‘விடுதலை’யில் தந்தை பெரியாருடைய உரைகள் என்று சொன்னால் அது வைதீகத்திற்கு மட்டும் வெடிகுண்டு அல்ல - ஆதிக்க புரியே அலறக்கூடிய அளவிற்கு இருக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

‘விடுதலை’யில் தந்தை பெரியாருடைய உரைகள் என்று சொன்னால் அது வைதீகத்திற்கு மட்டும் வெடிகுண்டு அல்ல - ஆதிக்க புரியே அலறக்கூடிய அளவிற்கு இருக்கும்!

வரலாற்றை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியரின் காணொலி உரை

சென்னை, ஆக.5 ‘‘‘விடுதலை’யில் தந்தை பெரியாரு டைய உரைகள் என்று சொன்னால், அது வைதீகத்திற்கு மட்டும் வெடிகுண்டு அல்ல - ஆதிக்க புரியே அலறக் கூடிய அளவிற்கு இருக்கும்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்..

விடுதலையின் எதிர்நீச்சல் - காணொலி சிறப்புக் கூட்டம்-2

கடந்த 26.7.2022 அன்று மாலை 'விடுதலையின் எதிர்நீச்சல்’ என்ற தலைப்பில் காணொலிமூலம் நடைபெற்ற இரண்டாம் நாள் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழக செயலவைத்  தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்; திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

‘விடுதலை' வீழ்ந்தால், 

எவரே வாழ்வர்? 

‘விடுதலை' வாழ்ந்தால், 

எவரே வீழ்வர்?

மிக சிறப்போடு எழுச்சியோடு இந்தக் கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. விடுதலை யின் வீர வரலாறு, எதிர்நீச்சல், அது பெற்ற விழுப் புண்கள் - இவற்றையெல்லாம் நினைவூட்டிடும் நிலையில், விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வர்? விடுதலை வாழ்ந்தால், எவரே வீழ்வர்? என்பது அந்த சிறப்பான தத்துவமாகும். இன்றைய கால கட்டத்திலே முன் எப்போதும் தேவைப்பட்டதை விட, இப்பொழுது அதிகமாக பெரியார் தேவைப் படுகிறார்.

பெரியாருடைய அறிவாயுதமாக இருக்கக்கூடிய விடுதலையினுடைய பணி தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தவே இந்த இரண்டு நாள் ஆய்வுச் சொற்பொழிவுகள்.

நேற்று (25.7.2022) சிறப்பான வகையில், விடுதலை சந்தித்த பல சோதனைகளைப்பற்றி நம்முடைய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்கள் விளக்கமாக சொன்னார்கள்.

நாள் தவறாமல் 'விடுதலை'யை படித்தவர் சுப்பிரமணியம்

இன்றைக்கு அதேபோல, செயலவைத் தலைவர் - விடுதலையினுடைய நீண்ட கால வாசகராக இருக்கக் கூடியவர்; அவர் மட்டுமல்ல, பாரம்பரியமாக அவரு டைய தந்தையார் திரு.சுப்பிரமணியம் அவர்கள் நாள் தவறாமல் விடுதலையைப் படிக்கக் கூடியவர். படித்து முடித்தது மட்டுமல்ல, அதைப் படித்தவுடன், அந்த நாளிதழை நான்காக மடித்து வைத்திருக்கிற அழகு எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.

தலையங்கத்தில் என்ன கருத்து என்பதை மேலே எழுதி வைத்திருப்பார். தேதி வாரியாக குறித்து வைத் திருப்பார். அடுக்கி வைத்திருப்பார்.

இன்னின்ன கருத்துகள் என்று நம்மிடத்திலே விளக்கமாக சொல்வார். ஆசிரியர் குருசாமி அப்பொழுது தலையங்கம் எழுதியவர்.

விடுதலையினுடைய தலையங்கம் என்று சொன் னால், பலருக்கு அலறலைத் தரக்கூடிய தலையங்கமாக இருந்து வந்தது.

வைதீகத்திற்கு மட்டும் வெடிகுண்டு அல்ல - ஆதிக்க புரியே அலறும்!

‘விடுதலை’யில் தந்தை பெரியாருடைய உரைகள் என்று சொன்னால், அது வைதீகத்திற்கு மட்டும் வெடிகுண்டு அல்ல - ஆதிக்க புரியே அலறக்கூடிய அளவிற்கு இருக்கும் என்ற வரலாறு படைத்திருக்கின்ற இந்த ‘விடுதலை’, மற்ற எந்த ஏடுகளுக்கும், இந்திய அளவிலும் சரி, ஏன் உலக அளவிலும் சரி சிலர் நினைக்கலாம் ஏதோ தற் பெருமையாகக் கூறுகிறேன் என்று - தற்பெருமை அல்ல - வரலாற்றில் மறைக்கப்பட்டு இருக்கிற உண்மை.

இன்னும்கேட்டால், நியாயமாகப் பெறவேண்டிய வெளிச்சம் அதற்குக் கிடைக்கவில்லை என்பதுதான் நம்முடைய நியாயமான வருத்தமாகும்.

ஒரு நாளேடு, 88 ஆண்டுகாலம் நடந்துகொண்டிருக் கின்ற நாளேடு - கொள்கைப்பூர்வமாக இருக்கக்கூடிய ஒரு நாளேடு - விளம்பர வருவாயைப்பற்றி கவலைப் படாத ஒரு நாளேடு - மக்கள் பின்னால் சென்று, மக்களுக்கு எது ருசிக்கிறதோ, அதைச் சொல்லாமல், மக்களுக்கு எது கசக்கிறதோ, அந்தக் கருத்துகள் - சமூக நலத்திற்குத் தேவையான மாமருந் துகள் என்பதற்காக - விடாப்பிடியாக ஒரு தாய் எப்படி தன்னுடைய குழந்தைக்கு வலுக்கட்டாயமாகக் கூட சில நேரங்களில் அதைக் கொடுப்பார்களோ, அந்த உணர்வோடு செய்யக்கூடிய ஒரு பணியை, ‘விடுதலை’ தாய்மை நிலையில் இருந்துகொண்டு, இந்த சமுதாயத் திற்கு ஊட்டி வருகின்றது - பாலூட்டி வருகின்றது - அறிவுப் பாலூட்டி வருகின்றது - பகுத்தறிவு பாலூட்டி 

வருகின்றது.

அப்படிப்பட்ட இந்த ‘விடுதலை’ என்பது - அதனுடைய எதிர்நீச்சல் சாதாரணமானதல்ல. இங்கே பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் அழகாகச் சொன்னார். எதிர்நீச்சல்களிலேயே பலவகை உண்டு. இந்த எதிர்நீச்சல் என்பது மிக ஆழமானது.

‘‘நான் ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டேன்!’’

நெருக்கடி காலத்தில், கலைஞர் அவர்கள் முதலமைச்சர் பதவியை இழந்த நேரத்தில், செய்தி யாளர்கள் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள்.

நீங்கள் முதலமைச்சர் பதவியை இழந்தது தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதால் தானே? என்று.

பளிச்சென்று கலைஞர் அவர்கள் அதற்குப் பதில் சொன்னார் - ஈரோட்டுக் குருகுலத்தில் பயின்ற காரணத்தினால்.

‘‘நான் ஈரோடு போனவன்; எனவே, நீரோடு போகமாட்டேன்’’ என்று சொன்னார்.

ஈரோடு போனவர்கள் யாரும், நீரோடு போகமாட்டார்கள். நீரிலே நீச்சலடிப்பது, நீர்ப் போக்கிலே செல்வதற்கு, நீச்சலே தேவையில்லை. நீரே இழுத்துக்கொண்டு போகும்.

ஆனால், எதிர்நீச்சல் போடுவதுதான் தனிச் சிறப்பு. அது எதிர்நீச்சலுக்காக அல்ல - இலக்கை அடைய வேண்டும். இடையில் எத்தனை முதலைகள் - இடையில் எத்தனை சுழல்கள் - இவற்றையெல்லாம் தாண்டிக் கடக்கவேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே, இந்தப் பணி.

88 ஆண்டுகால ‘விடுதலை’ வரலாற்றில், இத்தனை ஜாமீன்கள் கேட்டு, அளித்து, அதைத் தொடர்கின்ற ஒரு நாளேடு - அதுவும் கொள்கை நாளேடு வேறு உண்டா?

மேலை நாடுகளை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கவேண் டாம் - இந்தியாவில் உண்டா? என்றால், கிடையாது.

இதுவே மற்றவர்கள் செய்திருந்தால், அதற்கு மிகப் பெரிய அளவிற்கு தங்கக் கோப்பை வழங்கவேண்டும் என்று சொல்லியிருப்பார்கள்.

இது நான்காவது தூண் ஜனநாயகத்திற்கு.

‘விடுதலை’யைத் தவிர வேறு எந்த ஏடு இருக்க முடியும்?

நான்காவது தூணாக இருக்கக்கூடிய  பத்திரிகை உலகத்திலே, ஊடக உலகத்திலே, இவ்வளவு பெரிய எதிர்நீச்சல் அடித்த ஏடு ‘விடுதலை’யைத் தவிர வேறு எந்த ஏடு இருக்க முடியும்?

எத்தனை விழுப்புண்கள்?

எத்தனை அடக்குமுறை அம்புகள்!

இவற்றையெல்லாம் ‘விடுதலை’ சந்தித்திருக்கிறது. அதுவும் மார்பிலே ஏந்தியிருக்கிறது. மார்பிலே ஏந் துவதற்காகத்தான் இந்த தினசரியைக் கொண்டு வந்திருக்கின்றோம் என்று தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக விளக்கமாக சொல்கிறார்.

வாளோடு பிறந்த இனம் என்று பெருமையாக சொல்வது உண்டு தமிழினத்தை. அது வாளோடு பிறந்தார்களா? இல்லையா? கற்பனையா? அல்லது விளக்கமா? அல்லது அதீதமா? என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.

ஏடு தொடங்கும்போதே ஜாமீன் கட்டுங்கள் என்றனர்!

அதுபோன்று, பிறக்கும்பொழுதே ஒரு ஏடு - ஆயிரம் ரூபாய் ஜாமீன் கட்டுங்கள்; வெளியீட்டாளருக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டுங்கள். 2 ஆயிரம் ரூபாய் ஜாமீன் கட்டிவிட்டுத்தான், நீங்கள்  பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று சொன்னார்கள்.

1937 இல் ஈரோட்டிலிருந்து ‘விடுதலை’யைத் தொடங் குகின்ற நேரத்தில், அப்பொழுது இருக்கின்ற ஆட்சித் தலைவர் உத்தரவு போடுகிறார்.

இதுவரையில் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ஒரு பத்திரிகையின் டிக்ளரேசன் வாங்குகிற நேரத் தில், அந்தப் பத்திரிகையைப் பதிவு செய்து, அதற்கு அனுமதி கொடுக்கின்ற நேரத்தில், ஜாமீன் கட்டி அந்தப் பத்திரிகை வந்திருக்கிறதா? என்று கேட்டால், ஏற்கெ னவே அது சென்னையில் கட்டப்பட்டது ஆகவே, இங் கேயும் நீங்கள் கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒருமுறை அல்ல - மறுபடியும் 2 ஆயிரம் ரூபாய் - இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய்.

இந்தக் காலகட்டத்தில், பகுத்தறிவு ஏடுகளான ‘குடிஅரசு’, ‘விடுதலை’ இதழ்களுக்காக மறுபடியும் ஜாமீன் கட்டுகிறார்கள், இரண்டாண்டு காலத்தில்.

1937 இல் ஒருமுறை; 1939 ஆம் ஆண்டு மறுமுறை; 1943 இல், 1946 இல்.

இப்படியெல்லாம், வழக்குத் தொடுத்தபொழுதுகூட, அந்த வழக்கில் நியாயங்கள் கிடையாது.

எனக்குத் தெரிந்தே அந்தக் காலங்களில் என்னைப் போன்றவர்கள் குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அல்லது பிறந்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்திலே 10 ஆயிரம் ரூபாய்  ஜாமீன் என்று சொல்லுகின்ற நேரத்தில் நடந்தது என்ன?

வெள்ளித் தோட்டாவை அள்ளி வீசுங்கள்!

மிகத் தெளிவாக வெள்ளித் தோட்டாவை அள்ளி வீசுங்கள் என்று அந்தக் காலத்தில் ‘விடுதலை’யில் பெட்டிச் செய்திகள் வரும்.

அதேபோன்று, அண்ணாவினுடைய ‘திராவிட நாடு’ பத்திரிகைக்கும் ஜாமீன் கேட்டார்கள்.

இப்படி நம்முடைய ஏடுகள் என்று சொன்னால், ‘விடுதலை’ பள்ளம் தாண்டித் தாண்டி, தாண்டி அதையும் தாண்டிதான் வந்திருக்கிறது.

இப்படி ஒரு ஏடு என்று சொல்லுகின்ற நேரத்தில் நண்பர்களே, ஜாமீன், அவர் சொன்னதுபோல, சோதனை, வழக்குகள், தடைகள் மற்றும் இதழ்கள் பறிமுதல் எல்லாவற்றிற்கும் மேலாக, கடுமையான பிரிவு களின் மூலமாக குற்றவியல் அடிப்படையிலேயே சிறைத் தண்டனை ஆறுமாதம் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை.

ஆரியம் பின்னாலிருந்து அத்தனையும் செய்தது!

தேசத் துரோகம் (124 ஏ), வகுப்புத் துவேஷம் (153) என்று வேட்டை நாய்களை அவிழ்த்துவிட்டால் அது எப்படிப் பாயுமோ, அதுபோல, அதிகாரத்தி னுடைய அந்த சட்டத்திலிருந்து ஆரியம் பின்னால் இருந்து அத்தனையும் செய்தது. ‘விடுதலை’ வரக்கூடாது என்பதற்காகத்தான் இதனையெல் லாம் செய்தார்கள்.

நேற்று நம்முடைய கவிஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் - இந்த ‘விடுதலை’க்குத் தனி சிறப்பு என்ன என்பதைப்பற்றி அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

நான் பொறுப்பேற்றவுடன், அய்யா அவர்களுடைய பிறந்த நாள் மலரை அச்சிடுகின்ற நேரத்தில், ஆச்சாரியார் அவர்களிடம் சென்று, நேரிடையாக ஒரு கடிதம் கொடுத்து, வாழ்த்து கேட்டோம்.

ஒரு போஸ்ட் கார்டு வந்தது. மிகச் சிக்கனமாக - அதில்,

‘‘பெரியாரும், ‘விடுதலை’யும் என்னுடைய அன் பார்ந்த எதிரிகள்!’’ என்றிருந்தது.

அதுதான் ‘விடுதலை’யினுடைய வரலாற்றிலேயே சிறப்பான பகுதி. ஏனென்றால், யார் எதிரிகள்? யார் நண்பர்கள்? என்பதை அடையாளப்படுத்துகின்ற நேரத்திலே, கொள்கைத் தெளிவு இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் - விரோதமல்ல.

தனிப்பட்ட முறையில் அவர்கள் எப்படி பழகுவார்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

நட்பில் சமரசம் உண்டு; கொள்கையில் சமரசம் கிடையாது!

கொள்கையை விடாமல், நட்பில் சமரசம் உண்டு; கொள்கையில் சமரசம் கிடையாது என்ற ஒரு தெளி வோடு ‘விடுதலை’ ஏடு இத்தனைக் காலகட்டங்களையும் தாண்டி நடந்திருக்கிறது.

ஒரு செய்தியை சொல்கிறார், இவ்வளவு வசதி படைத்த தந்தை பெரியார் அவர்கள், ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டு, இவ்வளவு நட்டத்தை ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் உறுதியளித்தபடி நடக்காத காலகட்டத்தைத் தாண்டிய பிற்பாடுகூட, ஒரு செய்தி வருகிறது -

2 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டி இருக்கிறது - அன்றைக்கு 2 ஆயிரம் ரூபாய் என்பது இன்றைக்கு 2 கோடி ரூபாய்க்கும்மேல்.

2 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டி இருப்பதால், தொடர்ந்து நடத்த முடியாமையால் நிறுத்தப்படுகிறது தற்காலிகமாக.

இந்தக் கருத்து பரவாமல் இருப்பதற்காக, ஆரியம் நேரிடையாக இல்லாமல், அது எந்தெந்த ரூபத்திலே உள்ளே நுழைந்து, எப்படி எப்படியெல்லாம் அவதாரங் கள் எடுத்துக்கொண்டு அதைச் செய்தது என்பதை எண் ணிப்பார்க்கும்பொழுதுதான், எவ்வளவு பெரிய வியப்பு!

யார் நம்பிக்கைக்கு உரியவர்களோ, அவர்களை அழைத்து....

பெரியார் அவர்களுடைய சகோதரர்கள், அவரு டைய பெயராலே வைத்திருக்கிறார். ஏனென்றால், பெரியார் அவர்களுக்குக் கட்டுப்பாடு உள்ளவர்கள், தியாகம் செய்யக்கூடியவர்கள் இதைவிட்டு விட்டு ஓடிவிடக் கூடாது என்பதற்காக, யார் நம்பிக்கைக்கு உரியவர்களோ, அவர்களை அழைத்து, ஈ.வெ.கிருஷ்ண சாமி அவர்கள் (சம்பத் அவர்களுடைய தந்தையார், இன்றைய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுடைய பாட்டனார்) அவருடைய பெயராலே - அதேபோன்று, கண்ணம்மா அவர்கள்.

பெரியாருடைய குடும்பம் எவ்வளவு பாடுபட்டு இருக்கிறது. குடும்ப அரசியல் என்று சொல்கின்ற, அந்த மகாமகா அறிவாளிகள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும். வெறும் அரசியலா? எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள்மீது வழக்கு.

பண்டித முத்துசாமி பிள்ளை

பண்டித முத்துசாமி பிள்ளை அவர்கள் ஆசிரியராக வந்திருக்கிறார். பெரிய புலவர் - வயதானவர். ஷய ரோகத்தில் இருந்தவர்.

காலையில் போராட்டம் செய்துவிட்டு, மாலையில் வேறு நிகழ்ச்சிக்குப் போகலாம் என்று இப்பொழுது வருகிறார்களே, போராட்டத்திற்கு - இதுதான் கால கட்டமா?

எவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கின்றன என்கிற விவரங்கள் எல்லாம் ‘விடுதலை’யில் பெட்டிச் செய்தி யாக வெளிவந்திருக்கின்றன.

போராட்டம் நடத்துபவர்களை அழைத்துச் செல் வதற்கு வாகனங்கள் கிடையாது. உங்கள் செலவிலேதான் கொண்டு போகவேண்டும்; ஈரோட்டிலிருந்து கோயம் புத்தூருக்குப் போகவேண்டும் என்றால். வயதானவர்கள், அவர்களுடைய பெட்டியை அவர்களேதான் தூக்க வேண்டும்; இந்த விவரங்களை உள்ளடக்கிய கட்டுரை கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இப்படி கொடுமைகள், சிறுமைகள் அத்தனையும் நடந்துகொண்டிருக்கக் கூடிய அந்தக் காலகட்டத்தில், இதையெல்லாம் தாண்டி, ஆசிரியர்களுக்கு, வெளியிடு கிறவர்களுக்கு என்ற அளவிற்கு, பல இக்கட்டான வாய்ப்புகளையெல்லாம் தாண்டி இருக்கிறது என்று சொன்னால், இது சாதாரணமா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

தண்டனை அடைந்து சிறைச்சாலையில் இருக் கிறார்கள்; தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த பிற்பாடும், கொள்கையை அவர்கள் தியாகம் செய் வதற்குத் தயாராக இல்லை. அதைத்தான் நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.      (தொடரும்)


No comments:

Post a Comment