வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 21, 2022

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? (2)

வாழ்க்கைக்கான பொருளை தக்க வழியில் உரிய முறையில் சேர்ப்பது முக்கியம் என்பதற்கு அடுத்தபடியாக, சேர்த்த செல்வத்தை - பொருளை - சரியாகப் பாதுகாக்கவும் கற்றுக் கொள்ளுதல் அவசியம்.

தக்க பொருளை சம்பாதிப்பதை விட முக்கியம் அதனைக் காக்கத் தெரிய வேண்டும்.

இன்று ஊடகங்களில், தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளில் இடையறாது வரும் செய்தி, 'அதிக வட்டி தருகிறோம்' என்று போலி நிதிக்கம்பெனிகள்  பேரால் ஏராளமான கவர்ச்சிக்கர விளம்பரங் களைச் செய்து, மக்களின், வீட்டு இல்லத்தரசிகளது 'சிறுவாட்டு காசு' சேமிப்பு உள்பட பலவற்றையும் கொள்ளை யடித்துக் கொண்டு போகும் குறுக்கு வழி குபேரர்கள் (பிறகு சிறைக் கம்பி எண்ணுப வர்களாக இருந்தாலும்) ஏமாற்றி, நடுத்தர குடும் பங்களைக்கூட ஒரே நாளில் 'வறியர்களாக்கி'டும் புயலை உருவாக்கி அவர்கள் நடுத் தெருவில் நின்று புலம்பும் பரிதாபக் காட்சியை ஏற்படுத் துகின்ற கொடுமையை என் சொல்வது?

இப்படி ஏமாறுபவர்களில் பாமரர்கள் ஒரு மடங்கு என்றால், படித்தவர்களே அதிகம் உள்ளது, அவர்கள் தங்களின் மேலான பகுத் தறிவை இழந்து படித்தவர்களாக மட்டுமே இருக்கிறார்களே என்ற வேதனையைத்தான் நமக்கு ஏற்படுத்துகிறது!

வள்ளுவர் தமது திருக்குறளில் ஒரு அரிய கருத்தைக் கூறுகிறார்!

வருவாயைப் பெருக்குவது எப்படி? என்ற கேள்விக்கு செலவைச் சுருக்கினாலே அது வரவை, வருவாயைப் பெருக்கியது ஆகும் என்கிறார்!

எனவே தேவையற்ற - செலவுகளை நாம் செய்யாது- தீய பழக்க வழக்கங்களிற்கு அடிமைகளாக நாம் ஆளாகாமல் 'தற்காத்து தன்னைப் பேணிக் கொண்டால்' எவ்வளவு சேமிப்பு என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.

"எனக்கு பீடி, சிகரெட் பிடிக்கும் கெட்ட பழக்கம் இல்லை என்பதால் எனது உடல் நலம் கெடவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட முக்கியம் எனது வாழ்வில் பொருள் சேமிப்பையும் ஒரு பெருமளவுக்கு அப்பழக்கம் என்னை அறியாமலேயே எனக்குத் தருகிறது என்பதை எண்ணி பெருமிதப்பட வேண்டும் நான்!"

"எனக்கு, போதை- குடிப் பழக்கம் இல்லை மற்ற சூதாட்டப் பழக்கமில்லை- ஒழுக்கக்கேடு பழக்கங்களை நாடிச் செல்லவில்லை - அதனால் பொருள் கண்ணோட்டத்தில் எவ்வளவு பலன்! நம் வாழ்நாள் நாட்களில் அப்படி ஈடுபட்டு இருந்தால் அதற்குச் செலவழித்தே 'பிச்சைக் காரனாக்கப்பட்டிருப்பேன்'" என்று ஒரு கணம் ஒவ்வொருவரும் யோசித்தால், நல்லொழுக்கம், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாழ் வாதார பொருளாதாரத்திற்கும், கடன் வாங்கிச் சீரழியும் சிறுமைக்கும் இடந்தராத பெருமை அல்லவா?

என் நண்பர் ஒருவர் பொடி போடும் பழக்க முடையவர். அவர் சிரித்துக் கொண்டே சொல்வார்.

"சார், என் மூக்குக்குள் எத்தனை ஆயிரம் ரூபாய்களை நான் உள்ளே போட்டு உறிஞ்சி இருக்கேன் தெரியுமா?" என்பார்.

பழைய நண்பர்கள் மூன்று சொல்வார்கள்-  உண்ணல்  - ஊதல் - உறிஞ்சல் என்று.

1.  உண்ணல்  - வெற்றிலை பாக்கு, புகையிலை போடுதல்!

2. ஊதல் - பீடி, சிகரெட், சுருட்டு புகைப் பிடித்தல் அல்ல - புகை குடித்தல், உள்ளே விழுங்கித் தொலைக்கிறார்களே!

3. உறிஞ்சல் - பொடி உறிஞ்சல் (அது இறுதியில் உயிரையே உறிஞ்சி விடுகிறது.

இவை இருந்தால் வாழ்வில் வரும் ஒவ்வொரு நாள் செலவையும், கூட்டிப் பெருக்கிப் பார்த்தால் எத்தனை ஆயிரம் ரூபாய் வீண் செலவில் 'பொருள் விரயம்' என்று ஆகியிருக்கும் என்ப தையும் எண்ணினால், நல்லவர்கள் அவர்கள் முதுகை அவர்களே தட்டி மகிழ்ந்து கொள்ளலாம் அல்லவா?

(மேலும் சிந்திப்போம்)


No comments:

Post a Comment