510 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 20, 2022

510 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல்

சென்னை, ஜூன் 20  தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 30.4.2022 வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு 9.7.2022 அன்று தற்செயல் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிக்கை 20.6.2022 அன்று வெளியிடப்படும். அன்றே வேட்புமனு தாக்கல் துவங்கும். வாக்குப்பதிவு 9.7.2022 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 12.7.2022 அன்று நடைபெறும்.

498 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும். இப்பதவியிடங்களில் 34 பதவியிடங்கள் கட்சி அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறும். இத்தேர்தல்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1022 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1041 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கென 279 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கென 12 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

நடத்தை விதிகள்: அனைத்து தேர்தல் நடக்கும் ஒன்றியம், கிராமம், மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி, ஊராட்சிகள் அனைத்துக் கும் தேர்தல் நேர்வில் தொடர்புடைய முழுமைக்கும் நடத்தை விதிகள் பொருந்தும். மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு எண் 36, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 10, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 15க்கும் தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் அட்டவணை: தேர்தல் அறிவிப்பு வெளியிடுதல் மற்றும் வேட்பு மனுக்கள் பெறுவதற்கான ஆரம்ப நாள்    20.6.2022 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

வேட்புமனுக்கள் பெற: கடைசி நாள் 27.6.2022 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை       

வேட்பு மனு பரிசீலனை: 28.6.2022 காலை 10 மணி

வேட்பு மனு திரும்ப பெறுதல்: 30.6.2022 மதியம் 3 மணி வரை

வாக்குப்பதிவு நாள்:  9.7.2022 காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 

வாக்கு எண்ணிக்கை துவங்கும் நாள்: 12.7.2022 காலை 8 மணி 

தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும் நாள்:  14.7.2022


No comments:

Post a Comment