சில வரிகளில் அறிவியல் செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

சில வரிகளில் அறிவியல் செய்திகள்

நட்புக்கும் உண்டு வாசனை

ஒரே மாதிரி உடல் வாடை உள்ளோர், உடனடியாக நண்பர்களாகிவிடுவர். அதுமட்டுமல்ல, ஏற்கெனவே நண்பர்களாக இருப்போரின் உடல் வாடை ஒரே மாதிரி இருக்கும். இதைச் சொல்வது அறிவியல்! தொழில் முறை மோப்பம் பிடிப்போரையும், 'எலக்ட்ரானிக் நோஸ்' எனப்படும் செயற்கை மூக்கு கருவிகளையும் பயன்படுத்தி, ஒரே பாலினத்தைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் பரிச்சயமில்லாதோரிடையே நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆய்வு, 'சயின்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியாகியுள்ளது.

அரசியலற்ற அணு ஆற்றல்!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெறும் அய்ரோப்பிய நாடுகளால், உடனே கண்டிக்க முடியவில்லை. இந்த எண்ணெய் அரசியலை தவிர்க்க, நியூட்ரான் அணு உலை போன்ற நுட்பங்களை பயன்படுத்தலாம் என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நியூட்ரான் உலைகள், பலவகை கன ரக அணுக்களை பிளந்து ஆற்றலை உண்டாக்குபவை. தவிர, இதில் அணுக் கழிவுகளே இல்லை. மேலும், மூலப்பொருளுக்கு, யுரேனியத்தையே நம்பியிருக்க வேண்டியதில்லை என்கிறது, நேச்சர் இதழில் வெளியான ஒரு கட்டுரை.

மலையிறங்கும்  கிருமிகள்

திபெத்திய பனி மலைகளில் பனிப் பாறைகள் உருகுகின்றன. ஆனால், கேடு அத்தோடு நிற்கவில்லை. திபெத்திய பகுதியில், ஆதிகால பனிப் பொழிவில் சிக்கி, உறைந்து போன 1000 பாக்டீரியா வகைகளை சீன அறிவியல் அகாடமி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதில் பல கிருமிகள் இதற்கு முன் அறியப்படாதவை. உருகும் பனிப் பாறைகளோடு இந்த பாக்டீரியாக்களும் நதியில் கலக்கும். இதனால் பல புதிய நோய்த் தொற்றுக்கள் ஏற்படும் ஆபத்து காத்திருக்கிறது.

பூமி மீது ஒரு கண்

கூகுள் நிறுவனம், 'கூகுள் எர்த் இன்ஜின்' என்ற சேவையை அரசாங்கங்கள் மற்றும் தொழில்களுக்கு வழங்குகிறது. இச்சேவை, விஞ்ஞானிகளுக்கும், தொண்டு அமைப்புகளுக்கும் 2010லிருந்தே கிடைக்கிறது. பூமியின் காடு, கடல், நிலம், வளி மண்டலம் என்று அனைத்தையும் கண்காணிக்கும் நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள், கூகுள் எர்த் இன்ஜிசினுக்குத் தருகின்றன. எனவே, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கடந்த 15 நிமிடங்களுக்கு முன்பு வரையிலான பூமிப் பந்தின் தகவல்களை இச்சேவையால் தர முடியும்.

ரோபோக்களும்  பேதம் பார்க்கும்

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தான் ரோபோக்களுக்கு மூளை. அத்தகைய 'கிளிப்' என்ற மென்பொருளை தயாரித்திருக்கிறது, ஓப்பன் ஏ.அய்., கிளிப் மென்பொருளை அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் சோதித்துப் பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், அந்த ரோபோக்களின் பேச்சிலும், செயலிலும் பாலின பேதம் மற்றும் இன பேதம் வெளிப்பட்டது. 

இதற்குக் காரணம், அந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளை எழுதிய மனிதர்கள் தான். எனவே, மென்பொருளாளர்களுக்கு சமத்துவ சிந்தனையை கற்பிப்பது அவசியம்.

No comments:

Post a Comment