இந்திய நாடு உடைந்து சிதறிப் போகச் செய்யும் அளவில் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

இந்திய நாடு உடைந்து சிதறிப் போகச் செய்யும் அளவில் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகள்

(இந்திய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு மாநிலமும் தாங்களாக விரும்பி முன்வந்து ஒன்றிணைந்து உள்ளன என்ற இந்தியா பற்றிய கருத்தினை சிறிதும் புரிந்து கொள்ளாத ஓர் அரசியல் கோட்பாடு முன்னிலை பெற்று வருகிறது)

புலப்பிரை பாலகிருஷ்ணன்

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை விழாவாகக் கொண்டாடுவதற்கான காரணங்களில், இந்தியா உடைந்து போகாமல் ஒற்றுமையாக நீடித்திருப்பது என்பதும் ஒன்றாகும். அத்தகைய சந்தேகம் கொண்டவர்களில் முதன்மையானவராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், "இந்தியா என்பது இனியும் புவியியல் பாடத்துக்கு மேலான ஒன்று அல்ல; ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்டு ஒரு குடையின்கீழ் இந்தியாவைக் கொண்டு வருவதற்கு உதவியிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த பயணத்தை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கும் வேளையில் இன்று சில சக்திகள் இந்தியாவின் ஒற்றுமையை பலகீனப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது ஆகும்.

குறிப்பாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் தற்போது உள்ள அரசியல் கட்சியின் அங்கீகாரம் பெற்ற இரண்டு செயல் திட்டங்கள் உண்மையிலேயே இந்தியாவை உடைத்து சிதறுண்டு போகச் செய்யும் அளவுக்கு ஆற்றல் பெற்றவையாகும்.

ஜியான் வாபி பிரச்சினை

முதலாவதாக வாரணாசி ஜியான்வாபி மசூதி தொடர்பான அண்மைக் கால நிகழ்வுகளை பார்க்கும்போது நாம் பேரதிர்ச்சியையும், பேரச்சத்தையும் அடைகிறோம். பல நூற்றாண்டு காலமாக ஒரு மசூதியாக இருந்த அந்த இடத்தில் வழிபாடு நடத்துவதற்கு இந்துக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆணையினால் இடித்துத் தள்ளப்பட்ட ஒரு இந்து கோவில் அந்த இடத்தில் இருந்தது என்பதற்கு மறுக்க முடியாத சான்று உள்ளது என்று ஒரு நிலை தவறாத நோக்குநர்கள் கூறுகின்றனர். இப்போது நம்மிடம் 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் இருக்கிறது. முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் என்ற நிலையில் இருந்து மாற்றப்படுவது என்ற அச்சத்தில் இருந்து பாதுகாப்பதற்கு இந்த ஒரு சட்டமே போதுமானது. இதனை நாம் முழுக்க முழுக்க சட்ட விதிகளின்படிதான் பார்க்க வேண்டுமா? அந்த நிலை ஏற்பட்டால், நெடுங்காலத்துக்கு முன்னர் இழைக்கப்பட்ட தவறுக்கு பொறுப்பு இல்லாத இன்று வாழும் முஸ்லீம்கள் ஒரு மசூதியைக் காலி செய்து கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்கப்படவும் கூடும். தங்களது முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு மன்னிக்கும் பெருந்தன்மையான ஒரு நிலைக்கு இந்தியாவின் இந்துக்கள் தங்களை உயர்த்திக் கொண்டவர்களாக இல்லை என்பதை கற்பனை செய்து பார்த்தால் கூட மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இந்த நாட்டின் மிகப் பெரிய பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக அவர்கள் இருப்பதால் அவர்கள் வழிபடுவதற்கு ஏராளமான மற்ற தலங்கள் உள்ளன.

மற்றொரு ஜனநாயகத்திலிருந்து...

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒக்லாமா மாகாணத்தின் துல்கா நகரில் நடைபெற்ற 1921ஆம் ஆண்டு துல்கா இனப்படுகொலை நினைவு நாளன்று சொற்பொழிவாற்றுகையில், "இதைப் போன்றவை எதுவுமே எப்போதுமே நடைபெறவில்லை என்றும், அது இன்று நம்மை பாதிக்கவில்லை என்றும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதால் பயனேதுமில்லை. ஏனெனில் அது இன்றும் நம்மை பாதிக்கிறது. எதனை அறிந்து கொள்வதற்கு நாம் தேர்ந்தெடுக்கிறோமா என்பதாக இல்லாமல் எதனை நாம் கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டுமோ அதனைத் தேர்ந்து எடுப்பதுதான் சிறப்புடையதாகும். நல்லது எது கெட்டது எது என்று அனைத்தையுமே நாம் அறிந்திருக்க வேண்டும். அதைத்தான் மாபெரும் தேசங்கள் செய்கின்றன. தங்களது இருண்ட பக்கங்களை சரிசெய்துகொள்வதற்கு அவர்கள் முன் வருகிறார்கள்" என்று கூறினார். அமெரிக்கர்கள் அதுபற்றி நினைவு கூர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் பைடன் எந்தவிதமான குறைபாடுகளையும் மனதில் ஏற்றுக் கொள்ளாமல் மேற்கொண்டு நகர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஆலோசனையையும் கூறுகிறார். இந்த செய்தி அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி இந்திய நாட்டு இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கூடப் பெருந்துவதும், பயனளிப்பதாக இருப்பதுமாகும். நமது வரலாற்று ஆவணப் பதிவில்வட இந்திய முஸ்லீம்களை தனிமைப்படுத்திக் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் செயல் திட்டத்தில் ஏதோ  ஒரு குறை இருப்பதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் வாழ்ந்த பெருமை மிகுந்த திராவிட இன மக்களின் குடியிருப்புகள் வீழ்ச்சி அடைவதற்கு ஆரியர்கள் வந்துகுடியேறிய குடியேற்றங்கள்தான் காரணமா அல்லது வறட்சி போன்ற இயல்பான சுற்றுச்சூழல்கள் காரணமா என்பது இன்னமும் நிலை நாட்டப்பட வேண்டி இருந்தாலும், இந்த குடியேற்றங்களில் எல்லாம் எந்த விதமான வன்முறைச் செயல்களும் மேற்கொள்ளப்படாமல் இருந்திருக்க முடியாது என்பதை நம்புவதற்கு நம்மிடம் போதிய காரணங்கள் உள்ளன. தஸ்யூக்களைக் கொல்ல இயன்ற ஆரியர்களின் முதற் கடவுளான இந்திரனை "இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும்  கொன்று குவிக்கும்படி" ஆரியர்கள் கேட்டுக் கொள்ளும் பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன. ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்த பிறகு பூர்வகுடி உள்ளூர் மக்கள் எவ்வாறெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு இழிவாக நடத்தப்பட்டார்கள் என்பதைப் பற்றிபெருமையுடன் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பழக்கம் அண்மைக் காலமம் வரை வடஇந்தியா முழுவதிலும் நிலவியது. ஆனால் இந்து தேசியமோ அத்தகைய தொரு தர்ம சங்கடத்துடன் சவகரியமற்று உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஆரியர்களின் கலாச்சார பெருமைகளை எல்லாம் விளக்கிக்கூறுவதற்கான நியாயமோ உரிமையோ அற்றவர்கள் என்ற உண்மை ஆரியர்களை இந்நாட்டின் அந்நியர்களாகச் செய்து விடுகிறது. இந்தியாவின் பூர்வகுடி மக்கள் மலைகள் போன்ற எளிதில் அணுக முடியாத இடங்களுக்குத் துரத்தப்பட்டது அல்லது கிராமங்களின் புறப் பகுதிகளில் வாழும்படி விரட்டப்பட்டது ஆகியவை இந்தியாவில் மக்களின் குடியேற்றங்கள் எவ்வாறு விளங்கின என்பதை விளக்குவதாக இருக்கின்றன. இவையெல்லாம் பூர்வகுடி மக்களை சமூக வாழ்க்கையில் சேர்க்காமல் தனிமைப்படுத்தி இழிவுபடுத்துவது தான் இவற்றின் ஒருங்கிணைந்த நோக்கம் என்பது நன்றாகவே தெரிகிறது. வன்முறை அச்சுறுத்தல் இன்றி இவற்றையெல்லாம் செய்திருக்கவே முடியாது. 

- (தொடரும்)

நன்றி: 'தி இந்து' 26.5.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment