"எது உங்கள் உலகம்?" நல்ல கேள்விதான்! (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

"எது உங்கள் உலகம்?" நல்ல கேள்விதான்! (1)

 "எது உங்கள் உலகம்?"  நல்ல கேள்விதான்! (1)

வாழ்க்கையில் பலரும் மனக்கவலையோடு வாழ்ந்து கொண்டிருப்பது, நியாயமான காரணங் களை விட கற்பனையாக நாமே தேவையற்று வரவழைத்துக் கொள்ளும் கவலைகளே - கற்பனைகளும், ஊகங்களும் கலந்து முளைத்துத் துளிர்விட்டு மிரட்டும் கவலைகளே அதிகம் என்கிறார் ஜென் (Zen) புத்தநெறி அறிஞர் ஒருவர்.

புதிதாக ஜப்பானிலிருந்து எழுதி வெளி யாகியுள்ள 'Don't worry' என்ற தலைப்பில் 'ஷண்மியோமாசூனோ' என்ற பவுத்த சிந்தனை யாளரின் நூல் பல்வேறு சிறந்த அனுபவ உரைகளை சிறு சிறு தேன் துளிகளாக 48 கட்டுரைகளைக் கொண்டதாக உள்ளது!

'இளைப்பாறிட' மிகவும் நல்ல நூல். படித்த பிறகு சிந்தித்து அசைபோட்டு மனதில் இருத்தி, வாழ்வில் பயன்படுத்திப் பார்த்துப் பயன் பெற வேண்டிய கருத்துரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது!

"நாம் மூன்று உலகில் வாழ்கிறோம்" என்கிறது  புத்த ஜென்நெறி என்னும் நன்னெறி. 

முதல் உலகம் கடந்த காலம்   (Past) 

இரண்டாவது எதிர்காலம் (Future)

மூன்றாவது நடைமுறையில் உள்ள நிகழ்காலம் (Present)

இவற்றில் மிகவும் உண்மையாக நாம் வாழ்வது நிகழ்காலத்தில்தான். ஏனோ நம்மில் பலரும்  மற்ற இரு வேறு உலகைப் பற்றியே சிந்தித்து - வருந்தியும், பயந்தும், கற்பனை பீதி களில் ஈடுபட்டு - அச்சத்தின் மடியில் தேவையற்று விழுந்து அழுது புரளும் அவலம் உள்ளது

தற்போது கையில் உள்ளவற்றை எதிர் கொள்வது, பயன் பெறுவது பற்றியே சிந்தித்து செயலாற்றுவதே சரியான அணுகுமுறை. வரு முன் காப்பது தான் தேவையே ஒழிய, வருவ தெல்லாம் ஆபத்து என்று அதிக பயத்தில் தேவையற்ற மனக் குழப்பத்திற்கு ஆளாகக் கூடாது!

நடந்தவற்றிலிருந்து பாடம் பெறலாமே தவிர, அவற்றை எண்ணி, மீண்டும் அப்படி ஒன்று நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சி சாவதில் அர்த்தமே இல்லை!

பல பேருக்கு கடந்தகாலம் என்பது - என்றும் அச்சுறுத்தி நிகழ்கால இன்பத்தைப் பறிக்கும் மின்னலாகவும் ஆகி விடுகிறது!

எதிர்காலம் என்பதை எண்ணி ஏதோ பாம்புப் புற்றில் கையை விடுவது போன்ற பயந்தாங் கொள்ளித் தனத்தையும் உருவாக்கிக் கொண்டு அச்சத்திலிருந்து வெளிவர முடியாதபடி ஆக்கி மகிழ்ச்சியை விரட்டி அடிக்கிறது. 

'ஜென்' பவுத்தத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.

"உன் மூச்சில் நீ எப்போதும் வாழ்ந்து கொள்"

மேல் எழுந்த வாரியாகப் படித்தால் வெகுச் சாதாரணமாய் இது தோன்றும்!

ஆனால், நிகழ்காலம் மட்டுமே உனக்கு உரிமையான கைக்குள் இருக்கும் பறவை என்பதை விளக்கவே இது!

மற்றவை பறந்து போனது அல்லது இறந்து போனது; வேறொன்றை எதிர்பார்ப்பது - பறந்து வராதா என்று ஏக்கத்துடன் பார்க்க வைக்கும்!

ஆனால் 'மூச்சில் வாழ்ந்திரு' என்பது நிகழ் காலம் உனக்கு முக்கியம் என்பதைப் புரிய வைக்கும் புத்தாக்க அனுபவ அறிவுரையாகும்!

கடத்துபோன - பழையதை பற்றி இப்போது சிந்தித்து  பயனில்லை - (வேண்டுமானால் அது உரத்திற்குப் பயன்பட முடியும் -  உணவாக எப்போதும் பயன்பட முடியாதே!)

எதிர்காலம் பிறக்காத  - கருவுறாத நிலையில் கற்பனைக் குதிரை சவாரிதானே!

எனவே, நிகழ் காலத்தைக் கெட்டியாகப் பிடித்து, - திமிறிப் போக முடியாமல் காளையின் திமிலைப்பிடித்து அடக்கும் நம் இளைய காளையர்களைப் போல  - நிகழ்காலத்தைச் சிறப்பாகப் பிடித்து மிகுபயன் அனுபவிக்க அதை சாறாகப் பிழிந்து பருகி, பயன் பெற முயற்சியுங்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment