'மாயச் சுழல்' போன்ற உள்நாட்டு அரசியலும் அயல்நாட்டுக் கொள்கையும் அதிர்ச்சி அளிக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

'மாயச் சுழல்' போன்ற உள்நாட்டு அரசியலும் அயல்நாட்டுக் கொள்கையும் அதிர்ச்சி அளிக்கிறது

 ஹோப்பிமேன் ஜாக்கெப்

மேற்கு ஆசிய நாடுகளுடனான உறவை மேற்கொள்வதற்கு பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசினால் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டதும், அரசியல் ரீதியில் பயன் மிகுந்ததுமான கொள்கையின் எல்லைகளைக் கடந்து தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இரு பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு எதிராக இழிவாகப் பேசிய பேச்சுகள், இந்தியாவுக்கு எதிராக முன் எப்போதும் இல்லாத அளவில் நாகரீக உறவுகளை சீரழித்து கண்டனங்களைப் பெற்றுத் தந்துள்ளன. இந்தியாவில் வளர்ந்து வரும் முஸ்லீம்களுக்கு எதிரான இத்தகைய கருத்துகள் மற்றும் உறவுகள் முக்கியமற்ற ஒரு சில சில்லறைக் குழுக்களால்  உருவாக்கி பரப்பப்படுபவை என்று கூறி இந்திய அரசு முக்கியத்துவம் அளிக்காமல் புறந்தள்ளி விடுகிறது. இந்த ராஜரீக உறவில் ஏற்பட் டுள்ள மிகத் தெளிவாகக் தெரியும் பின்னடைவினைக் கட்டுப்படுத்துவதற்கு இப்போது இந்திய அரசு போராடிக் கொண்டிருக்கிறது.

மத சகிப்புத் தன்மை மற்றும் பன்முகத் தன்மை பற்றி முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் மேற்கு ஆசிய நாடுகளிலும் இருந்து இந்தியா பாடம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என் றாலும் இந்தியாவைப் பொறுத்த வரை மத சகிப்புத் தன்மை மற்றும் பன்முகத் தன்மையைப் பற்றிய வெறும் ஒரு பாடமாக இருப்பதுடன், மிக மிக மோசமான உள்நாட்டு அரசியல் இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கைகள்மீது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் என்னும் பாடத்தை ஆளும் பா.ஜ.க.வினருக்கு கற்றுத் தர வேண்டியது மிக மிக அவசியமாகும். மேலும், பல பத்தாண்டு காலமாக தொழில் ரீதியிலான ராஜ தந்திரத் தினால் மிகுந்த கவனத்துடன் உரு வாக்கப்பட்ட இரு தரப்பு அயல் நாட்டு உறவுகளை இத்தகைய மத வெறி அரசியலும் தேர்தல் ஆதாயக் கணக்கீடுகளும் சீரழித்துவிட இயலும் என்பதால், இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களை அவை எங்களது உள்நாட்டு விவகாரம் என்று கூறி இனியும் புறந்தள்ளி விட முடியாது. அது தேச நலன் சார்ந்த ஒரு விவகாரமாக ஆகிவிடுகிறது.

ஜனநாயகத்துக்கான இடம் சுருங்கி வருவது...

கடந்த சில காலமாக தனது அயல்நாட்டுக் கொள் கையைப் பின்பற்றும் இந்தியாவின் கொள்கையின் இதயம் போன்ற மிக மிக முக்கியமான இரட்டைக் கொள்கை ஒன்று இருக்கிறது என்று கூறலாம். ஜனநாயகத்துக்கான இடம் சுருங்கி வருவதும் நாட்டில் மத சகிப்புத் தன்மையின்மை வளர்ந்து வருவதும் பற்றிய அயல்நாடுகளின் விமர்சனங்கள் கண்டனங் களை எதிர் கொண்டு சமாளிப்பதற்கு இந்தியாவில் இதுவரை இயன்றுள்ளது. அதே நேரத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆணி வேர் கொண்டுள்ள அதே ஜனநாயக மதிப்பீடுகளை உச்சி மாநாட்டின் மூலம் முன்னெடுத்துச் செல்லும் நாடாக இந்தியா விளங் குவது மற்றொன்றாகும். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகள் பற்றி அமெரிக்காவும் மேற்கு நாடு களும் தெரிவித்த விமர்சனங்களையும் கண்டனங் களையும் தொடர்ந்து புதுடில்லி மிக மிக கடுமையான மொழியில் நிராகரித்து  வந்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்ட மேலே குறிப்பிடப் பட்டுள்ள இரட்டை கொள்கையை இனி ஒப்புக் கொள்பவர்கள் வெகு சிலராகத்தான் இருப்பார்கள். இந்தியாவின் மீது கண்டனம் தெரிவித்திருப்பது காலனி ஆதிக்க மனப்பான்மை கொண்ட, போலித் தனம் நிறைந்த பேரரசுகளான அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் மட்டுமல்ல. இத்தகைய அடை யாளங்கள் ஏதுமற்ற சிறு சிறு பிராந்திய நாடுகளும் தான் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் கண்டனங்களை முனை மழுங்கச் செய்யும் குற்றச்சாட்டுகளை இந்தியா தயாரித்து வைத்திருந்தாலும்கூட அத்தகைய குற்றச் சாட்டுகள் எவையும் மேற்கு ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த சிறு சிறு நாடுகளின் குற்றச்சாட்டுகளை முனை மழுங்கச் செய்ய இயலாதவை ஆகும்.

தீவிரவாதம் பொங்கி வழியும்போது

உள்நாட்டு தீவிரவாதத்தைத் தூண்டிவிட்ட பிறகு அதனால் வெளிநாட்டு உறவுகள் பாதிக்காமல் இருக்கும் படி அதை கட்டுக்குள் வைத்திருக்க  இயலுமா என்பது அதனைவிட ஒரு முக்கியமான கேள்வியாக இருப்பதாகும். தீவிரவாத செயல்கள் பற்றிய வரலாற்று ரீதியிலான அனுபவத்தை இந்தியா மிகப் பெரிய அளவில் பெற்றுள்ளது. சில நேரங்களில் இந்தியா தீவிரவாதத்தை தூண்டியும் விட்டுள்ளது. பாகிஸ்தான் உருவாக்கி விட்டுள்ள தீவிரவாதத்தைக் கையாள்வதே இந்திய நாட்டின் மிகப் பெரிய வேலையாகப் போயுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு தொடக்க காலத்தில் இந்திய நாடு அளித்த ஆதரவு மிகப் பெரிய அளவில் தோல்வி அடைந்து விட்டது. இவற்றால் தீவிரவாதத்துடன் விளையாடுவது என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்ற முக்கியமான பாடம் இந்தியாவுக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்குப் பிறகும் சிறு சிறு தீவிரவாதக் குழுக்களின் எண்ணிக்கை இன்று இந்தியாவில் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இந்திய முஸ்லீம் மக்களின் வாழ்க்கை பா.ஜ.க. தலைமையிலான அரசினால் பல துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய தீவிர வாதக் குழுக்களும் அதை செய்து முடிப்பதற்கு தீர் மானித்துள்ளன. இந்தியாவுக்குள் வளர்ந்த தீவிரவாத சக்திகள் பற்றி அனைத்துலக சமூகம் ஏறத்தாழ சகிப்புத் தன்மையுடன் இருப்பதன் காரணமே, அனைத்து நடைமுறைகளின் நோக்கிலும் இந்த சக்திகளின் செயல்பாடுகள் இந்திய நாட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள தீவிர வாதக் குழுக்களிடையே காணப்படும் முக்கியமான வேறுபாடே அதுதான். பாகிஸ்தான் அரசின் தீவிர ஒத்துழைப்புடன் அந்நாட்டில் வளர்ந்த தீவிரவாதம் மற்ற நாடுகளிலும் நுழைந்து அவற்றின்மீது தீவிர வன்செயல்களை கட்டவிழ்த்து விடுகின்றது. ஆனால், இந்தியாவில் வளர்ந்த தீவிரவாதமும் சகிப்புத் தன்மை இன்மையும் தீவிரவாதமாக வெளிப் படவில்லை. என்பதோடு தேச, பன்னாட்டு எல்லை களுக்குள்ளே சிதறி அமைந்தவை அல்ல அவை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

மேலும் இந்தியாவில் வெளிப்படும் தீவிரவாதத் துக்கு, (எப்போதும் ஆளும் கட்சி அவ்வப்போது காட்டும் சகிப்புத் தன்மையைத் தவிர) அரசின் ஆதரவு கிடைப்பதில்லை. அத்தகைய தீவிரவாதத் தினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளின் கூர்மை பல்வேறு உள்நாட்டு சோதனைகள் மற்றும் கட்டுப் பாடுகளால் முனை மழுங்கி போகச் செய்யப்படுகிறது. ஆனால், தீவிரவாதமும் மதவெறியும் ஆளும் கட்சியினால் சகித்துக் கொள்ளப்படுவது வளர்ந்து கொண்டே வருகிறது என்பதைப் பார்க்கும்போது நாட்டின் எல்லைகளுக்கு வெளியே உள்ள இடங்களிலும் அவற்றின் கொந்தளிப்பு வெளிப்படுவது அயல்நாட்டுக் கொள்கையில் பெரும் விளைவுகளை கட்டாயமாக ஏற்படுத்தவே செய்யும். காஷ்மீர் பற்றிய இந்திய கொள்கைகளுக்கு உலக அளவில் எழுந்த எதிர்வினைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டால், குறிப்பாக 2014ஆம் ஆண்டில் இருந்து இந்திய முஸ்லீம்கள்மீது வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் எவ்வளவு நிச்சயமாக தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகின்றன என்பது புலப்படும். இந்தியாவின் காஷ்மீர் கொள்கை மீது சில விமர் சனங்கள், குறிப்பாக முஸ்லீம் நாடுகளின் விமர் சனங்கள் வந்தபோது, மிக மிக நடைமுறை சாத்திய மான நோக்கங்களுக்காக இப்பிரச்சினைகள் முக்கிய மானவையாக எடுத்துக் கொள்ளப்படாமல் ஒதுக்கப் பட்டு விட்டது. இன்னமும் கூறப் போனால் 2014இல் நரேந்திர மோடி அரசு வந்த பிறகு இஸ்லாம் நாடுகளு டனான இந்திய நாட்டின் உறவுகள் மேம்பட்டு தான் வந்துள்ளன. இது என்ன பொருளைத் தருகிறது என்பதை ஒளிவுமறைவின்றி நேரடியாக அது தெரிவிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டில் என்ன நடக்கிறதோ அது கொதி நிலைக்கு செல்லாமலும் உள்நாட்டிலேயே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போதும் வெளிநாட்டினர் அத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தராமல் ஏறக்குறைய அவற்றை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்திய முஸ்லீம்கள், இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளால் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது பற்றிய அயல்நாட்டு விமர்சனங்களை வாயடைக்கச் செய்தாலும்கூட இஸ்லாம் மதத்தைப்பற்றி பொத்தாம் பொதுவாக மிக மிக இழிவாக பேசுவதை பொறுத்துக் கொள்ள அவர்களால் முடியாது. எனவே விடை காண்பதற்காக நம் முன் உள்ள இரண்டு கேள்விகளில் ஒன்று இந்தியாவில் பேசப்படும் முஸ்லீம்களுக்கு எதிரான பேச்சுக்களைப் பற்றிய சூட்டை கொதி நிலைக்குக் கீழே வைத்துக் கொண்டிருக்க முடியுமா என்பது ஒன்று. இரண்டாவது கேள்வி: அரசியல் ரீதியிலான மிகவும் சவுகரியமான முஸ்லீம்களுக்கு எதிரான பரப்புரை இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிறகு, அவற்றின் மிச்சம் மீதி, பொருளளவிலாவது அல்லது பரப்புரையளவிலாவது, இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இயலுமா என்பதுதான்.

மேற்கு ஆசிய நாடுகள் மேற்கு நாடுகளைப் போன்றவை அல்ல

இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றியோ அல்லது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற இதர பிரச்சினைகள் பற்றியோ அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் விமர்சனங்களுக்கு இந்தியா எவ்வாறு எதிர்வினையாற்றியது என்பதற்கும், முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளின் விமர்சனங்களுக்கு இந்திய தூதர்கள் நேரில் வந்து மன்னிப்பு கேட்டுக் கொள்ளப்படச் செய்தது பற்றி இந்தியா ஆற்றிய எதிர்வினைக்கும் இடையே கவனிக்கத் தக்கதொரு வேறுபாடு உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் போலித்தனமாக செயல்படுகின்றன என்ற இந்தியாவின் குற்றச்சாட்டு இஸ்லாம் நாடுகளுக்கும் பொருந்தும் என்றாலும் இவைபற்றிய இந்தியாவின் எதிர்வினைகள் மிகவும் மாறுபட்டவையாக இருப்பதன் காரணம் என்ன? அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் விமர்சனங் களைப் புறக்கணிப்பதால் ஏற்பட இயன்ற பொருளா தார இழப்பு மிக மிக அதிகமானதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அந்நாடுகளில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த இந்தியர்கள் வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதும் ஒன்று. நிச்சயமாகக் கூறுவதானால், பணியாற்றும் இந்தி யர்கள் மூலம் இந்தியாவுக்குக் கிடைக் கக் கூடிய அந்நிய செலாவணி மற்றும் எரிபொருள் சக்தி ஆகியவை இன்றியமையாதபடி இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றன. அது போன்ற இதர மற்ற காரணங்களுக்காக அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் உதவிகளும் இந்தியாவுக்கு தேவை யானவையே ஆகும். ஆனால் அந்த நாடுகள் மிகவும் முன்னேற்றம் அடைந்த ஜனநாயக நாடுகள் என்ப தால் இந்தியா மீதோ அல்லது அந் நாடுகளில் வாழும் இந்திய மக்கள் மீதோ யதேச்சதி காரமான பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை.

ஆனால் இஸ்லாம் இறைதூதர் முகமது நபி இழிவுபடுத்தப்பட்டால் மேற்கு ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை அவை அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் போல் மென்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டா. மாறுபட்ட முறையில் கூறுவ தானால் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக இந்தியா பயன்படுத்திய அதே மொழியை இஸ்லாம் நாடுகளுக்கும் இந்தியா பயன்படுத்துமே யானால், புதுடில்லிமீது பொருளாதாரத் தடைகளை இஸ்லாம் நாடுகள் விதிக்கச் செய்யும் நிலை ஏற்படும். இரண்டாவதாக இந்தியாவும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளும் பல்வேறுபட்ட காரணங்களுக்காக ஒருவருக்கொருவர் தேவைப்படுகின்றனர்.

சீனா விடுத்துள்ள சவாலை எதிர்த்து நின்று சமாளிப்பதற்கு அமெரிக்கா, மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையே இரு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டி இருக்கின்றன. ஆனால் இந்தியா, மேற்காசிய நாடுகளின் உறவில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய தேவை இல்லை. மேற்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியா தேவைப்படு வதைவிட, இந்தியாவுக்கு மேற்காசிய நாடுகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை மிகுந்த பயன் தருவதாகவும் எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்ததாகவும் இருந்தது. ஒரு மாதத்திற்கு முன் புதுடில்லியின் கவனத்தைக் கவரு வதற்கு உலக நாடுகள் வரிசையில் காத்து நின்றன என்று கூடக் கூறலாம். ஆனால் இன்றோ இந்திய அயல்நாட்டுத் தூதர்கள் மன்னிப்பு கேட்பதற்கு அழைக்கப்படுகின்றனர். தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையை சமாளித்து மேற்காசிய நாடு களுடனான இந்திய நாட்டு உறவை புதுடில்லியில் உள்ள ராஜதந்திரிகள் சரி செய்து விடுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அண்மை யில் நடந்த இந்த நிகழ்ச்சி, கட்டுப்படுத்தப்படாத இந்தியாவின் உள்நாட்டு தீவிரவாதம் இந்தியாவின் அயல்நாட்டு அரசியல் நோக்கங்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அடிக்கோடிட் டுக் காட்டியுள்ளது.

நன்றி: 'தி இந்து' 9.6.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment