'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 24, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!

 கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?“விடுதலை”ஆபீஸ் சோதனை

பொதுஜனங்கள் பரபரப்பு

 3-தினப் பத்திரிகைகள் பறிமுதல் 

(நமது நிருபர்)

ஈரோடு, அக்.6- நேற்று காலை சென்னையிலிருந்து - சி.அய்.டி.இன்ஸ்பெக்டரும் ஒரு சி. அய். டி.சப் இன்ஸ்பெக்டரும், ஒரு ஹெட்கான்ஸ்டேபிளும் ஈரோட்டிற்கு வந்திருந்தார்கள்.

இவர்கள் வந்திருப்பதை எப்படியோ அறிந்த பொது ஜனங்கள் தோழர் ஈ. வெ. ராமசாமி அவர்கள் இன்று கைது செய்யப்படப்போகிறார் என்று பேசிக்கொண்டார்கள். இதனால் ஊரெல்லம் மிகுந்த பரபரப்படைந்திருந்தது. இதை அறிந்த தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் விடை பெற்றுக்கொண்டு உடுப்பு படுக்கையுடன் வந்து “விடுதலை” ஆபீசில் காத்துக் கொண்டிருந்தார்.

சரியாக மாலை 3.30 - மணிக்கு ஒரு சி. அய். டி. இன்ஸ்பெக்டரும், ஒரு சி.அய்.டி சப் இன்ஸ்பெக்டரும், உள்ளூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், சில கான்ஸ்டே பிள்களும் ‘விடுதலை’ ஆபீசுக்கு வந்தார்கள். வந்து சில இடங்களில் சோதனை செய்து 19.8.1938, 27.8.1938, 30.8.1938ஆம் தேதி ‘விடுதலை’ப் பத்திரிகைகளைப் பறிமுதல் செய்து அந்தத் தேதி பத்திரிகைகள் எவ்வளவு இருந்ததோ அவ்வளவையும் எடுத்துக் கொண்டார்கள். பின் சிலகணக்குப் புஸ்தகங்களையும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

“விடுதலை” ஆபிசிற்கு போலீஸ் ஆபிசர்கள் 

போயிருக்கிறார்கள் என்ற செய்தி ஊரெங்கும் பரவிவிட தோழர் ஈ.வெ.ராமசாமி கைது செய்யப்படப் போகிறார் என்று ஜனங்கள் நினைந்து சுமார் ஆயிரம் பேர்களுக்கு மேல ‘விடுதலை’ ஆபீசை முற்றுகை போட்டது போல்கூடி விட்டார்கள். போலிஸ் ஆபீசர்கள் தோழர் ஈ.வெ.ராமசாமியை நாங்கள் கைது செய்யப் போவதில்லை என்று கூறியும் எவரும் கலையாமல் அங்கேயே குழுமி யிருந்தார்கள். சுமார் இரவு 8 மணிக்கு போலீஸ் ஆபீசர்கள் “விடுதலை”ஆபீசை விட்டுப் போனார்கள். அப்பொழுதும் ஜனங்கள் அவ்விடத்தை விட்டுப் போகாமலே இருந்தார்கள். பின் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் வெளியில் வந்து ஜனங்களிடம் தன்னை இதுவரை கைது செய்யவில்லையென்றும் யாவரும் தயவு செய்து போகும் படியும் கேட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். பொதுமக்களனைவரும் அவரைத் தொடர்ந்து அவர் வீட்டிற்குச் சென்றார்கள், எவ்வளவோ சொல்லியும் சென்னைக்கு இங்கிருந்து 12.30 மணிக்கு செல்லும் கொச்சின் எக்ஸ்பிரஸ் (3ஆவது மெயில் வண்டி) போகும் வரை யாரும் போகாமல் காத்திருந்தார்கள். பெரிய அக்ரகாரம், பவானி, ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று இரவு 1 மணி வரை காத்திருந்து திரும்பி வந்தார்கள். சிலர் மாலைகளுடன் ஈ.வெ.ரா.வை வழியனுப்ப வந்திருந்தார்கள்.

ஆகவே நேற்று வந்து போலீசார் சோதனை போட்டு திரும்பிச் சென்றதிலிருந்து சிலரை அரஸ்ட்டு செய்யவும் ‘விடுதலை’ பத்திரிகையை எப்படியாவது நிறுத்துவதற்கும் காங்கிரஸ் மந்திரிகள் முயற்சி செய்து வருகிறார்கள் போலிருக்கிறதென்று பொது ஜனங்கள் பேசிக்கொண்டு சென்றார்கள். போலீஸ் அதிகாரிகள் பேச்சுக்களில் இருந்தும் நடவடிக்கை களிலிருந்தும் கூடிய சீக்கிரம் ‘விடுதலை’’ மீது வழக்கு தொடரப்படலாம் என்று யூகிக்க வேண்டியிருக்கிறது.

(குடி அரசு, 9.10.1938) 

 ‘விடுதலை’ ராஜ துரோக வழக்கு

சர். பன்னீர்செல்வம் வாதம்

கோயமுத்தூர், நவ 21- ‘’விடுதலை’ பிரிண்டரும் பப்ளிஷருமான மானமிகு தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி மீதும் ஆசிரியர் பண்டிதர் என். முத்துசாமி பிள்ளை மீதும் தொடரப்பட்டு இருக்கும் ராஜ துரோக வழக்கு இன்று காலை கோவையில் அடிஷனல் செஷன்ஸ் ஜட்ஜ் தோழர் எம் ஏ.டி.கோயலோ முன்பு விசாரணை நடந்தது.

கோர்ட்டில் ஏராளமான ஜனங்கள் பல இடங்களிலிருந்தும் வந்து கூடியிருந்தார்கள். எதிரிகளுக்காக ஸர் எ.டி. பன்னீர்செல்வம், சேலம் அட்வகேட் தோழர் நெட்டோ, ராவ்சாஹிப், வேணுகோபால் பிள்ளை, கோவை அட்வகேட் செந்தாமரைக் கண்ணன் முதலியவர்களும் மற்றும் ஈரோடு, தஞ்சை முதலிய இடங்களில் இருந்து பல வக்கீல்களும் மற்றும் இவ்வழக்கில் சாட்சியங் கூற ராவ்சாஹிப்கள், அய்.குமாரசாமி பிள்ளை, டி.வி உமா மகேஸ்வரம் பிள்ளை, பி.ஏ.பி.எல், தோழர்கள் எம் சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.பி.எல்., 

கே. சுப்பிரமணியபிள்ளை எம்.ஏ.எம்.எல், டி. குப்புசாமி, காஞ்சிபுரம் ஸ்ரீராசு சுவாமிகள், திருச்செங்கோடு பாலக்காடு சங்கரப் பணிக்கர், ராதாகிருஷ்ண பணிக்கர், பி.சிதம்பரம் பிள்ளை முதலிய இன்னும் பலர் விஜயம் செய்திருந்தார்கள். பிராசிக்கூட்டர் தோழர் வி.எல். எத்திராஜூம் சென்னை அட்வகேட் எ.என். சிவசாமி நாதனும் ஆஜராயிருந்தார்கள்.

 இரண்டு ஆட்சேபனைகள்

ஆரம்பத்திலேயே எதிர்த்தரப்பு பாரிஸ்டர் ஸர். எ.டி.பன்னீர்செல்வம் இரண்டு ஆட்சேபனைகளை எழுப்பினார். “தமிழ் நண்பர்களே’’ என விவாதத்துக்கு இடமான கட்டுரை. பிராசிக்கூயூஷன் தலைப்பு கொடுத்திருப்பது சரியல்லவென்றும் “ஓ தமிழர்களே” என்றே இருக்கவேண்டுமென்றும் ஸர்.பன்னீர்செல்வம் கூறினார்.               (தொடரும்)

 

No comments:

Post a Comment