வெற்றிகரமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய தமிழ்நாடு அரசு - உலகமே போற்றுகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

வெற்றிகரமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய தமிழ்நாடு அரசு - உலகமே போற்றுகிறது!

வெற்றிகரமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய தமிழ்நாடு அரசை உலகமே போற்றுகிறது  என்று  பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்து  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

95 ஆண்டுகால செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற் றில் முதன்முதலாக இந்தியாவில் - அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் அப்போட்டி - சிற்பக் கலையின் சித்திரக் கூடமான மாமல்லபுரத்தில் நேற்று (9.8.2022) நடந்து முடிந்துள்ளது. இது உலகளவில் 44 ஆம் செஸ் ஒலிம்பி யாட் போட்டியாகும்!

இத்துறையின் விற்பன்னர்களும், பொறுப்பாளர் களும், செஸ் கூட்டமைப்புத் தலைவர்களும், உலகள வில் இதுவரை நடத்தப்பட்ட போட்டிகளுள், இதுதான் ஒப்புவமை இல்லாத வகையில் அனைத்து வகையிலும் நேர்த்தியாக நடத்தப்பட்டதாக மனந்திறந்து பாராட்டியது - தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியும், பூரிப்பும் கரைபுரண்ட வெள்ளமாகப் பாய்ந்தோடுகிறது.

நான்கே மாத சாதனை!

நான்கே மாதங்களுள் உலகளாவியதான ஒரு போட் டியை இந்த அளவு திட்டமிட்ட வகையில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறார் நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எதைச் செய்தாலும், அதில் ஒரு துல்லியம், வியக்க வைக்கும் கலை வண்ணம் என்பதெல்லாம் தி.மு.க. வுக்குக் கைவந்த கலை.

அதுவும் கலைஞர்  வழிவந்த இந்த ஆட்சியின் இவ்வகைச் செயல்பாட்டைப்பற்றிக் கேட்கவேண்டுமா?

186 நாடுகள், 1736 இருபால் வீரர்கள்

186 நாடுகளைச் சேர்ந்த 1736 இருபால் வீரர்களுக்கான ஏற்பாடு என்பது எல்லாம் அசாதாரணமானவை. ஒவ் வொரு நாட்டினருக்கும் தேவைப்படும் உறையுள், உணவு முறைகள், பிரத்தியேகமான வசதிகளையெல்லாம் அப்பழுக்கற்ற முறையில், ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்து ஆற்றுப்படுத்திய ஆற்றலை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

ஆட்சி அமைத்த குறுகிய காலத்தில் உலகளவிலான ஒரு போட்டியை ஒரு மாநில அரசு, பன்னாட்டவரும் போற்றிடும் வகையில் நடத்திக் காட்டியிருப்பது - தி.மு.க. அரசின் அளப்பரிய ஆற்றலையும், எடுத்துக்கொண்ட காரியத்தை கனக் கச்சிதமாக நடத்திக் காட்டும் செயல் திறனையும் எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

முதலமைச்சர் காட்டிய அக்கறை

போட்டி நடக்கவிருக்கும் சில நாட்களுக்கு முன்பு, தமக்கு இருக்கும் பணிச் சுமைகளுக்கு இடையே, இடை யிடையே மாமல்லபுரம் சென்று ஏற்பாடுகள் எல்லாம் திருப்தியாக இருக்கின்றனவா என்று மேற்பார்வையிட்ட தோடு,  போட்டி நடக்கும்போதும், விளையாட்டு வீரர் களை உற்சாகப்படுத்தும் வகையில் தானும் அமர்ந்து விளையாடியதும், பன்னாட்டு வீரர்களையும் ஆச் சரியப்பட வைத்தது.

கலை நிகழ்ச்சிகளைக் கண்டு சொக்கிப் போனார்கள் என்றே கூறவேண்டும்.

விளையாட்டில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற  ‘திராவிட மாடல்' அரசு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறது என்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் பேசியது வரவேற்கத் தக்கது.

இதுதான் 'திராவிட மாடல்!'

‘திராவிட மாடல்' என்றால் ஏதோ ஒரு துறையில் அல்ல - தொட்ட துறை அனைத்தையும் துலங்கச் செய்வது என்று பொருள் என்பதற்கு மாமல்லபுரம் வரலாற்றில் மற்றொரு மதிப்பிலா கல்வெட்டாகும்!

ஆக்கரீதியானவை!

உலகளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்களை உருவாக்கப் பல் வேறு திட்டங்களையும் நமது முதலமைச்சர் அறிவித் திருப்பது முக்கியமானதாகும்.

தமிழ்நாட்டின் தனித்தன்மையான சிலம்பாட்டத் துக்குத் தேசிய அங்கீகாரம் பெற்றுத் தர முயற்சிப்போம் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு அருமையிலும் அருமை!

ஏதோ கூடினோம் - களித்தோம் - கலைந்தோம் என்று இல்லாமல், ஆக்க ரீதியான திட்டங்களை உருவாக்குவதுதான் ஒரு நல்லாட்சி என்பதற்கான இலக்கணம். அதனை நமது ‘திராவிட மாடல்' முதல மைச்சர் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.

கூட்டுப் பொறுப்புக்குக் கிடைத்திட்ட வெற்றி!

தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும், இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழுவினரும் நமது முதலமைச்சர் தலைமையில் உலகமே கைதட்டிப் பாராட்டும் வகையில், கூட்டுப் பொறுப்பாக, நேர்த்தியாக செயல்பட்டு, தமிழ்நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்திக் காட்டியமைக்காக நமது மனந்திறந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘திராவிட மாடல்' ஆட்சியின்புகழ் ‘‘அய்இரண்டு திசைமுகத்தும்'' பரவி வருவது கண்டு பூரிக்கிறோம்.

வெற்றி பெற்ற வீரர்களும், அடுத்தடுத்து வெற்றி பெற இருக்கும் வீரர்களுக்கும் நமது வாழ்த்துகள்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.8.2022


No comments:

Post a Comment