பார்ப்பனர்களின் பார்வையில் பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

பார்ப்பனர்களின் பார்வையில் பெண்கள்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளரும், உத்தரப்பிரதேச மாநில ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஆனந்தேஷ்வர் பாண்டே, விளையாட்டு வீராங்கனைகளிடம், தன்னோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டால் சலுகைகளை தருவேன் என்று ஆசை வார்த்தைக் கூறி பெண்களோடு ஆபாசமாக இருந்த காட்சிப் பதிவு வெளியானதை அடுத்து, 'என் மீது நடவடிக்கை எடுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டியுள்ளார்

ஆனந்தேஷ்வர் பாண்டே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முக்கியப்பதவியில் இருப்பவர், பார்ப்பனர்! -  இவருக்கு அரசியல் மற்றும் விளையாட்டுத்தளங்களில் செல்வாக்கு இருப்பதால், அழகாக இருக்கும் வீராங்கனைகளை தன்னோடு படுக்கைக்கு வந்தால் சலுகைகள் கிடைக்கும் - வெளிநாடுகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிந்துரைப்பேன்  - என்று கூறி பல வீராங்கனைகளை படுக்கை அறைக்கு அழைத்துள்ளார். 

ஒருமுறை இவரோடு படுக்கையறையைப் பகிர்ந்து கொண்ட வீராங்கனைகளை மீண்டும் மீண்டும் அழைத்துத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சில வீராங்கனைகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் பேசி, அவரோடு படுக்கை அறையில் இருக்கும் போது ரகசிய காமிரா மூலம் படம் எடுக்க முடிவு செய்தனர். 

அப்படியே சிலர் படங்களை எடுத்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.  கடந்த பல ஆண்டுகளாகவே இவர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் இவருக்கு உள்ள அரசியல் செல்வாக்கால் எத்தனை  புகார் அளித்தாலும் அவை பலனின்றிப் போனது. 

 லக்னோவில் அரசு குடியிருப்பில் வீடு இருந்தபோதும் இவர் கே.டி. சிங்பாபு விளையாட்டு அரங்கின் விருந்தினர் மாளிகையில்தான் எப்போதும் தங்குவாராம். இந்த விருந்தினர் மாளிகையின் ஒரு பகுதியாக விளையாட்டு வீராங்கனைகளுக்கான விடுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் ஆபாசமாக இருக்கும் படம் வெளியானதும் இது குறித்து இவரிடம் கேட்டபோது, சில விலை மாதர்களுடன் இருக்கும்  படம் வெளியாகி இருக்கும் என்று நினைக்கிறேன், அது எனது தனிப்பட்ட உரிமை, சில படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறினார். இருப்பினும் இவர் மீது இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதுதொடர்பாக இவர் லக்னோ தலைமை அரசு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆணையத்தலைவர் அஜய்சேத் என்பவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், எனது தனிப்பட்ட விவரங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். யாராவது என் மீது புகார் செய்து அதன்மீது நடவடிக்கை எடுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

பாரத புண்ணிய பூமியில், அதுவும் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில், அதுவும் குற்றவாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால்  சட்டம் எப்படியெல்லாம் நெளிந்து, வளைந்து சலாம் போடுகிறது என்பதை அறிய முடிகிறது.

உலக அரங்குகளில் நடைபெறும் போட்டிகளில் 135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பெறும் பதக்கங்கள் எத்தனை? குட்டி நாடுகள் பெறும் பதக்கங்கள் எத்தனை?

தப்பித் தவறிப் பெண்கள் வீராங்கனைகளாக வெளியில் வந்தால், அவர்களை ஆண் ஆதிக்க உயர் ஜாதிப் பேர் வழிகள்  எந்தக் கண் கொண்டு பார்க்கிறார்கள் - வெட்கக் கேடு!

'பாரத மாதாகீ ஜெய்' என்று சத்தம் கொடுத்தால் போதுமா? மாதாக்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.

No comments:

Post a Comment