பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற பாவலர் சீனி.பழனி எழுதிய ‘சிலப்பதிகாரத்தில் திட்டமிடல்' நூல் ஆய்வுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற பாவலர் சீனி.பழனி எழுதிய ‘சிலப்பதிகாரத்தில் திட்டமிடல்' நூல் ஆய்வுரை

தமிழ்நாடு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக பாவலர் சீனி.பழனி அவர்கள் எழுதிய 'சிலப் பதிகாரத்தில் திட்டமிடல்' என்னும் நூல் பற்றிய ஆய் வுரை 05.08.2022 மாலை 6.30 முதல் 8 வரை இணைய வழியாக நடைபெற்றது. 

நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று  பகுத்தறிவு கலைப்பிரிவு மாநிலச்செயலாளர் கவிஞர் மாரி.கருணாநிதி உரையாற்றினார். நிகழ்வுக்கு பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர்.வா.நேரு,பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்,பகுத்தறிவு ஊடகப்பிரிவின் தலைவர் மா.அழகிரிசாமி,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வுக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் பாவலர் சுப.முருகானந்தம் தலைமை ஏற்றார். .அவர் தனது உரையில்: திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் பெரியார் விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்ட பாவலர் சீனி.பழனி அவர்கள். இந்த நூலை எழுதி யிருக்கூடிய அய்யா சீனி..பழனி அவர்களுக்கு இது 44ஆவது நூல். ஏற்கெனவே 43 நூல்கள் எழுதிவிட்டு இந்த 'சிலப்பதிகாரத்தில் திட்டமிடல்' என்னும் புத்த கத்தை எழுதியிருக்கிறார். இவருடைய நூல்களைப் பற்றிய பட்டியலைப் பார்க்கும்போதே நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.ஏனென்றால் திருக்குறளைப் பற்றி 5 நூல்கள்,பகவத் கீதையும் திருக்குறளும் என்று ஒப் பிட்டு  10 நூல்கள் எழுதியிருக்கிறார். எல்லா நூல்களும் திராவிட இயக்க அடிப்படையைக் கொண்டவை அவ ருடைய கவிதைகள் எல்லாம் ஓட்டமாக,பாடுவதற்கு ஏற்றாற்போல் இருக்கும்.

எழுத்தாளர் மன்றம் பெருமைப்படுகிறது

சிலப்பதிகாரம் பற்றி 7 நூல்கள்,மற்றும் பல பூக்க ளைப் பற்றி எழுதியுள்ளார்.கலிங்கத்துப்பரணி போல கலைஞர் பரணி என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார்.அது போல பண்பாட்டுப்போர் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார்.சிலப்பதிகாரத்தில் திட்டமிடல் 1,சிலப்பதிகாரத்தில் திட்டமிடல் 2 என்று இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். இன்றைக்கு சிலப்பத்தி காரத்தில் திட்டமிடல் 2 என்று அந்த இரண்டாவது நூலைப்பற்றித்தான் செல்வ.மீனாட்சிசுந்தரம் பேச இருக்கிறார். அந்த வகையில் தமிழுக்கு ஒரு பெரும் கொடையாக நூல்களைக் கொடுத்த பாவலர் அய்யா சீனி.பழனி அவர்கள்.அவருடைய நூலை ஆய்வு செய்வதில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் பெருமைப் படுகிறது என்று குறிப்பிட்டு தொடர்ந்து சிறப்புரை ஆற்ற வந்திருக்கும் செல்வ.மீனாட்சி சுந்தரம் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிசம். எழுத்தராக இருந்து வங்கி மேலாளராக உயர்ந்தவர்.தன்னுடைய அறிவும் திறமையும் தமிழ்ச்சமூகத்திற்கு பயன்படுத்தவேண்டும் என்று எண்ணுபவர். எப்போதும் தந்தை பெரியார் பற்றியும்,அய்யா ஆசிரியர் அவர்கள் பற்றியும் ,இயக்கம் பற்றியும் நாங்கள் பேசி வளர்ந்த காரணத்தால், பணி ஓய்வை முன்னதாகவே பெற்றுக்கொண்டு அன்று முதல் பேசுவது, எழுதுவது என்று ஆரம்பித்து, தமிழர் தலைவர் அவர்களால் அடையாளம் காணப் பட்டு, பெரியார் திடலில் புதுமை இலக்கியத்தென்றலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் எதையும் ஆழ்ந்தும் துரிதமாகவும் பார்க்கக்கூடியவர். அவர் இன்றைக்கு இந்த நூலை அறிமுகம் செய்ய இருக் கின்றார். அவரையும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வரவேற்று பேச அழைக்கின்றேன் என்று உரையாற்றினார்.

செல்வ.மீனாட்சி சுந்தரம்

சிலப்பதிகாரத்தில் திட்டமிடல் 2. என்ற இந்த நூலுக்கு சிலப்பதிகாரத்தில் பார்ப்பனியம் எப்படி நுழைக்கப்பட்டது  என்றும் தலைப்பு கொடுக்கலாம். இந்த நூலில் என்ன பேசப்படுகிறது என்றால் தமிழ் இலக்கியத்தின் முதல் காப்பிய நூல். பெரும்பாலான தமிழர்களால் காதலிக்கப்படும் நூல் சிலப்பதிகாரம் என்பது.தமிழ்ப்பற்று இருக்கலாம் ஆனால் பக்தி இருக்கக்கூடாது. தந்தை பெரியார் சொன்னதைப் போல பகுத்து ஆராய்ந்து பார்க்கவேண்டும்.நமது இனத்தின் வரலாறு சொல்லும் காப்பியம் இது. மறுக்கவில்லை. கடவுளை, மன்னனைப் பாடுவதற்குப் பதிலாக ஒரு சாதாரண மனிதனை, வணிகனை, ஒரு பெண்ணைப் பாடிய காப்பியம் இது.ஆனால் இன்றைக்கு நம் கையிலே இருக்கின்ற சிலப்பதிகாரம் என்பது பேசுகின்ற பொருண்மை என்ன? அது கொடுக்கின்ற செய்தி என்ன என்பதை ஓர் ஆய்வு நோக்கிலே அய்யா சீனி.பழனி அவர்கள் இந்த நூலை வழங்கியுள்ளார்.ஆக சிலப்பதிகாரம் தமிழ் மரபின்படி செய்திகளைக் கொண்டுள்ளதா? அல்லது தமிழ் மரபுக்கு எதிரான செய்திகளைக் கொண்டுள்ளதா? என்பதை அவர் என்னுரையிலே விளக்குவார். 

"சிலப்பதிகாரத்திலே திட்டமிடல் என்று இதற்கு முன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். இந்த நூல் தமிழ் மரபின் வரலாற்றுப் போக்கினை முற்றாக மாற்றியமைத்த நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும். தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகள் பார்ப்பனர் களின் பக்திப் படையெடுப்புகளால்  எப்படி முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டது என்பதை விரிவாகப் பேசுகி றேன்." எந்த இலக்கியத்தை நாம் எடுத்தாலும் ,அவை அனைத்திலும் இடைச்செருகல்கள் பலவாறு உள்ளன. பழைய இலக்கியங்கள் என்று சொல்லும்போது இடைச் செருகல்கள் பல்கிப் பெருகி அந்த இலக்கியங்கள் ஊடாக நிற்கின்றன. அந்த அடிப்படைக் கோட்பாடு சிலம்புக்கும் பொருந்தும்,பொருந்தும் என்று சில காட்டுகளை எடுத்துக்கூறுகிறேன்.

இடைச்செருகல்கள் உண்டு

தமிழர் வரலாறு என்னும் நூலை அய்யா அய்யா சீனிவாச அய்யங்கார் எழுதியிருக்கிறார். இதில் தொல் காப்பியத்தில் கூட இடைச்செருகல்கள் உண்டு என்று அவர் சொல்கின்றார். அவருடைய கருத்துகளை நூலில் இருந்து படித்துக் காண்பித்தார்.வஞ்சிக்காண்டம் என்ற காண்டத்தை மற்றொருவர் எழுதிச்சேர்த்திருக் கலாம் என்று சீனிவாச அய்யங்கார் எழுதுகிறார். இதனை அருணாச்சலம் என்பவரும் ஆதரிக்கிறார். மதுரைக்காண்டத்தோடு கதை முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதற்கு மேல் கதை இல்லை. ஆனால் வஞ்சிக்காண்டம் என்பது எதற்காகச்சேர்க்கப்பட்டது?. இலக்கியத்தில், கால ஓட்டத்தில் இடைச்செருகல்கள் நிறைய நிகழ்ந்து கொண்டே வருகின்றன. இராமாய ணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களிலும் இடைச் செருகல்கள் நிறைய இருக்கின்றன என்பதற்கு ஆதா ரம் உள்ளது என்று சீனிவாச அய்யங்கார் எழுதுகிறார்.

பார்ப்பனர்களின் எதிர்காலத்திற்கான...

நமது நூல் ஆசிரியர் சீனி.பழனி அவர்கள் சிலப் பதிகாரத்தைப் பற்றிச்சொல்கிறபோது,சிலப்பதிகாரத்தில் மொத்தம் 6000 வரிகள் உள்ளன. அதில் கண்ணகியின்  கதை வெறும் 500 வரிகளில் முடிந்து விடுகின்றது. எஞ்சியுள்ள 5000க்கும் மேற்பட்ட வரிகள் பார்ப்பனர் களின் எதிர்காலத்திற்கான திட்டமிடலே என்று கூறுகின்றார். இதனை நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களைப் பற்றிக் கூறும்போது பார்ப்பனர்களைச் சிறப்பித்துக் கூறுகின்ற வரிகள் என்று 200 வரிகளைக் கோடிட்டு காட்டி,அந்த 200 வரிகளுக்கு உரை எழுத மறுத்தார் நா.மு.வேங்கடசாமி நாட்டார். என்று கூறு கின்றார்.அதைப்போல பதிற்றுப்பத்துக்கு உரை எழுத வந்த அவ்வை துரைசாமி அவர்கள், பத்து பத்து பாடல்களுக்குப் பின்வரும் பதிகத்திற்கு உரை எழுத மறுத்துவிட்டார். பதிகம் என்பது பின்னாளில் அந்த இலக்கியம் பற்றிய கருத்துரைத்தல். அதனை பதிற்றுப் பத்தோடு சேர்க்கக் கூடாது என்று சொன்னவர் அவ்வை துரைசாமி.அதாவது பதிகம் என்பது பார்ப் பனர்களால் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வரலாற்றுத் திரிபு என்று நூல் ஆசிரியர் சீனி.பழனி அவர்கள் கூறுவார்.

சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம்

அடுத்து அவர் கேட்கும் கேள்வி கேட்பவர்களுக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கும். "இந்த நூலை எழுதி யவர் இளங்கோவடிகள் தானா?" என்று கேட்கிறார். இளங்கோவடிகள் சேர நாட்டின் இளவரசரா? அவர் ஆட்சியைத் துறந்து துறவியாகப் போனவரா என்று கேள்விகளை அடுக்குகிறார். தமிழர்கள் காலம் காலமாக நம்பிக்கொண்டு இருக்கும் விசயம் இது. எவரைக் கேட்டாலும் 'நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம்' என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இதனை முதன்முதலில் கேட்டவுடன் எனக்கும் திகைப்பாகத் தான் இருந்தது. ஆனால் பின்னர் தேடிப்பார்க்க ஆரம்பித்தேன். அய்யா சீனி.பழனி அவர்கள் எழுதிய புத்தகத்திலேயே தமிழ் அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதிய 'இளங்கோவடிகள் சமயம் எது?' என்னும் ஒரு நூல். 1996-லே வெளிவந்த நூல். இதே கேள்விகளை அய்யா அ.ச.ஞானசம்பந்தனும் கேட்கின்றார். அதற் கான ஆதாரம் எது? என்று கேட்கின்றார். ஆதாரம் என்று சொல்வது 90 வரிகளைக் கொண்ட சிலப்பதி காரத்தில் உள்ள பதிகம்; "குட வாயில் கொட்டத்து அரசு துறந்திருந்த ...." என்று அந்தப் பதிகம் ஆரம்பிக் கிறது. மதுரையைச்சார்ந்த சீத்தலைச்சாத்தன் கூறியது என்று முடிகின்றது. சிலப்பதிகாரம் என்பது 2-ஆம் நூற்றாண்டிலே எழுதப்பட்ட நூல் என்பதை மிகுந்த ஆதாரங்களோடு சீனி.பழனி அவர்கள் கொடுத்திருக் கின்றார். கரிகாற்பெருவளத்தான் மகனின் திருமணம் அதிலே பேசப்படுகின்றது. அதன் மூலமாக சிலப்பதி காரம் எழுதப்பட்ட காலம் 2-ஆம் நூற்றாண்டு என் பதை நிருவுவார்.சிலப்பதிகாரத்தில் உள்ள பதிகம் எப்போது எழுதப்பட்டது என்றால்,சிலப்பதிகாரம் எழு தப்பட்ட காலத்திற்குப்பிறகு ஏறத்தாழ 500 ஆண்டு களுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பதற்கான ஆதாரங் களை அய்யா அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிடுகின்றார்.

இளங்கோவடிகள் இருந்தாரா?

மதுரை எரிகின்றது. அப்போது மதுராபுரி என்ற தெய்வம் வருகின்றது என்று பதிகத்திலே வருகின்றது. 'வெள்ளியம்பலத்திலே அந்த நல்லிரவுக் கிடந்தேன்' அப்போது கண்ணகியிடம் மதுராபுரித் தெய்வம் தோன்றி பேசியது. அதனை நான் கேட்டேன் என்று பதிகத்தில் எழுதுவார். எங்கே கேட்டாராம்... வெள்ளி யம்பலத்தில்.அந்த வெள்ளியம்பலம் என்ற சொல்லை அ.ச.ஞானசம்பந்தன் எடுத்துக் கொள்கிறார். அதைப் பற்றி விளக்கமாகச் சொல்லி, அந்த வெள்ளியம்பலம் நிகழ்வு என்பது ஏழாம் நூற்றாண்டிலே நடந்த சம்பவம் என்று அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிடுகின்றார். எனவே 500 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட பதிகத்தில் தான் இளங்கோவடிகள் வருகின்றார். எனவே இளங் கோவடிகள் என்று ஒருவர் இருந்தாரா? என்னும் கேள்வி மிகச்சரியான கேள்வி.

சேரன் செங்குட்டுவன்

'வரன் தரும் 'காதையிலே 170ஆவது அடியிலிருந்து 184ஆவது அடிவரை உள்ள பாடல்களை இன்னொரு ஆதாரமாக சிலப்பதிகாரத்திலே காட்டுகின்றார்கள். அதில் கண்ணகிக்கு கோட்டம் கட்டப்படுகின்றது. சேரன் செங்குட்டுவன் அங்கு வருகின்றார். தேவந்தி என்பவர் அங்கு பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனத்தி. "வேள்விச்சாலை வேந்தன் போந்த பின் யானும் சென்றேன் "  என்று சொல்கின்றார். கண்ணகி தெய்வம் மேல் தேவந்தி ஏறி சோஷ்யம் சொன்னது.. அப்போது அவர் சொல்வதாக இளங் கோவடிகளைப் பற்றிய செய்தியும்,அவர் அரச குமார ராக இருந்ததாகவும், துறவியாகவும் மாறியதாகவும் சொன்ன கதை வருகின்றது. இளங்கோவடிகளே, தன்னைப் பற்றி எழுதியதாக வருகிறது. காப்பியங்களில் பொதுவாக எழுதும் ஆசிரியர்கள் தன்னைப் பற்றி எழுதியதாக இல்லை.ஆனால் இந்த இடத்தில் தன் புகழைத் தானே பாடுகின்ற ஒரு இழிவான நிலை இளங் கோவடிகளுக்கு வந்து விட்டது என்று அ.ச.ஞான சம்பந்தன் எழுதுகின்றார். 

காப்பிய வளர்ச்சிக்கு ஒன்றும் உதவாத பகுதி

பதிகம் எழுதியவர் வரன் தரும் காதையிலே போய் இடைச்செருகல் செய்துவிட்டார் என்று அய்யா அ.ச.ஞானசம்பந்தன் எழுதுகின்றார். 'வேட்டுவ வரி ' என்னும் பகுதியை காப்பிய வளர்ச்சிக்கு ஒன்றும் உத வாத பகுதி என்று எழுதுகின்றார்.அதில் கொற்றவைத் தெய்வத்தைப் பற்றி புகழ்ந்து பாடும் பாடல்கள் பல உண்டு. அதிலே 32 எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டுவார்.'சரஸ்கர நாமம்' என்னும் சமஸ்கிருப்பாட்டில் நேரடி மொழியாக்கம் செய்யப்பட்ட சொற்களை எல்லாம் 32 இடங்களிலே எடுத்துக்காட்டுகிறார். இது எப்படி சாத்தியமாகும் ? அப்படியே மொழியாக்கம் செய்யப்பட்டு, பாடல்களுக்கு இடையே சொருகப் பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்.இப்படி சொருகி, சொருகித்தான் 500 வரிகளிலே முடிய வேண்டிய கண்ணகி காப்பியம் 6000 வரிகளாக ஆக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்.பார்ப்பனக்கருத்துகள் எப்படி உள்ளே சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத்தான் இந்த நூலாசிரியர் அய்யா சீனி.பழனி அவர்கள் செய்திருக் கின்றார்.

இளங்கோ சமண மதத்தவர் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்பட்டிருக்கின் றோம். ஆனால் சிலப்பதிகாரத்தில் 89 இடங்களில் திருமால் போற்றிப்புகழப்படுவதாக அ.ச.ஞானசம் பந்தன் சொல்கின்றார். சமணக்கடவுளான அருகன் 59 இடங்களில்தான் போற்றிப்புகழப்படுகின்றார்.சிவன் 36 இடங்களில், முருகன் 21 இடங்களில் போற்றிப் புகழப்படுகின்றனர். இது சமண நூல் என்று சொல்வ தற்கு இல்லை.

திட்டமிட்டு நுழைக்கப்பட்டிருக்கிறது

அய்யா சீனி.பழனி அவர்கள் பார்ப்பனக் கருத்துகள் எல்லாம் எப்படி திட்டமிட்டு சிலப்பதிகாரத்திற்குள்  நுழைக்கப்பட்டது என்பதை பல தலைப்புகளில் பேசு கின்றார். முக்கியமாக 5 இடங்களில் பார்ப்பனக் கருத் தாங்கங்கள் நுழைக்கப்பட்டிருக்கிறது என்று கூறு கின்றார். 5 மன்றங்கள் உண்டு. 1.வெள்ளிடை மன்றம். 2.இலஞ்சி மன்றம். 3.நெடுங்கண் மன்றம் 4.பூதச்சதுக்கம். 5. பாவை மன்றம் (ஒவ்வொன்றிலும் எப்படி பார்ப்பனக் கருத்துகள் புகுத்தப்படிருக்கிறது என்பதை விளக் கினார்) முசுகுந்தச்சோழன் என்று ஒரு அரசன் ஆண்ட தாக வருகின்றது. இந்திரன் வருகின்றான். வரலாற்றில் முசுகுந்தச்சோழன் என்று எந்தக் குறிப்பிலும் இல்லை. அது புராணத்தில் மட்டுமே இருக்கிறது. பார்ப்பனியக் கருத்த்தாக்கம்தான் இது..." என்பது உள்ளிட்ட நூலில் உள்ள  பல்வேறு கருத்துகளை எடுத்து வைத்து பார்ப் பனியம் எப்படி புகுத்தப்பட்டிருக்கிறது சிலப்பதிகாரத் தின் வழியாக என்று மிகச்சிறப்பாக உரையாற்றினார்.

 ஏற்புரை

தொடர்ந்து நூலின் ஆசிரியர் பாவலர். சீனி.பழனி அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.அவர் தனது உரையில்:

என்னை இந்த மாதிரி பொது வெளியில் மனம் விட்டுப் பாராட்டியது உங்கள் நிகழ்வுதான். எல்லோரும் எதிர்ப்புதான் தெரிவித்தார்கள். இது எல்லோருக்கும் தெரியும். இதுவரை என்னை யாரும் பாராட்டிப் பேசியது கிடையாது. எல்லோரும் என்ன சொல் கின்றார்கள் என்றால் "ஞாயிறு போற்றுதும்,திங்களைப் போற்றுதும்" என்று சொல்லி இதில் பார்ப்பனியக் கருத்து இல்லை என்று சொல்வார்கள்.அது தப்பு.பார்ப் பனர்கள் எந்தக் காப்பியம் எழுதினாலும் சந்திரனைப் பாடிவிட்டுத்தான் அந்தக் காப்பியத்தைத் தொடங்கு வார்கள். பிள்ளையார் சுழி போடுவது போல அவர் களுக்கு சந்திரனைப் பாடுவது தொடக்கம். அதைப் போல சூரியனையும் பாடிவிட்டுத்தான் உள்ளே போவார்கள்.'விஷ்ணு சகஸ்கர நாமம் ' என்று ஒன்று வருகிறது அல்லவா, அதில் சசி வர்ணம் என்று வரும்.சசி என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனை வணங்குகிறேன் என்று தான் அந்தப்பாடல் வரும்.எனக்கு சமஸ்கிருதன் நன்றாகத் தெரியும். சமஸ் கிருதத்தில் படித்துத்தான் நான் புரிந்து கொள்கின்றேன். 'சவுந்தர்லய லகிரி 'ஓரளவு எனக்குத் தெரியும்.முதலில் பார்ப்பனியத்தில்தான் மூழ்கிக் கிடந்து,சிவ பூசை எல்லாம் செய்து கொண்டிருந்தவன் நான்.அதனால் தான் ஆழமாக பார்ப்பனர்கள் நம்மை எப்படி ஏமாத் துகிறான் என்பதும், எப்படி நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதும் தெரியும்.நம்மை இப்படிப் பழக்கிவிட்டு, கோயில் என்று திரிகின்றோமே என்று நான் தெரிந்து கொள்வதற்கு ஒரு திருப்புமுனை வாய்த்தது. 

பார்ப்பனியச் சதியை நாம் உணர வேண்டும்

பார்ப்பனர்கள் எதை எழுதினாலும் சமஸ்கிருதத்தில் சூரியனை, சந்திரனை வாழ்த்திவிட்டுத் தான் ஆரம்பிப் பார்கள். எனவேதான் இதனை இளங்கோவடிகள் எழுதவில்லை என்று சொல்கின்றோம். பதிற்றுப்பத்தில் பார்த்தால்,யார் யார் யார் யாருக்குப் பிள்ளைகள் என்பதெல்லாம் எழுதியிருக்கும். அதில் இளங்கோவடிகள் பற்றி எல்லாம் வராது. 58 வருடம் சேரலாதன் இருந்தான், அதற்குப்பிறகு செங்குட்டவன் இத்தனை வருடம் இருந்தான் என்று 5ஆம் பதிகத் திலும் 6ஆம் பதிகத்திலும் இருக்கும்.இளங்கோவடிகள் பற்றி  அதில் இல்லை. இதற்காகவே பதிகத்தை உரு வாக்குகிறான். பார்ப்பனியச்சதியை நாம் உணர வேண்டும். சிலப்பதிகாரத்தில் இடைச்செருகல் எல்லாம் செய்து வைத்து விட்டு பதிகம் எழுதுகிறான். 2-ஆம் நூற்றாண்டு சமய பரப்புரை காலம்.எல்லா சமயமும் பரப்பப்பட்ட காலம். யாரோ ஒருவர் சிலப் பதிகாரத்தை எழுதிவிட்டார்.அதனைப் பார்ப்பனர்கள் கைப்பற்றி இடைச்செருகல்கள் செய்திருக்கிறார்கள். இரட்டைக் காப்பியம் என்று மணிமேகலையைச் சொல்கிறார்கள். மணிமேகலையையும் சிலப்பதிகா ரத்தையும் சரியாக அவர்களுக்கு இணைக்கத் தெரிய வில்லை. அதனால் மாதவிக்கு ஒரு மகள் இருந்தாள் என்று சொல்லி அதைக் கொண்டுபோய் மணிமேகலை காப்பியத்தின் ஆரம்பத்தில், கோவலன் என்ற சொல் கூட அங்கு வராது. மாதவி மணிமேகலையின் அம்மா என்றுதான் அங்கு போகும்.. ஏனென்றால் இதற்கு முன்பே எழுதப்பட்ட காப்பியம் மணிமேகலை. அது புத்தமதம் சார்ந்தது.கண்ணகியைப் பார்ப்பனியம் கைப்பற்றி இரண்டையும் இணைக்க சில உத்திகள் பார்ப்பனர்கள் செய்கின்றனர். பதிற்றுப்பத்து என்பது 500 ஆண்டுகால வரலாறு. 50 அரசர்களைப் பற்றிய வரலாறு. வெவ்வேறு புலவர்கள் பாடிய வரலாறு. அதனால்தான் ஔவை துரைசாமி அவர்களுக்கு பதிற்றுப்பத்து பாடல்கள் கட்டு தனியாக அவருக்கு வந்ததாம். அதற்கான பொருள் பற்றிய கட்டு தனியாக வந்ததாம். அந்தப்பொருள் எழுதிய கட்டுவில்தான் இந்தப்பதிகம் இருந்ததாம். அதனால்தான் நான் ஒதுக்கிவைத்து விட்டேன்.பதிற்றுப்பத்து உண்மையாக வந்த சுவடிகளுக்கு நான் பொருள் எழுதிவிட்டேன் என்று அவரே சொன்னார். 

சிலப்பதிகாரத்தை பார்ப்பனியம் கைப்பற்றிவிட்டு ,அதனை முன்னிறுத்தவேண்டும் என்பதற்காகவும், மணிமேகலையை கொச்சைப்படுத்துவதற்காக, அவர் யார் என்றால் மாதவி என்னும் கணிகையின் மகள் என்று சொல்வதற்காகவும் இரட்டைக் காப்பியங்கள் என்று பார்ப்பனர்கள் இணைத்திருக்கிறார்கள்.

"மாமுதுப்பார்ப்பான் மறைவழி காட்டிட"

அதைப்போல பார்ப்பன சடங்கு முறைகளைக் கொண்டு வந்து கொடுக்கவேண்டும், அதற்காக பதிகத்தில், செத்து 14 நாள் கழித்து ஆகாயத்தில் இருந்து கோவலன் வருவார் என்று சொல்கின்றான்.அதுதான் பிற்காலத்தில் கருமாதி என்று சொல்லி காசு பார்க்கிறான்.திருமணத்தை "மாமுதுப்பார்ப்பான் மறைவழி காட் டிட" என்று  பார்ப்பனரை வைத்து சடங்குகள் செய்து செய்வதாகக் காட்டுகிறான். இன்றைக்கு நாம் அந்தப்பார்ப்பனரை வைத்து திருமணம் செய்வது என்று அடிமையாகி விட்டோமே? பார்ப்பனர் உரு வத்தில் இந்திரன் கண்ணகியிடம் வந்து பேசுவதாகக் காட்டுகிறான்.அப்படி வரும்போது இந்திரன் பூணூல் போட்டு நிற்கிறான். கண்ணகி நம் புருசன் மாதிரி இல்லையே என்று பார்க்கிறாள். "வானோர் வடிவில்"  என்று சொல்லி இரண்டு வரிகளைச்சேர்க்கின்றான். இதெல்லாம் எப்படி பார்ப்பனியம் சிலப்பதிகாரத்தின் வழியாகப் புகுந்திருக்கிறது என்பதை நம்மை உணரச்செய்யும். என்று சொல்லி இவ்வளவு பேர் வந்து இந்தக் கருத்துகளை கேட்டதற்கு மிக்க நன்றி. இந்தக் கருத்தை நான் சொன்னபோது 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் 'என்று பாரதியார் எழுதியிருக்கிறார், அவரை விட நீ பெரிய ஆளா என்று சொல்லி என்னை வசை மாறி பொழிந்தார்கள்.எனவே எனது 5ஆவது தொகுதியின் கடைசியில்,வந்த எதிர்ப்பைச்சொல்லி, வாசகர்களே, நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று எழுதியிருப்பேன். என்னை அங்கீகாரம் கொடுத்து, இந்த நிகழ்வில் இந்தப்புத்தகத்தை எடுத்து ஆய்வுரை செய்தமைக்கு மிக்க நன்றி பாராட்டுகிறேன் என்று நெகிழ்வாகச்சொல்லி நூல் ஆசிரியர் சீனி.பழனி அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

இறுதியில்  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் ம.கவிதா அவர்கள். "ஒரு பயிற்சிப்பட்டறை போல இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. சிலம்பில் பின்னப்பட்ட சூழ்ச்சிகள் எல்லாம் இன்றைக்கு உடை பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டு நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment