நாடாளுமன்றச் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

நாடாளுமன்றச் செய்திகள்

தமிழ்நாட்டில் புதிய ரயில் சேவை இல்லையாம் ஒன்றிய அரசு கைவிரிப்பு

புதுடில்லி, ஆக.6- தமிழ்நாட்டில் புதிய ரயில் சேவை களை மேற்கொள்வது குறித்து இந்  திய ரயில்வே ஒரு தொடர் செயல் முறையைப் பின்பற்றிவருகிறது என்றும்  புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தும் உடனடி முன் மொழிவுகள், தற்போது அரசிடம் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மக்க ளவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு ஒன்றிய  ரயில்வே அமைச்சர் பதிலளித்தார். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர்.நடராஜன், கோயம்புத்தூர் - பெங்களூரு - கோயம்புத்தூர் இடையேயும் மற்றும் கோயம் புத்தூரிலிருந்து நாகர்கோவிலுக்கும், போத் தனூர்- பொள்ளாச்சி மற்றும் மதுரை வழியாகவும்,  இரவு நேர ரயில் சேவைகளை, சேலம் ரயில்வே கோட்டத்தில் அறிமுகப்படுத்துதல் என்பது அரசின் பரிசீலனையில் உள்ளதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,  “கோயம்புத்தூரிலிருந்து பெங்களூ ருக்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து நாகர் கோவிலுக்கும், போதனூர்- பொள்ளாச்சி மற்றும் மதுரை வழியாகவும் இரவு நேர  புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தும் உடனடி முன் மொழிவுகள், தற்போது அரசிடம் இல்லை. எனினும், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருக்கு இடையே இரவு நேர தொடர்பினை மூன்று ரயில் சேவைகள் வழங்குகின்றன. அது போலவே, கோயம்புத்தூர் - நாகர்கோவில் பிரிவு (ஈரோடு வழி) ரயில் சேவை, 8 இணையான சேவைகள் மூலம் அளிக்கப்படுகிறது. இது தவிர, போக்கு வரத்து செயல்பாட்டு சாத்தியம், போக்குவரத்து முறை, வளங்கள் கிடைப்பளவு முதலானவற்றை பொறுத்து, புதிய ரயில்கள் அறிமுகம் என்பது, ஒரு தொடர் செயல்  முறையாக இந்திய ரயில் வேயில் உள்ளது” என்று அமைச்சர் பதிலளித்தார்.

ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு - மோடியின் வாய்ச்சவடால்நாடு முழுவதும் 1472 அய்ஏஎஸ், 864 அய்பிஎஸ் பணியிடங்கள் காலி

புதுடில்லி, ஆக.6 நாடு முழுவதும் 1,472 அய்ஏஎஸ், 864 அய்பிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஒன்றியப் பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், ‘பஸ்வான் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் அய்ஏஎஸ் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படு வோரின் எண்ணிக்கையை 180 ஆக அரசு உயர்த்தி உள்ளது. இதை மேலும் அதிகரித்தால் அய்ஏஎஸ் பயிற்சி தரம் குறைவதோடு, அதிகாரி களுக்கான பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே போல்,  2020 முதல் நேரடியாக தேர்வு செய்யப் படும் அய்பிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் நிலவரப்படி  பல்வேறு மாநிலங்களில் 1,472 அய்ஏஎஸ், 864 அய்பிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நகர எல்லைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றம் - நிதின் கட்காரி தகவல்

புதுடில்லி, ஆக.6 நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை மாற்றுவதற்கான புதிய தொழில் நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். புதுடில்லி, புதிய அமைப்பின் மூலம் நகர எல்லையில் இருக்கும் சுங்கச் சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார். மேலும் கிருஷ் ணகிரி நகரில் 7 கிமீ தொலைவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாது, மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவது முற்றிலும் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டார். சுங்கச்சாவடிகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற பல பிரச்சினைகள் உருவாகின்றன. அவற்றை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை மாற்றுவ தற்கான புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்' என்றும் நிதின் கட்காரி தெரிவித்தார்.


No comments:

Post a Comment