பழங்குடி இனத்தில் முதல் கப்பல்படை பெண் அதிகாரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

பழங்குடி இனத்தில் முதல் கப்பல்படை பெண் அதிகாரி

நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள அச்சனக்கல் கிராமத்தில் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர் மீரா. இந்தியக் கப்பல் படை பிரிவில், அவர்கள் சமூகத்தில் இருந்து தேர்வான முதல் பெண் அதிகாரி. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள எஜிமாலா தேசிய கப்பல் படை தளத்தில் 6 மாதம் குறுகிய காலப் பயிற்சியை (short term training) முடித்தவர், தற்போது சப்-லெப்டினென்டாக கொச்சி கப்பல் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கப்பல் படை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள மீராவிடம் பேசியபோது... ‘‘கேத்தியில் உள்ள அச்சனக்கல் எனது ஊர்.  என் அப்பாவின் பெயர் ரவீந்திரநாத். அம்மா மாலதி. அப்பாவும் இந்திய ராணுவத்தில்தான் பணியில் இருக்கிறார். அவர் பணி நிமித்தமாக பல மாநிலங்களுக்கு மாற்றலாகி செல்லும் போது நானும் அவருடன் கூடவே பயணித்திருக்கிறேன். அப்போது அவர் பணியாற்றிய ராணுவப் பகுதியில் பார்த்த நிகழ்வுகள் என்னையும் ராணுவத்தில் இணைவதற்கான ஆர்வத்தை தூண்டியது.

பிளஸ் 2 படிப்பை முடித்ததும் பொறியியல் கல்லூரியில் இணைந்து பொறியியல் பட்டதாரியானேன். பிறகு நாளிதழ்களில் வெளியான நேவல் சார்ட் சர்வீஸ் கமிஷன் தேர்வில் பங்கேற்று தேர்வானதுடன், கேரள மாநிலம் ஏழுமலாவில் உள்ள இன்டியன் நேவல் அகாடமியில் 22 வாரங்கள் தங்கி அதிகாரியாக பயிற்சி எடுத்தேன். எனக்கு இதில் கடற்படை ஆய்வாளர் பதவி (Naval Armament Inpspector) வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி முடிந்ததும் ‘பாஸிங்அவுட் பரேட்’ நேவல் அகாடமி வளாகத்தில் கடந்த மே  மாதம் 28ல் நடந்தது. அந்த நாளுக்காகவே நான் நிறைய ஆவலோடு காத்திருந்தேன். என் அம்மாவும் அப்பாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்றார்.

கப்பல் படையில் அதிகாரியாக பெண்கள் வேலை பார்ப்பது சுலபமா என்ற கேள்விக்கு சிரித்தவர், கப்பல் படையை பொறுத்தவரை, பெண்கள் சப்போர்டிங் ரோலில் மட்டுமே இருக்கின்றனர். இன்னும் கமாண்டிங் ரோலுக்குள் வரவில்லை. அதாவது, நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்டர், நேவல் கன்ஸ்ரக்ஷன் ஆபீஸர், நேவல் எஜுகேஷன் இன்ஸ்பெக்டர், லாஜிஸ்டிக், பினான்சியல் மற்றும் அட்மினிட்ரேஷன் போன்ற ரோல்களில் மட்டுமே பெண்கள் கடற்படை தளத்தில் பணியாற்றுகிறார்கள். இவை தவிர்த்து எக்ஸிகியூட்டிவ் ரோல் என்கிற ஒன்றும் உண்டு. அது வருடக் கணக்காக கப்பலில் பயணிக்கும் வேலை. அதில் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள்.

போர் கப்பல் கடலுக்குள் செல்லும்போது வருகிற தாக்குதல்கள், சந்தேகத்திற்குரிய கப்பல்களை கண்காணிப்பது (suspicious)  போன்ற பணிகளிலும் ஆண் அதிகாரிகள் மட்டுமே இருக்கின்றனர். பெண்களை இன்னும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தவில்லை. கப்பலில் இருந்து ஏர் க்ராஃப்ட் மூலம் இணைந்து மேலே பறக்கும் நேவி பைலட்ஸ் பணியில் இரண்டு பெண்கள் மிகச் சமீபத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தங்களுக்கு கப்பல் படை பிரிவில் வழங்கப்பட்டுள்ள பணி குறித்து விளக்குங்கள் எனக் கேட்ட போது... போர் கப்பல்களில் இணைக்கப்படும் ஆயுத தளவாடங்களை இயக்கி ஃபயர் செய்து, அவற்றின் செயல்பாடு மற்றும் தரத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் பணியில் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இடையிடையே எங்களை கப்பலில் இணைத்தும் பணிகள் வழங்கப்படும். தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி சப்லெஃப்டினென்ட். அதன் பிறகே லெஃப்டினென்ட், கேப்டன் என பதவி  உயர்வுகள் கிடைக்கும்.

பயிற்சியில் உள்ள ஷார்ட் டேர்ம், லாங் டேர்ம் பயிற்சி பற்றி விளக்குங்கள் என்ற போது... நான்கு ஆண்டு பொறியியல் படிப்பை முடித்து தேர்வானவர்கள் எடுக்கும் பயிற்சி ஷார்ட் டேர்ம் டிரெயினிங் என அழைக்கப்படும். இதில் 22 வாரங்கள் மட்டுமே பயிற்சி இருக்கும். ஷார்ட் டேர்ம் பயிற்சி எடுத்தவர்களுக்கு 14 ஆண்டுகள் மட்டுமே பணி நியமனம் வழங்கப்படுகிறது. வாட்டர் மேன் ஷிப் 

டிரெயினிங் பயிற்சிகள் இதில் இருக்கும். கப்பல்படை சார்ந்த அடிப்படை படிப்புடன், லீடர்ஷிப் மேனேஜ்மென்ட், உடற்பயிற்சி, விளையாட்டு, நீச்சல் எனவும் பயிற்சிகள் உண்டு. பயிற்சிகள் அனைத்தும் கடலை ஒட்டி இருக்கும் பேக் வாட்டரில் நடைபெறும். பயிற்சியின்போது அனுபவத்திற்காக சில மாதங்கள் கப்பலுக்கு சென்று வருவோம்.

லாங் டேர்ம் பயிற்சி  என்பது +2 முடித்ததும் தேர்வானவர்களுக்கு வழங்கப்படுவது. இதில் பயிற்சியோடு 4 வருடம் இஞ்சினியரிங் படிப்பையும் சேர்த்து வழங்குவார்கள். இவர்கள் ஷார்ட் டேர்ம் பயிற்சியை எடுத்தவர்களைவிட அதிகம் கற்றுக்கொள்வார்கள். இவர்களுக்கு இஞ்சினியரிங் கல்லூரிகளில் இருப்பது போலவே எக்ஸிக்யூட்டிவ் இஞ்சினியரிங், மெக்கானிக்கல் இஞ்சினியரிங், எலெக்ட்ரிகல் இஞ்சினியரிங் என பிரிவுகள் உண்டு. நான்கு ஆண்டு படிப்பை முடித்ததும் இஞ்சினியரிங் கிராஜுவேஷன் சான்றிதழ் வழங்கப்படும். பதவி காலம் பெர்மெனன்ட் கமிஷன் அடிப்படையில் 58 வயது வரை இவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பெண்கள் ராணுவத்திற்குள் நுழைவது கடினமா என்ற நம் கேள்விக்கு, கடினமும் இல்லை. சுலபமும் இல்லை என்றவர், ராணுவத்திற்கு வரவேண்டும் என்கிற எண்ணம் மனதில் இருந்தாலே போதும். அந்த ஃபயர் மனதில் இருந்தால் முயற்சிக்கலாம், மற்றபடி என்னை நான் இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன் என்ற எண்ணமும் கூடவே இருந்தால்தான் ஆரம்ப கால பயிற்சிகளில் நிலைத்து நிற்போம். மற்றபடி குடும்பத்தோடு நம் நேரத்தை செலவு செய்வதெல்லாம் இதில் முடியாது. ராணுவத்தில் சேருவதற்கு ஹிந்தி  மொழி அவசியம் என்ற கட்டாயம் கிடையாது. மொழி பயிற்சிகள் உள்ளே வந்ததும் தானாகவே வந்துவிடும். படுகர் சமூகத்தில் இருந்து தேர்வான முதல் பெண் கப்பல் படை அதிகாரியா நீங்கள் எனக் கேட்டபோது...‘‘ஆமாம் என ஆமோதித்தவர், எங்கள் சமூகத்தில் பெண்கள் பலர் படித்து வெளியில் வந்தாலும் அவர்கள் விவசாயம் சார்ந்த பட்டப் படிப்பு, ஆசிரியர் வேலை, அய்.டி. என்றுதான் பணியில் இருக்கின்றார்கள். விமானப் படை அதிகாரியாக  (Air Force Officer) ஒருவர் மட்டுமே படுகர் சமூகத்தில்  இருக்கிறார். மற்றபடி நேவியில் நான் தான் முதல் பெண் அதிகாரி’’ என்று கூறினார்.

No comments:

Post a Comment