பிரகலாதன் போன்றவர்கள்- முழுக்க முழுக்க தலைமை -
கொள்கை - இயக்கம்தான் முக்கியம் என்று வாழ்ந்தவர்கள்
குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
குருவரெட்டியூர், ஜூலை 19 தலைமை - கொள்கை- இயக்கம் என்று உண்மையாக இருப்பவர்கள் யாரோ, அவர்கள்தான் புத்தியைப் பயன்படுத்தக் கூடிய புத்தர்கள். அதை அப்படியே கடைப்பிடிக்கக் கூடிய வர்கள்தான் பெரியார் தொண்டர்கள் - நம்முடைய பிரகலாதன் போன்றவர்கள். முழுக்க முழுக்க தலைமை - கொள்கை - இயக்கம்தான் முக்கியம் என்று வாழ்ந்தவர் அவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம்
கடந்த 3.7.2022 அன்று மாலை குருவரெட்டியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
‘விடுதலை’ என்ற மாமருந்து
என்னுடைய நோயைப் போக்கிக் கொள்வதற்காக நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதுபோலத்தான், இந்த நாட்டில் ஜாதி நோயை, மதவெறி நோயை, மூடநம்பிக்கை நோயை, பெண்ணடிமை நோயைப் போக்கவேண்டுமானால், ‘விடுதலை’ என்ற அந்த மாமருந்துதான் மிக முக்கிய மானது.
ஏன் முகக்கவசத்தை நாம் இப்பொழுது போட்டுக் கொள்கிறோம். கிருமிகள் நம்மை அறியாமலேயே உள்ளே நுழைந்து விடுகின்றன.
அந்தக் கிருமிகள் உள்ளே செல்லாமல் இருப்பதற்காக இப்படிப்பட்ட முகக்கவசத்தை நாம் அணிகின்றோம்.
இன்னமும் நம்முடைய மக்கள் பல பேருக்கு இதனுடைய முக்கியத்துவம் புரிவதில்லை.
பா.ஜ.க.வினுடைய தத்துவங்களும் சரி, கரோனா வைரசும் சரி பல உருமாற்றங்களோடு வரும்!
அதுமட்டுமல்ல, இந்த நாட்டிலே பா.ஜ.க. வினுடைய தத்துவங்களும் சரி, கரோனா வைரசும் சரி பல உருமாற்றங்களோடு வரும். அதைக் கண்டறியக்கூடிய சக்தி பெரியாருடைய மருந் திற்குத்தான் உண்டு. அதனால்தான் விடுதலையைப் பரப்புங்கள் என்று சொல்லுகிறோம். எங்களுக்காக அல்ல.
உங்கள் எல்லோருக்கும் தெரியும், அய்யா அவர்கள் கையெழுத்துப் போடுவதற்குக்கூட நாலணா வாங்குவார். நகைச்சுவையாக இங்கேகூட ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சொன்னார்; அவருடைய தந்தையாருக்கும் இத்தன்மை உண்டு - அதை அப்படியே வரித்துக் கொண்டிருக்கிறார் நம்முடைய ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள்.
இலவசமாகக் கொடுத்தால், பெரியார் ஒப்புக்கொண் டிருக்க மாட்டார் என்று.
காலையில்கூட சாமி அவர்களுடைய மகன் ரவீந் திரகுமாரிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன் னார், ‘‘படம் எடுத்தவுடன், என்னுடன் படம் எடுத்தால், ரூபாய் கொடுக்கவேண்டுமே, நீ பணம் கொடுக்க வில்லையே?’’ என்று கேட்டதாக சொன்னார்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, அய்யா அவர்கள் எவ்வளவு சிக்கனமாக இருந்தவர் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அய்யாவுடன் ஒரு படம் எடுப்பதற்கு அய்ந்து ரூபாய்!
அய்யாவுடன் போட்டோ எடுத்தால், அய்ந்து ரூபாய் கொடுக்கவேண்டும்; பெரியார் அய்யாவினுடைய செயலாளர் புலவர் இமயவரம்பன், அருகிலிருந்து அந்தப் பணத்தை வாங்குவார்.
நிறைய தோழர்கள் வந்து அய்யாவுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். அந்தப் பணத்தையெல்லாம் வாங்கிய புலவர் இமயவரம்பன், அய்யாவிடம் கொடுத்தார். நாங்கள் எல்லாம் பக்கத்தில் நிற்கிறோம்.
அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு, எண்ணிப் பார்த்த அய்யா அவர்கள், ‘‘ஒருவரிடம் பணம் வாங்க வில்லையா? விட்டுவிட்டாயா?’’ என்று கேட்டார்.
நாங்கள் அருகிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்; யாரும் பணம் கொடுக்காமல் போகவில்லையே, இது எப்படி நடந்தது என்று தெரிய வில்லையே, என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
நாம் கூட கண்டுபிடிக்கவில்லையே, அய்யா எப்படி கண்டுபிடித்துக் கேட்கிறார் என்று ஆச்சரியத்துடன், அய்யாவைப் பார்த்தோம்.
அடுத்ததாக அய்யா சொன்னார், ‘‘போட்டோ எடுக்கும்பொழுது ஃப்ளாஷ் அடிக்கும் அல்லவா, அது 20 தடவை எரிந்ததே, அப்படியென்றால், ரூ.100 ரூபாய் இருக்கவேண்டுமே; ஒருவரிடம் பணம் வாங்கவில் லையா?’’ என்று கேட்டார்.
இன்றைக்கு பெரியார் கல்வி நிறுவனங்களாக உருவாகியிருக்கின்றன
இப்படியெல்லாம் சேர்த்த பணம் யாருக்காக?
அவருக்காகவா? அவருடைய உறவினருக்காகவா?
இல்லை நண்பர்களே!
உங்களுக்காக, மக்களுக்காக - அந்தப் பணம் முழுவதும் இன்றைக்கு பெரியார் கல்வி நிறுவனங்களாக உருவாகியிருக்கின்றன.
இன்றைக்கு விடுதலை 88 ஆம் ஆண்டில் நடை போடுகிறது; எனக்கு வயது 89 முடியப் போகிறது.
‘விடுதலை’யை எங்கே தொடங்கினார் அய்யா - ஈரோட்டில்.
குறிப்பிட்ட தொடக்கக் காலத்திற்குப் பிறகு, அடுத்த கட்டத்தில் யார் வந்தார் என்று சொன்னால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் விடுதலை ஆசிரியராக வந்தார்.
எனக்கு என்ன பெருமை என்றால், அண்ணா அமர்ந் திருந்த இடத்தில், நாங்கள் பயிற்சி பெற்று அமர்ந்தி ருக்கின்றோம்.
அண்ணா அவர்கள் எப்படிப்பட்ட ஒரு இல்லத்தில் வாழ்ந்தார் என்று நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அந்த ‘விடுதலை’யால்தான், இன்றைக்கு நாற்காலியில் நம்முடைய சகோதரிகள் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்கள் நிற்கக் கூடிய இடத்தில், பெண்கள் இப்படி நாற்காலியில் அமரக் கூடிய காட்சியை நாம் பார்த்திருக்க முடியுமா? செருப்புப் போட்டு பெண்கள் நடக்க முடியுமா? குடை பிடித்துக் கொண்டு பெண்கள் கிராமங்களில் நடக்க முடியுமா?
மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் நிறைந்தவரான பிரகலாதன்!
அதையெல்லாம் மாற்றிய இயக்கம் தந்தை பெரியார் என்ற இந்தப் பேராசானுடைய சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம்.
அதற்குத் தளபதியாக உழைத்தவர்தான், மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் நிறைந்தவரான பிரகலாதன் போன்றவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் போகாத இடமே இல்லை. அய்யா அவர்களுடைய மறைவிற்குப் பின்தான், இந்த ஊரில் இயக்கம் தொடங்கப்பட்டது.
கொள்கைப் பயிர் வளர்வதற்கு உரம் போடுகிறார்கள்
முதன்முறை எங்களுக்கு வரவேற்பு எப்படி என்றால், கல்லடிகள்தான். அவ்வளவும் எங் களுக்கு உரம் என்று தெரியும். கொள்கைப் பயிர் வளர்வதற்கு உரம் போடுகிறார்கள். எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
பிரகலாதன் போன்றவர்களுக்கு என்ன வேலை என்றால், ஊர்நலம் ஓம்புதல்தான்.
இங்கே கட்சி வேறுபாடில்லாமல், ஒவ்வொருவரும் உள்ளார்கள். அதற்கான காரணத்தை இங்கே தோழர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்கள்.
திராவிடர் கழகத் தோழர்கள், தனக்கென்று எதையும் கேட்கமாட்டார்கள்.
‘‘என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்’’
அய்யா பெரியார்தான் சொன்னார், ‘‘என்னுடைய தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்’’ என்று.
துறவி என்றால், இன்றைக்கு இருக்கும் துறவிகள் என்று நினைக்காதீர்கள். இன்னும் தங்களுக்கு ஆள் சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் இன்றைக்கு.
அதுபோன்ற துறவிகள் இல்லை. உண்மையான துறவிகளுக்கும் மேலானவர்கள் கருப்புச்சட்டைக்காரர் கள் என்றார் அய்யா. அப்படி சொல்லிவிட்டு, அதற்குரிய விளக்கத்தையும் சொன்னார்.
உண்மையான துறவிகளிடம், ‘‘ஏன் துறவறம் மேற்கொண்டீர்கள்’’ என்று கேட்டால்,
‘‘இந்த உலகம் சிற்றின்பம்; மேலுலகம்தான் பேரின்பம். சிற்றின்பம் என்பது தற்காலிகமானது; பேரின்பம்தான் நிரந்தரமானது. ஆகவே, அங்கே போவதற்குத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம்‘‘ என்று சொல்வார்கள்.
படத் திறப்பு நடத்துவது என்பது பகுத்தறிவின் அடிப்படையில்தான்
இறந்தவர்களுக்குப் படத் திறப்பு நடத்துவது என்பது பகுத்தறிவின் அடிப்படையில்தான்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால், திராவிடர் இயக்கம் இல்லாவிட்டால், திராவிட மாடல் இங்கே பிறந்திருக்காவிட்டால், நினைவேந்தல், படத்திறப்பு என்பதெல்லாம் இருந்திருக்காது.
அதற்குப் பதில், மத அடிப்படையில் அந்த நிகழ்ச்சி நடைபெறும்பொழுது அதற்குப் பெயர் என்னவென்றால், ‘‘உத்தரகிரியை பத்திரிகை’’ என்றுதான் சொல்வார்கள்.
உத்தரகிரியை பத்திரிகை என்றால், யாருக்காவது விளங்குமா?
பத்திரிகை அச்சடிக்கும்பொழுதே, இவருக்கு ஒன்றும் தெரியாது. அச்சடிக்கும் அலுவலகத்தில் இருப்பவர் கேட்பார், ‘‘ஏங்க, நீங்க வைஷ்ணவ மதமா? சிவ மதமா?’’ என்று.
பத்திரிகை அச்சடிக்கச் சென்றவர் புரியாமல் விழிப்பார்.
‘‘ஏங்க நீங்கள் நாமம் போடுகிறவர்களா? பட்டை (விபூதி) போடுகிறவர்களா?
நாமம் போடுகிறவர்களாக இருந்தால், ‘‘வைகுந்த பதவியை அடைந்ததை முன்னிட்டு’’ என்று போட வேண்டும்.
பட்டை (விபூதி) போடுகிறவர்களாக இருந்தால், ‘‘சிவலோக பதவியை அடைந்ததை முன்னிட்டு’’ என்று போடவேண்டும் என்று சொல்வார்.
ஒன்று மேல்சபை - இன்னொன்று கீழ்சபை.
இறந்து போன பிறகுகூட, ஏதாவது பதவி கிடைக்காதா என்று ஆக்கியதன் விளைவுதான், இன்றைக்குப் பதவிக்கு அவ்வளவு பெரிய மோகம் இருக்கிறது நாட்டில் - அதுபோன்ற உணர்வுகளை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.
மோட்சம், நரகம் என்பதை நம்புபவர்கள் அல்ல நாங்கள்!
ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லாத அளவிற்குப் பெரியார் சொன்னார்,
மோட்சம், நரகம் என்பதை நம்புபவர்கள் அல்ல நாங்கள் என்றார். இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எப்படி இருக்கவேண்டும்‘‘ தெரியுமா?
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்வார்கள்.
இங்கே சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர் கள் உரையாற்றும்பொழுது ஒரு தகவலை சொன்னார்.
நாங்கள் டில்லிக்குச் சென்றபொழுது, நார்த் அவென்யூவில் உள்ள இவர்களுடைய வீட்டில் தங்கியிருந்தோம்.
‘மெயில்’ பத்திரிகை செய்தியாளரின் கேள்வியும் - தந்தை பெரியாரின் பதிலும்!
‘மெயில்’ பத்திரிகை செய்தியாளர் பெரியார் அய்யா விடம் பேட்டி எடுத்தார். நானும் அருகில் இருந்தேன்.
அந்த செய்தியாளர் அய்யாவிடம், ‘‘உங்களுக்கு மதமே பிடிக்காது என்கிறீர்கள்; ஆனால், புத்தரை மட்டும் ஆதரிக்கிறீர்களே, நீங்கள்; புத்தர் மதவாதி இல்லையா?’’ என்று கேட்டார்.
‘‘எப்படி அவரை மதவாதி என்று சொல்கிறீர்கள். நான் புத்தரை மதவாதி என்று கருதவில்லை’’ என்று தந்தை பெரியார் சொன்னார்.
செய்தியாளர்: ‘‘அங்கேயும்தான் சடங்குகள் இருக் கின்றன; புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லி, கீழே விழுந்து கும்பிட்டுவிட்டுத்தானே எழுந்திருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்.
அதற்கு பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘அந்த மூன்று வரிகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?’’
புத்தம் சரணம் கச்சாமி என்றால், என்னை முழுமையாக என்னுடைய தலைவனிடம், இயக்கத்திடம் ஒப்படைக்கிறேன்.
தம்மம் சரணம் கச்சாமி என்றால், அந்தத் தலை வனுக்கு என்ன கொள்கையோ, அந்தக் கொள்கைக்கு என்னை ஒப்படைக்கிறேன்.
மூன்றாவது,
சங்கம் சரணம் கச்சாமி என்றால், அந்தத் தலை வனுக்கு, அந்த இயக்கத்திற்கு எப்பொழுதும் உண்மை யாக இருப்பேன் என்பதுதான்’’ என்று பதிலளித்தார்.
தலைமை - கொள்கை - இயக்கம்தான்
முக்கியம் என்று வாழ்ந்தவர் பிரகலாதன்
ஒரு தலைவன், கொள்கை, அந்தக் கொள்கையை செயல்படுத்தக் கூடிய இயக்கம் - அமைப்பு.
இந்த மூன்றிலும் உண்மையாக இருப்பவர்கள் யாரோ, அவர்கள்தான் புத்தியைப் பயன்படுத்தக் கூடிய புத்தர்கள். அதை அப்படியே கடைப்பிடிக்கக் கூடிய வர்கள்தான் பெரியார் தொண்டர்கள் - நம்முடைய பிரகலாதன் போன்றவர்கள். முழுக்க முழுக்க தலைமை - கொள்கை - இயக்கம்தான் முக்கியம் என்று வாழ்ந்தார் அவர்.
தந்தை பெரியாருக்கு
மிகவும் பிடித்த குறள்!
1330 திருக்குறளில் தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறள் எதுவென்றால்,
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்
என்ற குறள்தான். இதற்கு என்ன அர்த்தம் என்பதை அய்யாவே சொல்வார்.
திருக்குறளை பெரியார் ஆய்வு செய்திருக்கிறார் திருக்குறளை அய்யா அவர்கள் அறிந்த அளவுக்கு எனக்குத் தெரியாது என்று அடிகளார் அவர்கள் வியப்போடு சொல்வார்.
அந்தக் குறளுக்கு என்ன அர்த்தம் சொல்வார் என்றால், ‘‘பொதுவாழ்க்கையில் இறங்கும்பொழுது, மானம், அவமானம் பார்க்காதே!’’ என்பதுதான்.
(தொடரும்)

No comments:
Post a Comment