வெளிநாடு தப்பி ஓடிய இலங்கை அதிபர் கோத்தபய பதவி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 15, 2022

வெளிநாடு தப்பி ஓடிய இலங்கை அதிபர் கோத்தபய பதவி விலகல்


கொழும்பு, ஜூலை 15 இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங் கையில் இருந்து கள்ளத்தனமாக மாலத்தீவு சென்று அங்கும் மக்கள் எதிர்ப்பை தாங்க முடியாமல் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து  பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலம்  அனுப்பி யுள்ளார்.

பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும் இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகிறது. இதனால் கொதித்து போயிருக்கும் மக்கள் மார்ச் மாதம்  முதல் கடுமையான போராட் டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலை 9 ஆம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் திரண்டு அதிபர் மாளி கையை கைப்பற்றினர். மிகுந்த கோபாவேசத்தோடு கொழும்புவில் போர்க்கோலம் பூண்டுள்ள அவர்களை ராணுவம் மற்றும் காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 மனித சுனாமியாக அலை அலையாக கொழும்பு நோக்கி வந்த மக்களிடம் சிக்கினால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட அதிபர் கோத்தபய ராஜபச்சே, அதிபர் மாளிகையில் இருந்து முன்கூட்டியே வெளியேறி இருந்தார். 

பின்னர் அனைத்துக்கட்சிகளும் அவரை பதவி விலக வலியுறுத்தியதால், 13-ஆம் தேதி (நேற்று முன்தினம்) பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் அறிவித்ததுபோல அவர் செய்யவில்லை.  மாறாக தனது மனைவி லோமா மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத் தீவுக்கு தப்பி ஓடினார்.

விமானப்படை விமானம் மூலம்  13.7.2022 அன்று அதிகாலை மாலத் தீவை அடைந்தார்.  அங்கிருந்தவாறே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். அரசியல் சாசன பிரிவு 37 (1)-இன் கீழ் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். இதன்படி இடைக் கால அதிபரான ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் அவசர நிலையை பிறப்பித்தார். 

அத்துடன் இயல்பு நிலையை ஏற் படுத்துவதற்காக மேற்கு மாகாணத்தில் ஊரடங்குக்கும் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக் காரர்கள் பிரதமரின் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். அந்த அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள் ரணில் விக்ரம சிங்கே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர். 

 இதற்கிடையே மாலத்தீவு சட்டமன்ற தவைரும், மேனாள் அதிபருமான முகமது நஷீத்தின் உதவியில் மாலத்தீவில் புகுந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.  குறிப்பாக அங்கு வாழும் இலங்கை மக்களும், மாலத்தீவு மக்களில் ஒரு பிரிவினரும் போராட்டங்களில் இறங்கினர். அதேநேரம் மாலத்தீவு அரசிலும் கோத்தபய விவகாரம் பெரும் சலசலப்பை கிளப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிட்டார். 

அதன்படி சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, மனைவி லோமா, பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் ஆகியோர் நேற்று  (14.7.2022) மாலையில் சிங்கப்பூர் போய் சேர்ந்தனர்.

 இதை சிங்கப்பூர் அரசும் உறுதி செய்தது. அதேநேரம் அங்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட் டங்கள் தொடங்கி உள்ளது. இலங் கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு நாடாக தப்பி ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது பன்னாட்டு அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.  

இவ்வாறு நெருக்கடி முற்றியதை தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று (14.7.2022) பதவி விலகினார். பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத் தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோத்தபய பதவி விலகிய தகவலை மாலத்தீவு மேனாள் அதிபர் முகமது நஷீத்தும் உறுதி செய்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகி விட்டார். அவர் இலங்கையில் இருந்திருந்தால் இது நடந்திருக்காது என நினைக்கிறேன். 

அத்துடன் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்திருக்கும். இலங்கை இனி முன்னோக்கி செல்லும் என நம்புகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துகள்' என குறிப்பிட்டு இருந்

தார். 

முன்னதாக, கோத்தபய ராஜபக்சே பதவி விலகவில்லை என்றால் அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடாளுமன்றத் தலைவர் ஆலோசித்து வந்ததாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment