இதற்குப் பெயரென்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

இதற்குப் பெயரென்ன?

02.08.1925- குடிஅரசிலிருந்து...  

சுயராஜ்யக் கட்சியார் காங்கிரஸ் ஒத்துழையாமையைக் கைவிட்ட போதிலும் தாங்கள் ஒத்துழையாமையை விடப்போவதில்லையென்றும், மிதவாதக் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியும் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகவும், ஒத்துழையா தாருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்றும் தேர்தல் சமயங்களில் மேடைமீது நின்று பேசி பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறார்கள். சுயராஜ்யக் கட்சியின் எல்லா இந்தியத் தலைவரான மோதிலால்நேரு அவர்கள் திடீரென்று சர்க்காரால் ஏற்படுத்தப்பட்ட ராணுவக் கமிட்டியில் அங்கத்தினர் வேலையை ஒப்புக்கொண்டார். இதற்கு மாதக்கணக்கான சம்பளம் வராவிட்டாலும் தினக்கணக்கான சம்பளம் உண்டு. தினம் 100, 200 வீதம் சர்க்காரார் கொடுப்பார்கள். மட்டிமண் கமிட்டியில் அங்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி சர்க்காரார் சொன்னபோதும், தங்கள் அபிப்பிராயத்தையாவது சொல்லுங்கள் என்று கேட்டபோதும், அங்கம் பெற முடியாதென்றும், சர்க்கார் கமிட்டியின் முன் சாட்சியம் சொல்ல முடியாதென்றும் சொன்னவர் அதற்குள்ளாக சர்க்காரிடத்தில் என்ன நல்ல யோக்கியதையைக் கண்டுவிட்டார்? சர்க்காரோடு ஒத்தழைத்து கமிட்டியில் அங்கம் பெற்று சர்க்கார் அதிகாரிகளோடு ஊர் ஊராய்த் திரிந்து சாட்சிகளை விசாரித்து கூட்டு மெம்பர்களுடைய அபிப்பிராயத்தோடு கலந்தோ அல்லது தனி யாதாது எழுதுவதன் மூலமாகவோ தன்னுடைய அபிப்பிராயத்தை வெளிப்படுத்தப் போகிறார் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. ஜின்னா, சாஸ்திரி, சிவசாமி அய்யர், ராமலிங்கம் செட்டியார், ராமசாமி முதலியார் முதலியவர்கள் இதைவிட வேறு என்ன செய்தார்கள்? 

செய்யப் போகிறார்கள்? நேரு அவர்களுக்கு ராணுவக்கமிட்டி முக்கிய மானதாகத் தோன்றலாம். நாளைக்கு ஏ. ரெங்கசாமி அய்யங்காருக்கும், எம்.கே. ஆச்சாரியாருக்கும் சில பேருக்கு உத்தியோகம் சம்பாதிப்பதும் சில ஜாதியார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுவதற்கும் ஒரு கமிட்டி தேச நன்மையை உத்தேசித்து ஏற்பாடு செய்ய வேண்டியது முறையே அவசியம் என்பதாகத் தோன்றலாம். அது சரியா, தப்பா என்கிற விஷயத்தைப்பற்றி நமக்கே கவலை இல்லாவிட்டாலும் இது ஒத்துழைப்பா, ஒத்துழையாமையா என்பதுதான் தெரியவேண்டும். நேரு அவர்கள் ராணுவக்கமிட்டியில் தன்னுடைய அபிப்பிராயங்களை எழுதி இந்தியர்களுக்கு ராணுவ உத்தியோகம் வாங்கிக் கொடுத்துவிட்டால் அவர்களைக் கொண்டே இந்தியாவை ஜெயித்து விடலாமென்றும் நினைக்கிறாரா? அல்லது வெள்ளைக்காரப் பெரிய ராணுவ அதிகாரிகள் நம்முடைய ராணுவ அதிகாரிகளிடம் நம்மைச் சுடு என்று சொன்னால் இந்திய ராணுவ அதிகாரிகள் சுடாமல் இருப்பார்களா என்று நினைக்கிறாரா? அல்லது சில பேருக்குப் பெரிய பெரிய சம்பளம் வாங்கிக் கொடுத்துவிட்டால் அவர்கள் யோக்கியர்களாய் விடுவார்கள் என்றாவது இந்தியாவின் தரித்திரமே அதனால் ஒழிந்து போய்விடு மென்றாவது நினைக்கிறாரா? பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பது போல  மகாத்மா காந்தி தங்கள் வசம் இருக்கிறார்களென்று இறுமாப்புடன் தங்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் வேதவாக்கென்று நினைத்துக் கொண்டு தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிவார்களேயானால் இந்தியர்களெல்லாம் சுத்தப் பைத்தியக்காரர்கள், முட்டாள்கள் என்று இவர்கள் நினைத்திருப்பதாகத்தான் அதற்கு அர்த்தம். 

மகாத்மாகாந்தியை வேண்டுமானால் இவர்கள் கஷ்ட நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிடக்கூடுமேயல்லாமல் மகாத்மா இவர்கள் பக்கத்திலிருக் கிற காரணத்தினால் இவர்கள் சொன்ன தெல்லாம் ஜனங்கள் கேட்பார்களென்று நினைப்பது பகற்கனவாகத்தான் முடியும்.


No comments:

Post a Comment