உயர்த்திப் பிடிப்போம் விடுதலையை ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

உயர்த்திப் பிடிப்போம் விடுதலையை !

வைகோ, ஆசிரியர் ‘சங்கொலி'

 திராவிடனே! ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய், இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால் இன்று நீ ஆண்டியாகக் கிடக்கிறாய்! வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய், பூனையைக் கண்டு அஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடிருந்த நீ இன்று செங்கை ஏந்தி, சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதின் அடிப்படையை உணர வில்லையே என்று கூறி விளக்கமும் - விழிப்பும் உண்டாக்கி வருகிறது 'விடுதலை' என்று தான் நடத்திய திராவிட நாடு ஏட்டின் தலையங்கத்தில் (27.6.1948) விடுதலைக்கு புகழாரம் சூட்டி, பெருமைப் படுத்தினார் அறிஞர் பெருந்தகை அண்ணா!

டி.ஏ.வி. நாதன், சாமி சிதம்பரனார், பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை, பூவளூர் பொன்னம்பலனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகிய அறிஞர் பெருமக்கள் ஆசிரியராக இருந்து வீறு நடைபோட வைத்த விடுதலை ஏட்டில், மூன்று ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி பெரியாரின் பெரும் பணிக்கு தோள் கொடுத்து - துணை நின்றவர் அறிஞர் அண்ணா!

இத்தகைய தனிச்சிறப்புகள் நிரம்பிய விடுதலை ஏடு, 88 ஆம் ஆண்டில் சீரிளமைத் திறனுடன் அடி எடுத்து வைத்து தன் பணியைத் தொடர்கிறது! தமிழர் தலைவர், ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆம் ஆண்டில் தொண்டறம் தொடர்கிறார்! கருஞ்சட்டை மாவீரர்களான கழகச் செயல்வீரர்கள், ‘விடுதலை’க்கு 60,000 சந்தாக்களைத் திரட்டி, இதனை இலட்சிய விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்! இதனை முன்னிட்டு ‘விடுதலை’ ஏடு சிறப்பு மலர் வெளியிடுகிறது. இவை எல்லாம் தெவிட்டாத தேனாய், நம் நெஞ்சில் இனிக்கச் செய்கின்றன. பெரியார் பெரும்படையாம், திராவிடர் கழகத்தின் திறன் மிக்க செயல்பாடுகள் திராவிடர் இயக்கத்திற்குப் பெரும்புகழ் சேர்ப்பது, நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது!

விளையாட்டுக்காக அல்ல அந்த வீர நாளேடு; வினையாற்றி, சமூகத்தை மாற்றுவதற்காகவே என்று ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் விடுதலை குறித்து குறிப்பிட்டுள்ள வாசகங்கள் திராவிட இயக்க வரலாற்றினை நினைவுகூறும் வைர வரிகள் அல்லவா? எவ்வளவு அடக்கு முறைகளை - எவ்வளவு எதிர்ப்புகளை விடுதலை ஏடு சந்தித்து எதிர்நீச்சல் அடித்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் நாம் திகைப்படைகிறோம்; வியப்படைகிறோம்!

விடுதலை அலுவலகம் சோதனை என்கிற பெயரில் அச்சுறுத்தப்பட்டதும், பெரியாரின் அண்ணன் பிணிபோக்கும் மருத்துவர், உயரிய பண்பாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களும், விடுதலை யின் முதல் ஆசிரியர். சிறந்த கல்வியாளர் டி.ஏ.வி.நாதனும் கைது செய்யப்பட்டு, விடுதலை அலுவலகத்திலிருந்து காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டதும், காவல் நிலையத்தில் லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டதும், போலீஸ் காவலுடன் காலையும் மாலையும் உணவு உண்ண உணவகத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டதும், உணவருந்த சொந்த செலவைச் செய்ய வைத்ததும், ஜாமின் தொகை கட்ட வேண்டும் என்று நிர்பந்தித்ததும், இதனைப் போலவே அன்னை மணியம்மையார் அவர்களைச் சிறையில் அடைத்ததும், அவரது காரை காவல்துறை வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று ஜப்தி செய்ததும், இப்படி எண்ணற்ற அடக்குமுறைகளை விழுப்புண்களாகப் பெற்ற வீரமிகு ஏடுதான் தமிழரின் உரிமை வாளாம் நம் விடுதலை!

அந்த ஏட்டினை 60 ஆண்டுகளாக ஆசிரியர் பொறுப்பேற்று அண்ணன் கி.வீரமணி நடத்தி வருகிறார் என்பதே சாதனைச் சரிதம் அல்லவா! அறிவாசான் பெரியார் காலத்தில் 4 பக்கங்களில் வெளிவந்த விடுதலை ஏடு, இன்று ஆசிரியர் காலத்தில் 8 பக்கங்களில், கண்கவர் வண்ணங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. வாரம் இருமுறை இதழாக ஈரோட்டிலிருந்து வெளிவந்த விடுதலை ஏடு, இன்று நாளேடாக சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் வெளிவந்து கொண் டிருக்கிறது. ஆசிரியர் பொறுப்பேற்ற 50ஆம் ஆண்டில் 50,000 சந்தாக்களைத் திரட்டியதும், இப்போது 60ஆம் ஆண்டில் 60,000 சந்தாக்களைத் திரட்டு வதும், தோழர்களின் இமாலயச் சாதனை அல்லவா!

பரபரப்பான செய்திகள், கவர்ச்சி எனும் மலிவான செய்திகள், ராசி பலன் முதலான மூடநம்பிக்கைக் கிருமிகளைப் பரப்பும் செய்திகள் என இலாப நோக்குடன் காசு பறிக்கும் தொழிலாக, கார்ப்பரேட்டுகளின் கண் ணசைவில் இயங்கும் நிறுவனங்களாக ஏடுகள் இன்று மாறிவிட்ட நிலையில், இயக்கக் கொள்கைகளைப் பரப்பிடும் ஏடுகளை நடத்துவது என்பது வழுக் குப் பாறையில் எண்ணெய் தடவிக் கொண்டு ஏறுவதைப் போன்ற இடர் நிறைந்தது ஆகும்!

‘சங்கொலி’ எனும் இலட்சிய ஏட்டினை, வெள்ளி விழாவையும் கடந்து வெளியிட்டு வரும் நாங்கள், அதில் உள்ள சிரமங்களையும், பொருளாதாரச் சிக்கலையும், நிதி நெருக்கடிகளையும் நாள்தோறும் சந்தித்து வருகிறோம். அதனையும் தாண்டி திராவிட இயக்க இலட்சியங்களை எடுத்து விளக்கும் ஏட்டினை, தொடர்ந்து நடத்துகிற மனநிறைவும் - மகிழ்ச்சியும் நாங்கள் அடைகிறோம்.

இதே உணர்வோடுதான், இலட்சங் களைப் பற்றிக் கவலைப்படாமல், இலட்சியங்களுக்காக, தமிழர் நலன் காக்கும் பாதுகாப்புக் கவசமாக விடுதலை ஏடு நாள்தோறும் வீர முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணி இறும்பூது எய்துகிறோம்!

சமூகப் புரட்சிக்கான - கருத்தியல் போருக்கான பயணத்தில் இது காகிதம் அல்ல! அறிவாயுதம்!! என்றும்,

அனைவரும் சமம், சமத்துவ சம வாய்ப்பே அதன் இலக்கு, சமூக நீதி - அதனை அடைய வழி, மானமும் அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள் என்றும், ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளது விடுதலையின் தேவையை நமக்கு எடுத்து விளக்குகிறது!

இல்லம் தோறும் விடுதலை!

நம் உள்ளம் தோறும் பெரியார்!

விடுதலையை வாங்கிப் படியுங்கள்!

விடுதலையை தாங்கிப் பிடியுங்கள்! என்னும்

வேண்டுகோளை, முழக்கமாகவே எழுப்பியுள்ளார் நம் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி! ஆசிரியரின் வேண்டுகோளை பாடமாகக் கற்போம்; ஏற்போம்!

விடுதலையை உயர்த்திப் பிடிப்போம்!

விடுதலையும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் நூறாண்டு கண்டு வாழ்க! நூறாண்டு கடந்து வாழ்க! என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பிலும், ‘சங்கொலி’ ஏட்டின் சார்பிலும் நெஞ்சம் இனிக்க வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment