சென்னையை செதுக்கிய தலைவர் கலைஞரின் திட்டங்கள் அண்ணா மேம்பாலம் முதல் மெட்ரோ ரயில் வரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

சென்னையை செதுக்கிய தலைவர் கலைஞரின் திட்டங்கள் அண்ணா மேம்பாலம் முதல் மெட்ரோ ரயில் வரை!

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கலைஞருக்கு கடற்கரை பகுதி யில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. பின்னர், உடனடியாக நீதிமன்றம் சென்று, திமுக வழக்குரைஞர்கள் வாதாடி, கலைஞர் உடலை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே இடம் அளிக்க நீதிமன்றம் மூலம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,


அது பற்றி மக்கள் கூறும் போது, ‘அவர் முதல்வராக, திமுக கட்சி தலைவராக செயல் பட்டபோதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்க ளின் இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டார். இறந்த பிறகும் தனது இட ஒதுக்கீட்டுக்காக போராடி, அதிலும் வெற்றி பெற்றுள்ளார்”. என்று கூறினர். தமிழக முதல் வராக இருந்த போது கலைஞர், தமிழகம் முழுவதும் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செய்துள்ளார். ஆனால், சென்னை மக்களுக்கு அவர் செய்த சாதனைகள் வரலாற் றில் எப்போதும் நிற்பவையாகும்.

அது பற்றிய சில தகவல்கள்:

அண்ணா நினைவிடம்

1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா மறைந்தார். அவரின் உடலுக்கும், புகழுக்கும் மிகப்பெரிய அரசு மரியாதை கொடுத்தே ஆக வேண்டும் என்று கலை ஞர் உறுதியாக இருந்தார். அப்போதுதான், சென்னை மெரினா கடற்கரை அருகே அண்ணா உடலை அடக்கம் செய்ய வேண் டும் என்று இடத்தை தேர்வு செய்தார் கலை ஞர், காரணம், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் ஏழை, பணக்காரர்கள் என அனைவரும் முதலில் பார்க்க வரும் இடம் மெரினா கடற்கரை தான். இந்த மாநிலத்துக்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்தவருக்கு கடற்கரையில் நினைவிடம் கட்ட விரும்பினார். அதன்படி தலைவர் கலைஞர் தமிழக முதல்வரான பிறகு, அண்ணா நினைவிடத்தை பார்த்துப் பார்த் துக் கட்டினார். அவரது சமாதி மீது "எதை யும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது" என்ற வாசகத்தை எழுதி, அணையா விளக் கும் அமைத்தார். இப்போதும் அண்ணா சதுக்கத்தை தினசரி பல ஆயிரக்கணக்கா னோர் வந்து பார்த்து செல்கிறார்கள்..

வள்ளுவர் கோட்டம்!

நுங்கம்பாக்கத்தில் 1975ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டதுதான் வள்ளுவர் கோட்டம், இதுவும் நகரின் மய்யப்பகுதியில் அமைந் துள்ளது. வள்ளுவர் கோட்டக் கட்டுமானம் மிகப்பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. எந்த தூண்களின் ஆதாரமும் இல்லாமல் கட்டப்பட்டதாகும், 39 மீட்டர் உயரம் கொண்ட தேர் வள்ளுவர் கோட்ட வளாகத் தில் நிறுத்தப்பட்டுள்ளது சிறப்பு அம்சம், இங்குள்ள ஆடிட்டோரியத்தில் 4 ஆயிரம் பேர் இருக்கலாம். திருவள்ளுவரின் 1,330 திருக்குறளும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது.

செம்மொழிப் பூங்கா!

கலைஞரால் அமைக்கப்பட்டது தான் நுங்கம்பாக்கம் அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள செம்மொழிப் பூங்கா, தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. 7.92 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடி செல வில் 2010ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக செம் மொழிப் பூங்காவை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். அங்கு 20 ஆயிரம் வகையான தாவரங்கள் மற்றும் பூச்செடிகள் உள்ளன. 

மதுரவாயல் பறக்கும் சாலை

சென்னை, துறைமுகத்துக்கு வரும் சரக்கு மற்றும் டேங்கர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்கு படுத்த ரூ.1,816 கோடி செலவில் துறைமுகம் மதுரவாயல் இடையே பறக்கும் சாலை திட்டத்துக்கு கலைஞர் முதல்வராக இருந்த போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து முதல்வரான ஜெயலலிதா, கூவம் ஆற்றின் போக்கை கெடுப்பதாக கூறி இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார். தற்போது இந்த திட்டம் செயல்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இத னால், மக்களின் வரிப்பணம் பல ஆயிரம் கோடி வீணாக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில்!

சென்னையில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று முதல்வர் கலைஞர் மத்திய அரசிடம் அனு மதி வாங்கினார். அதன்படி 10.06.2009ஆம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.  அதன் படி ரூ.14,600 கோடி செலவில் 45 கி.மீ. தூரத் துக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல் மெட்ரோ பயணிகள் சேவையும் தொடங்கப்பட்டது. 

அண்ணா மேம்பாலம்!

சென்னையின் மையப்பகுதி நுங்கம் பாக்கம் ஆகும். 1973ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போதுதான் மிகப் பெரிய மேம்பாலம் கட்டப்பட்டது. இது சென்னையில் முதலில் கட்டப்பட்ட மேம் பாலம், இந்தியாவில் கட்டப்பட்ட 3ஆவது மேம்பாலம் என்பதுடன் மிகப்பெரிய மேம் பாலமும் இதுதான், இந்த பாலத்தின் உயரம் 4.3 மீட்டர் (14 அடி), 20 மீட்டர் அகலம், இப் போதும், சென்னையின் மத்திய பகுதியில் அமைந்த இந்த அண்ணா மேம்பாலம் சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுகிறது என்றால் அது மிகையாகாது. 

கோயம்பேடு பேருந்து நிலையம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து  நிலையம் கோயம்பேடு பகுதியில் அமைக்க முதல்வர் கலைஞர் 1999ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.103 கோடி செலவில் இந்த பணிகள் நடைபெற்றது. 2002ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி கோயம்பேடு பேருந்து  நிலையம் திறந்து வைக்கப்பட்டது. 37 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பேருந்து நிலையம் அமைந் துள்ளது. 

கிண்டி கத்திப்பாரா மேம் பாலம்! 

சென்னையின் புறநகர் பகுதி மக்கள் சென்னை நகருக்கு வரும் நுழைவு வாயில்தான் கிண்டி, கத்திப்பாரா பகுதி ஆகும். அந்தப் பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 2006ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது மத்திய அரசிடம் போராடி கிண்டி, கத்திப்பாரா பகுதியில் மிகப்பெரிய மேம்பாலம் கட்ட அனுமதி வாங்கினார். 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. வண் ணத்து பூச்சி போல் காட்சி அளிக்கும் இந்த மேம்பாலத்தில் பயணம் செய்யும்போது சென்னை மக்களையே வியப்படையச் செய்யும் அளவுக்கு மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 4 சாலைகளை இணைக் கும் இந்த மேம்பாலம், சென்னை மக்களின் மிகப்பெரிய வரப்பிரசாதம். இது கலைஞர் முதல்வராக இருந்தபோது, மக்களுக்கு கிடைத்த பரிசாகும். அதைத்தொடர்ந்து, விமான நிலையம் எதிரே, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பெருங் களத்தூர் என தொடர்ந்து மேம்பாலங்கள் கலைஞர் முதல்வராக இருந்தபோது கட் டியதுதான். ஒவ்வொரு பாலமும் கலைஞ ரின் பெயரை இன்றளவும் உச்சரிக்கிறது.

புதிய தலைமைச் செயலகம்

தற்போதுள்ள தலைமை செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. இது இந்திய ராணுவத்தின் இருப்பிடமாக இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாது. மேலும், அந்த வளாகத்தில் 1975ஆம் ஆண்டு கட்டப் பட்ட, நாமக்கல் கவிஞர் மாளிகையான 10 மாடி கட்டிடத் திலும் விரிசல் விழுந்தது. இதன் காரணமாக, அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் சுமார் ரூ.900 கோடி செலவில், புதிய தலைமைச் செயலகத்தை முதல்வராக இருந்த கலைஞர் மிகப்பிரமாண்டமாக கட்டினார். பின்னர் 2010ஆம் ஆண்டு, புதிய தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவை கூட்டம் மற்றும் முதல்வர், அமைச் சர்கள் அலுவலகங்களும் செயல்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு முதல்வராக வந்த ஜெய லலிதா, புதிய தலைமைச் செயல கத்தை பயன்படுத்த மறுத்துவிட்டார். அந்தக் கட் டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள் ளது என்று நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அமைத்து இதுவரை ரூ.4 கோடிக்கும் மேல் மக்கள் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று தற்போது உயர் நீதிமன்றம் அந்த ஆணை யத்தையே கலைத்து விட்டது குறிப்பிடத் தக்கது. தற்போது இந்தக் கட்டிடம் அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வரு கிறது. தளபதி மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, ஒரே நேரத்தில் 10 மேம்பாலங்களைக் கட்டி சாதனை படைத் ததும், சென்னையின் போக்குவரத்து நெரி சலை குறைத்ததும் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான். சென்னை மாநகருக்கு முதன் முதலாக குளிர்சாதனப் பேருந்து அறிமுகப்படுத்தியதும் முதல்வராக கலை ஞர் இருந்தபோது தான்.

- நன்றி: தினகரன், பக். 8, 12.08.2018


No comments:

Post a Comment