ஒரு நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

ஒரு நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. 1962-2022 என 60 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ‘விடுதலை’ நாளேடு ஒரு முதலாளியால் ‘தொழிலாக’ நடத்தப்படும் நாளேடு அல்ல. அது ஓர் அரசியல் கட்சியின் ஏடும் அல்ல. ஏதாவது ஓர் அரசியல் கட்சியை அவர்களின் தயவில் எதிர் பார்த்து நடைபெற்று வந்த ஏடும் அல்ல; நடைபெறுகிற ஏடும் அல்ல, தமிழர்களின் மொழி, இனம், நாடு ஆகியவற்றை மீட்டுருவாக்கம் செய்யப் பட வேண்டும் என்கிற உயரிய இலட்சியத்திற்காக நடத்தப்பட்டு வரும் நாளேடாகும். இது மட்டுமல்லாமல், தமிழர்களுக்கு இன இழிவு ஏற்படுத்துகிற வர்ணாசிரம சனாதன தர்ம கொடுமையிலிருந்து - அக்குழியிலிருந்து மேலெடுத்து காப்பாற்ற முனைகிற ஒரு கருவியாக விளங்கி வருகிற நாளேடு - ‘விடுதலை’!

இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால் வர்ணாசிரம சனாதன தர்மத்தை சமூகநீதி சகடத்தைக் கொண்டு மிக வேகமாகச் சுழற்றி அதன் மூலம் அழித்தொழிக்கும் ‘அறவாழி’யான போர்க்கருவி விடுதலை நாளேடு. இவ்வேடு பெரியார் சுயமரியாதை இயக்க நிறுவனத்தின் ஆசிரியர், அச்சிடுபவர், வெளியிடுபவர் என்கிற பொறுப்புகளை ஏற்று வீரமணி அவர்களால் நிறைவேற்றப் பட்டு வருகிறது. அதனால் இயக்க மாகிவிட்ட ஆசிரியரை நாம் கொண் டாடுகிறோம். அந்த மகத்தான பணிகளை நிறைவேற்றுகின்ற உள்ளீடு கொண்டவராக அவர் விளங்குகிறார் - நாம் போற்றுகின்றோம்.

‘விடுதலை’ நாளேட்டின் 88 ஆண்டுகால வரலாற்றில் ஆசிரியராக வீரமணி அவர்கள் 60 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். பணியாற்றியும் வருகிறார். தமிழ்நாட்டின் இதழியல் வரலாற்றில் - நாளேடுகளின் ஆசிரியர்கள் இவ்வளவு காலம் - 60 ஆண்டு காலம் ஒரு நாளேட் டின் ஆசிரியராக தமிழர் தலைவர் வீரமணி அவர்களைப் போல யாரும் பணியாற்றியதில்லை. நாம் அறிந்த வரையில் நமது ஆசிரியர் வீரமணி மட்டுமே இவ்வளவு காலம்பணியாற்றி இருக்கிறார். இதனால் அவர் எல்லாருக்கும் ஆசிரியர் ஆனார். தமிழ் நாட்டில் ஆசிரியர் என்றால் அது வீரமணியைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்கு பாராட்டாக அது மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு ‘விடுதலை’ நாளேட்டின் பழைமையில் மூன்றில் இரண்டு பாகத்தை நமது ஆசிரியர் அவர்கள் வரித்துக் கொண்டார்கள்.

டி.ஏ.வி. நாதன் முதல் சா.குருசாமி வரை ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியர் களாகப் பணியாற்றி இருக்கிறார்கள். அதன் பிறகு கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். நாம் டி.ஏ.வி. நாதனிலிருந்து ‘விடுதலை’ நாளேட்டின் வரிசையைப் பார்க்கின்றோம். அந்த வரிசையில் கி.வீரமணி அவர்களைப் பெரியார் ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராக பொறுப்பேற்கச் செய்கிறார். அந்த வரிசைக்கு ஏற்றவராக ஆசிரியர் தம்மை ஆக்கிக் கொண்டு வளருகிறார். ஆசிரியர் அவர்கள் தமது பத்தாவது வயதிலேயே பகுத்தறிவு ஞானப்பால் உண்டவர். நீண்ட அனுபவம் அவருக்கு ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியர் பணியை மிக எளிதாக்கிற்று. சுயமரியாதைக்காரர்கள் அறிவையும் ஞானத்தையும் உணர்ந்தவர்கள். அவை இரண்டும் ஒன்றல்ல என்பதை உணர்ந்த வர்கள். அறிவு, எதிரே ஒரு பொருள் ‘இருப்பதை’ தெரியப்படுத்தும். ஞானம், அந்தப் பொருள் ‘இன்னது’ என்பதாக உணர்த்தும். இவை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு காட்சிகளாய் விரியும். இதை அறிந்து, தெரிந்து, உணர்ந்து, வளர்ந்து உயர்ந்தவர் ஆசிரியர்.

ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கு வேகமாய்ச் செயலாற்றும் திறன் இருக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொண்டே அவற்றுள் அரசியல் எது என்பதைக் கண்டறிய வேண்டும். அகன்றாழ்ந்த அறிவொட்பாம், கற்றறிந்த திட்பம், அற நூல்களின் தேர்ச்சி, பல பொருள் பற்றி அறிந்துணரப்பட்டது, வரும் பொருள் முன்னுரைப்பது எனப் பல திறமைகளும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கு இருப்பது சிறப்பு, அது ஓர் அணி! இவை அனைத்தும் நம் ஆசிரியரிடம் இருக்கின்றன. இவை அவரின் ஆற்றல், திறமை எனினும் அவை நம் இயக்கத்திற்குக் கிடைத்த சொத்து. அந்த ஆற்றலையும் திறமையையும் பயன்படுத்தி நாம் எதிரிகளைக் களத்தில் சந்திக்கிறோம். வெற்றி அடைகின்றோம். பெருமையும் பெருமிதமும் கொள்கின்றோம்.

ஆசிரியர் பெற்று இருக்கிற எழுத்துத் திறமை - எழுதும் ஆற்றல் அதன் ஒவ்வொரு வடிவத்திலும் எதிரொ லிக்கும். அவை வெளியிடப்படும் கால சூழ்நிலைக்கேற்ற பொருளடக்கம் - உள்ளடக்கம் அதில் இடம் பெற்று இருக்கும். அவர் விடுக்கும் (அரசியல்) அறிக்கைகள் மிகச் சிறந்தவை. பத்திரிகை உலகத்தில் அவரது அறிக்கை எல்லார்க்கும் முன்பாக முதலில் சீறி, வந்து குத்திட்டு நிற்கும். அதனை விடுதலை நாளேடு உடனடியாக வெளியிடும். அது பிற ஏடுகளிலும் இடம் பெறும். இப்படிப்பட்ட அறிக்கை களையெல்லாம் ஆராய்ந்து எழுதினால் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றை எழுதலாம்.

ஆசிரியர் எழுதும் கட்டுரைகள், வாழ்வியல் சிந்தனைகள், நினைவுக் கட்டுரைகள், ஆசிரியரின் பதில்கள் எல்லாமே கருத்துக் களஞ்சியங்களாகத் திகழுபவை. அவர் படைத்துள்ள நூல்கள் எல்லாம் இயக்கத்தின் வரலாற்றைப் பேசுகின்றன. ஆவணமாகவும் இருந்து வருகின்றன. எதிர்காலத்தில் அவற்றின் சிறப்பு மிக அதிகமாகப் பேசப்படும்.

ஆசிரியர் ‘புரூஃப்’ பார்க்கும் வேகத்தை நாம் பார்த்து இருக்கின்றோம். அவரின் கண்கள் எழுத்துகளின் மீது விரைந்து, மொய்த்துக் கொண்டே செல்லும். நம்மைப் பொறுத்தவரை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ‘புரூஃப்’ பார்ப்பதன் வேகத்தையே இவரிடமும் நாம் பார்க்கின்றோம். ஆசிரியர் பிறர் எழுத்துகளை ஊடுருவிப் பார்த்து விமர்சிப்பவர். பாராட்ட வேண்டியவற்றை உடனடியாகப் பாராட்டுபவர். நாம் ஒரு முறை தினமணி கதிர் வாரப் பதிப்பில் 'ஒரு நட்பின் கதை'  என்றொரு கட்டுரையை எழுதியிருந்தோம். பெரியாரோடு பெரும் நட்பாக இருந்த அவரின் பெருந்தொண்டர் ஜக்கிரியாவைப் பற்றியது அக்கட்டுரை. அக்கட்டுரையை பல வண்ண அட்டைப் படத்தோடு மிகச் சிறப்பாகத் தினமணிக் கதிர் வெளியிட்டு இருந்தது. இதை ஆசிரியர் படித்துவிட்டு நம்மோடு வெளியூரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டுரை வெளியான அன்று காலை 8:00 மணிக்கெல்லாம் பேசினார். இத்தகைய கண்ணோட்டத்தைத் திருக்குறள் ‘கழிபெருங்காரிகை’ (பெரும் நன்மை பயக்கும் செயல்) என்று பேசுகிறது.

எல்லா நாளேட்டின் ஆசிரியர்களும் ஆசிரியர் வீரமணி போல மேடைப் பேச்சில் வல்லவர்களாக இருந்துவிட முடியாது. ஆசிரியர் தலைப்பை ஒட்டியும் பேசுவார். மிக அருமையான ஆய்வுரைகளையும் நிகழ்த்துவார். கருத்தரங்கில் தலைமை ஏற்பார். அரசியலில் சிக்கல்கள் - நெருக்கடிகள் எழும்போது அது குறித்து சிறப்பு கூட்டங்களை அறிவித்துப் பேசுவார். சிக்கல்கள் - நெருக்கடிகள் குறித்து நமது நிலையை விளக்குவார். இப்படிப்பட்ட கூட்டங்களை தொடர்பொழிவாகவும் நிகழ்த்துவார்.

ஆசிரியர் ‘சங்கராச்சாரி - யார்?’ எனும் பொருள் பற்றி பத்து தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஒவ்வொரு சொற்பொழிவுக்கும் ஓர் அறிஞர் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தத் தொடர் சொற்பொழிவு சனாதன உலகத்தைப் பெருங்கவலைக்கு உள்ளாக்கியது. பொது மேடைகளில் மாநாடுகளில் பேசுகிறபோது, அந்தந்த நிகழ்ச்சிக்குரிய தனித்தன்மைகள் ஆசிரியரின் பேச்சில் வெளிப்படும். மயிலாப்பூரில் கோகலே ஹாலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ‘On Bharamins’ எனும் தலைப்பில் ஆசிரியர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவ்வுரையை நாமும் கேட்டோம். கூட் டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் ஆசிரியர் பேச்சினைக் கேட்டுப் பாராட்டினர்.

ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டின் ஆசிரியர் மட்டுமல்லர். அவர் திராவிடர் கழகத்தின் தலைவர். திராவிட இயக்கத்தில் தற்போது உள்ள மூத்த தலைவர் அவர் ஒருவரே! இயக்க வரலாற்றை முற்றிலும் அறிந்தவர் அவர். அகில இந்திய தலைவர்களும் அவரை அறிந்து வைத்திருப்பர். இவ்வளவு திறமைகளும் பெற்றிருக்கிற நம் ஆசிரியர் ஓர் இயக்கமாகச் செயல்படுகிறார். ஒரு நாளேட்டின் ஆசிரியராக 60 ஆண்டுகள் கடந்தும் அவர் பணியாற்றி வருகிறார். அவர் எதிர்கால இயக்கத்தவர்களுக்கு - வளரும் தலைவர்களுக்கு - அவரின் தொண்டறம் - அவராற்றிய பணிகள் முன் மாதிரியாக விளங்கிக் கொண்டு இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் அவரை முன் மாதிரியாக ஏற்று இயக்கத்தை வளர்க்கவும் காக்கவும் அணி வகுப்போமாக!

No comments:

Post a Comment