கிடைக்காது என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மும்பைக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி, அனைவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டி சிறையில் உள்ள அனைவரையும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து விடுதலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் பில்கிஸ் பானு பாலியல்வன்கொடுமைக் குற்றவாளிகளும் விடுதலை ஆகி உள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தைப் பொறுத்த வரை இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தோடு அரங்கேற்றப்பட்ட படுகொலை என்னும் கறை படிந்த அத்தியாயம் யுகம் யுகமாக அவமானப்பட்டே நிற்கும்.

நரோடா பாட்டியா என்னும் இடத்தில் நடைபெற்ற மிகப் பெரிய எண்ணிக்கையிலான படுகொலையில் (28.2.2002) பின்னணியில் இருந்து இயக்கியவர் சாதாரண மானவரல்லர்; ஓர் அமைச்சர்! மாயாகோட்டானி என்னும் பெண் அமைச்சர். அவருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையை அளித்தது. அவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்.

ஆயிரக்கணக்கான வழக்குகளை திரும்பப்  பெற்ற நிலையில், நீதிமன்றம் மீண்டும் அவற்றை விசாரிக்க வேண்டும் என்று சொல்லியதுண்டே!

பிஜேபி, சங்பரிவார் நாட்டைப் பீடித்த ஒரு பெருங்கேடு - நாச சக்தி! இதற்குமேல் கூறுவதற்கு என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment