மதவாதம், ஜாதிக் கிருமிகளை அழித்து, சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காப்பாற்றும் பேராயுதம் கலைஞர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

மதவாதம், ஜாதிக் கிருமிகளை அழித்து, சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காப்பாற்றும் பேராயுதம் கலைஞர்!

அவர் நினைவு நாளில் இவற்றைச் செயல்படுத்திட உறுதி எடுப்போம்! 

தமிழர் தலைவர் சூளுரை அறிக்கை!

மதவாதம், ஜாதிக் கிருமிகளை அழித்து, சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காப்பாற்றும் பேராயுதம் கலைஞர்! அவர் நினைவு நாளில் இவற்றைச் செயல்படுத்திட உறுதி எடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (7.8.2022) ‘மானமிகு சுயமரியாதைக் காரன்' என்று எந்த நிலையிலும் கூறும் தி.மு.க. தலைவரும், அய்ந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், 50 ஆண்டு (அரை நூற்றாண்டு) தொடர்ந்து சட்டமன்றத்தில் அமர்ந்து செங்கோலைச் செம்மையாகச் செலுத்தி, ‘திராவிட மாடல்' ஆட்சியை வலுப் படுத்தி, தொடரும் வழி ஏற்படுத்திய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தனது வாழ்நாளில் திருப்பம் ஏற்பட்டதே-  தந்தை பெரியாரை சந்தித்தது, முதல்தான் என்று தனது ‘நெஞ்சுக்கு நீதி' தன்வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்!

அண்ணா தன் ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்றார் 1967 இல்.

அண்ணாவின்ஆட்சியின் தொடர்ச்சியாகவே நமது கலைஞர் வரலாற்றை எழுதினார்!

சரித்திரம் படைக்கிறது.

அவரது ஆட்சி - ‘திராவிட மாடலின்' மாட்சியாகத் திகழும் வண்ணம் இன்றும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சி கொள்கைக் கூட்டணியோடு அனைவருக்கும் அனைத்தும் என்னும் அரியதோர் சமூகநீதி ஆட்சியாகி சரித்திரம் படைக்கிறது.

கலைஞர் நினைவு நாளில் 

சூளுரை!

தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலை' இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற - சனாதனம் என்ற பெயரில் வெறுப்பு அரசியலை, மதவெறியைப் பரப்பும் தீய சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற, இந்தத் ‘திராவிட மாடல்' சரியான தடுப்பூசியாகி, மதவெறி, ஜாதி வெறிக் கிருமிகளை அழித்து, மதச் சார்பற்ற, சமூகநீதி, சமதர்ம, ஜனநாயகக் குடியரசின் மாண்பைக் காப்பாற்றப் போகும் பேராயுதமாகும்.

கலைஞர் நினைவு நாளில் சூளுரையாக இது அமையட்டும்!

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்.

சென்னை

7.8.2022

No comments:

Post a Comment