புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் வளர்த்திடுக! தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் வளர்த்திடுக! தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

புதுடில்லி. ஆக.29  தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் நூலகங்களை மாணவர்கள் திறம்பட பயன்படுத்தும் வகையில், மாதந் தோறும் போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:

வாசிப்பு மாணவர்களின் அறிவையும், ஆற்றலையும் வளர்க்கும் பேராதாரமாகும். இதை கருத்தில் கொண்டு மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் நூல கங்கள் செயல்பட்டு வருகின்றன. 

மேலும், இதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஆக.17-ஆம் தேதி வாசிப்பு இயக்கத்தைத் தொடக்கி வைத்தார். அனைத்துப் பள்ளிகளிலும் நூலக செயல்பாடுகளுக்காக வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் நூலகப் பாடவேளையில் மாணவர்களைப் பள்ளி நூலகத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவ னுக்கும் ஒரு புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்கத் தர வேண்டும். அடுத்த வாரம் வேறு புத்தகத்தை மாணவனுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.

நூலகப் பாடவேளையில் மாணவர் வாசித்த நூல் சார்ந்து ஓவியம், பேச்சு, கட்டுரை, புத்தக மதிப்புரை, ஆசிரியர் அறிமுகம், நூல் அறிமுகம், மேற்கோளைக் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் போன்ற போட்டிகளை பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் மாதந்தோறும் நடத்த வேண்டும். இந்த செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வட்டார அளவில் வட்டாரக் கல்வி அலு வலர்களையும், கல்வி மாவட்ட அளவில் பள்ளித் துணை ஆய்வாளர்களையும் பொறுப்பாளராக நியமிக்கலாம்.

சென்னையில் சிறப்பு முகாம்: நூலக செயல்பாடுகளில் பள்ளி, ஒன்றிய, மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 2023-ஆம் ஆண்டு அய்ந்து நாள்கள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள், எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த நாள்களில் சிறார் எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும், மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வு களும் நடைபெறவுள்ளன. நூலக பாடவேளைகளையும், பள்ளி நூலகங்களையும் முறையாக மாணவர்கள், ஆசிரி யர்கள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவ லர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment