இலங்கைப் பிரச்சினை: கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

இலங்கைப் பிரச்சினை: கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்

புதுடில்லி, ஜூலை.18 இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை (19.7.2022) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. 

அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகி உள்ளார். இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று உள்ளார். அங்கு வருகிற 20-ஆம் தேதி புதிய அதிபர் தேர்தல் நடக்கிறது. 1978-ஆம் ஆண்டுக்குப்பிறகு முதல் முறையாக நாடாளுமன்றம் மூலம் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக முடங்கியுள்ள இலங்கைக்கு, இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், உணவுப்பொருட்கள், எரிபொருள் என ஏராளமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில் நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (18.7.2022)  தொடங்குகிறது. இதை சுமுகமாக நடத்துவதற்காக ஒன்றிய அரசு நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. இதில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன. அந்தவகையில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர்கள், இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பட்டினியை நோக்கி தள்ளப்பட்டு உள்ள இலங்கை மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என வலியுறுத்தினர்.  இதைத்தொடர்ந்து இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) டில்லியில் நடைபெறுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் நாடாளுமன்ற கட்சித்தலைவர்களுக்கு இலங்கை விவகாரம் குறித்து மேற்படி அமைச்சர்கள் விளக்குவார்கள் என்று கூறினார். இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் ஒன்றிய அரசு வெளியிட்டு உள்ளது. முன்னதாக, இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர்  மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை  கொழும்புவில் சந்தித்து பேசிய இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என உறுதியளித்து இருந்தார்.


No comments:

Post a Comment