இருள்விலக்கும் ஒளிக்கீற்றுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

இருள்விலக்கும் ஒளிக்கீற்றுகள்!

பேராசிரியர் முனைவர் 
ஜெ. ஹாஜாகனி

 "இந்திய நாடு அமைதியின் வீடு" என்று உலகுபோற்ற, ஓங்கு புகழோடு திகழ்ந்த நம் நாட்டில், அண்மைக்காலமாய் அரங்கேறி வரும் சில அமைதி கேடுகள் அன்பு வழிப்பட்ட இந்திய மக்களின் அகங்களில் அபாய எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கின்றன.

 ஈகைப் பெருநாள் தொழுகை நடந்த பள்ளிவாசல்கள் முன்பு கலவரங்கள், ராமநவமி ஊர்வலத்தில் பற்றவைக்கப்பட்ட பதற்றம், டில்லி ஜஹாங்கிர்புரியில் அரசு எந்திரத்தின் புல்டோசர்கள் ஆட்சியாளர்களின் வாகனங்களாகி, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முஸ்லிம்களின் வீடுகளை இடிக்கத் துடித்த அவலம்; ஹலால் இறைச்சிக் கடைகளுக்குத் தடை, பாங்கு சொல்லும் ஒலிபெருக்கிகளுக்குத் தடை, ஹிஜாப் அணியத் தடை என அண்மைக்காலமாக சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வன்மத்தோடு தீவிரப் போக்கினர் சிலர் தொடுத்து வரும் தாக்குதல்கள், சிறுபான்மைச் சமூகங்களை விரக்தியின் விளிம்பை நோக்கித் தள்ளிவரும் சூழலில், பாலை நிலத்தில் பனிச்சுமையாய், பீதி நெருப்பிடையே நீதியின் நிழலாய் நாம் காணும் நிகழ்வுகள் சில நமக்கு நெகிழ்வையும் ஆறுதலையும் தந்துள்ளன.

காந்தியாரின் தேசம் இது. நிச்சயம் இது காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையையும் இந்நிகழ்வுகள் விதைத்துள்ளன. மராட்டிய மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சிதான் தஸ்லா பிர்வாடி. இங்கு கடந்த மாதம் பஞ்சாயத் ராஜ் தினத்தன்று (ஏப். 24) கிராமசபை கூடுகிறது.

 இக்கிராமத்தின் மக்கள்தொகை 2,500 பேர். இதில் 600 முஸ்லிம் குடும்பங்களே உள்ளன. கிராமசபையில், "இக்கிராமத்தின் பள்ளிவாசலில் இருந்து ஒலிபெருக்கியை அரசாங்கம் அகற்றக்கூடாது, பாங்கோசை எங்கள் வாழ்வோடு கலந்த ஒன்று, காலையில் பாங்கு ஒலி கேட்டு விழிக்கிறோம், மதியம் பாங்கொலி கேட்டு உண்கிறோம், அந்தியில் பாங்கொலி கேட்டு அன்றைய வேலைகளை முடிக்கிறோம், மாலை பாங்கொலி கேட்டு இரவு உணவு உண்கிறோம், இரவு பாங்கொலிக்குப் பின் உறங்கி விடுகிறோம், எனவே பள்ளிவாசல் ஒலிபெருக்கியை அகற்றக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

 இப்பள்ளிவாசலின் இமாம் ஜாஹிர்பெக் மிர்சா, கிராமசபையில், "ஆட்சேபனை இருப்பின் பாங்கோசையின் அளவைக் குறைத்துக் கொள்வோம்' என்று கூறியதையும் தீர்மானத்தில் இணைத்துள்ளனர். ஆனால் எப்போதும்போல பள்ளிவாசல் பாங்கோசைத் தொடர கிராமசபைத் தலைவர் பாட்டீல் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் தூண்டுதல் உள்ளதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "வெளியில் நிலவும் விஷ அரசியலிலிருந்து எங்கள் கிராமத்தை வெகு தூரமாக வைக்கவே விரும்புகிறோம்" என்று பாட்டீல் பதில் உரைத்துள்ளார்.

 மதவாதச் சூட்டில் மானுடம் கருகும் நாட்டில், பாட்டீல் என்ற கிராமத் தலைவர் காட்டிய பாதை கனிவும், அன்பும் கடமையுணர்வும் கலந்தது என்றால் மிகையில்லை. காஞ்சி  பெரியவர் என்று போற்றப்படும் சந்திரசேகரேந்திரர் குறித்து ஒரு பிரபலமான செய்தி சமயநல்லிணக்கக் கூட்டங்களில் பேசப்படுவதை பலரும் அறிந்திருக்கலாம். எந்தப் பல்லக்கிலும் ஏறாமல் இந்திய நாட்டை மூன்று முறை நடைப்பயணமாகவே சுற்றி வந்த பெருமைக்கும் துறவுக்கும் உரியவர் என்று போற்றப்படும் அவரிடம் அவரது சீடர்கள் சிலர், "காஞ்சி மடத்திற்கு அருகிலிருக்கும் பள்ளிவாசலில் இருந்து வரும் பாங்கோசை மடத்தின் அனுஷ்டானங்களுக்கு இடையூறாக இருப்பதால் அந்தப் பள்ளிவாசலின் ஒலிபெருக்கியை அகற்றிடக் கோரிக்கை வைக்கலாமா" என்று அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் கோபமுற்ற காஞ்சி பெரியவர், "பள்ளிவாசலில் பாங்கு சொல்வதற்காக உள்ள ஒலிபெருக்கி ஒருபோதும் அகற்றப்படக்கூடாது" என்று கூறி அந்த பாங்கோசைக்கும் தனக்கும் உள்ள உணர்வார்ந்த தொடர்பையும் விரிவாகக் கூறி சீடர்களைப் பக்குவப்படுத்தியுள்ளார்.

 சமயத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வெறுப்பு நெருப்பை அன்பால் அணைக்கும் பண்பால் சுடர வேண்டும். அவர்களே நெருப்பை மூட்டுபவர்களாய் ஆகிவிட்டதும் எளிய மக்கள் எளிதில் தீப்பற்றும் பொருள்களாய் மாறிவிட்டதும் அவலமானது.

மகாராட்டிரத்தில் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனை, "பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகள் அகற்றப்படாவிட்டால் அனுமான் சலிசாவை அதைவிட அதிக ஓசையுடன் இசைப்போம்" என்று பதற்றத் தீயை பற்றவைக்கும் சூழலில், தஸ்லா பிர்வாடி கிராமம் அதில் தண்ணீர் ஊற்றும் தீர்மானத்தைப் போட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் காசிப்பூர் என்ற சிறுநகரம். அங்கு இந்த மாபெரும் தேசத்தின் மனக்கண்களைத் திறந்த நெகிழ்வு மிகு நிகழ்வு ஒன்று அண்மையில் அரங்கேறியது.

 லாலா பிரஜ்நந்தன் ரஸ்தோகி என்ற பெரியவர் சமூக நல்லிணக்கம் போற்றும் சான்றோராய் வாழ்ந்தவர். முஸ்லிம்களின் பண்டிகையோ, பொதுநிகழ்வுவோ முதல் நன்கொடை இவருடையதாகவே இருந்து வந்துள்ளது. தனது 80 வயதில் 2003-ஆம் ஆண்டில் இறந்துபோன இவர், முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை நிம்மதியாக நிறைவேற்ற தனது நிலத்தைக் கொடுத்து உதவும் எண்ணத்தைத் தனது நெருங்கிய உறவினர்களிடம் தான் வாழும் காலத்தில் தெரிவித்துள்ளார்.

தனது விருப்பத்தை நிறைவேற்றும் முன் அவரது காலம் முடிந்துவிட்டாலும், தனது இந்த விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இறுதிக் காலத்தில் உறுதிபடக் கூறியுள்ளார். வெளியூர்களுக்குத் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் இதை அண்மையில் அறிந்த அவரது மகள்களான அனிதா, சரோஜ் ஆகிய இருவரும் சொந்த ஊரில் வசிக்கும் தனது சகோதரர் ராகேஷ் உடன் இணைந்து இன்றைய மதிப்பில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முஸ்லிம்களின் பெருநாள் தொழுகைத் திடலுக்காக இலவசமாக பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

 எண்ண எண்ண இதயத்தை நெகிழ வைக்கும் அற்புத நிகழ்வு இது.

அவுரங்கசீப் முதல் திப்பு சுல்தான் வரை இன்னும் ஏராள முஸ்லிம் மன்னர்கள், சுல்தான்கள், நவாப்கள் கோவில்களுக்காகப் பெருங்கொடைகளைத் தந்துள்ளனர். ஆனால் கோவில்களை இடித்தக் கொடுமைக்காரர்களாக அவர்களை ஆதாய வெறி அரசியல் சித்திரிக்க வைக்கிறது. முகலாயர்களும் சுல்தான்களும் செய்ததாக சொல்லப்படும் கொடுமைகளுக்குப் பரிகாரமாக முச்சந்தி கடையில் முட்டை பரோட்டா போடும் முகமது சுல்தானின் மூக்கை உடைக்க வேண்டும் என்பது மூர்க்க அரசியலின் மூளைச் சலவையல்லவா?

 " சமயத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வெறுப்பு நெருப்பை அன்பால் அணைக்கும் பண்பால் சுடர வேண்டும். அவர்களே நெருப்பை மூட்டுபவர்களாய் ஆகிவிட்டதும் எளிய மக்கள் எளிதில் தீப்பற்றும் பொருள்களாய் மாறிவிட்டதும் அவலமானது."

திருநீறும் நாமமும் தரித்து வருவோரெல்லாம் நமக்குப் பகையாளிகள் என்று சிறுமதி கொண்ட சிலர் சிறுபான்மையினரைத் தூண்டுவது அருவருக்கத்தக்க அறிவீனம் அல்லவா? மதவெறி பேசி மானுடத்தைக் கூறுபோடும் வெறுப்பு அரசியல், காட்டுத் தீயாய் நாட்டில் பரவும் அவலச் சூழல் ஒருபுறம் இருந்தபோதும், மானுட அன்பின் மாமழை பொழிந்து இந்நெருப்பை ஆங்காங்கே அணைத்து, அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் நேசமிகு நிகழ்வுகள் நமது மனக்காயங்களுக்கு மருந்திடுகின்றன.

 தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த பாடல், "ரகுபதி ராகவ ராஜாராம்" என்கிற பாடல். இது அவர் பங்கேற்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் இடம்பிடித்த இதயங்கவர் பாடல். ஒரு கட்டத்தில், "ஈஸ்வர் அல்லா தேரே நாம், சப்கோ சன்மதி தே பகவான்" என்ற வரிகளை அண்ணல் காந்தி இப்பாடலில் இணைக்கச் செய்தார். "ஈஸ்வரன் என்பதும் அல்லா என்பதும் இறைவா உன்னுடைய திருப்பெயர்களே.. எல்லோருக்கும் நீ நல்லறிவை அருள்வாயாக" என்பது இதன் பொருள்.

 எத்தகையோரை நினைத்து காந்தியடிகள் இவ்வரிகளை இணைத்தாரோ அத்தகையோரின் ஆதிக்கம் சமூகத்தில் அதிகமாகி இருப்பது நீதி மறுக்கப்பட்டோருக்கு விரக்தியை விதைக்கலாம், தவறான வழிக்கு சில நிகழ்வுகள் தூண்டலாம். உணர்ச்சிகளுக்குப் பலியாகி உருக்குலைந்திடாமல், நேயத்தின் ஒளி ஏந்தி, நியாயத்தின் வழி நகரும் மனப்பாங்கைப் பெறுவது காயப்படும் சமூகங்களுக்கு ஒரு கட்டாயக் கடமையாகும்.

 அதிகாலை மற்றும் அந்திமாலைத் தொழுகை வேளைகளில் பள்ளிவாசல்களின் நுழை வாயில்களில் ஒரு பரவசக் காட்சியை நாடெங்கும் காணலாம். ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்து முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திவிட்டு வெளிவரும்போது, அந்தத் தொழுகையாளிகள் நம் குழந்தைக்காகக் பிரார்த்தித்தால் நம் குழந்தை நலம் பெற்றுவிடும் என்ற நம்பிக்கையோடு, நெற்றி நிறைய திலகமும், திருநீறும் அணிந்த இந்து சகோதர சகோதரிகள் தங்கள் கைக்குழந்தையைத் தோளில் சுமந்து நிற்பர்.

 தொழுதுவிட்டுச் செல்லும் முஸ்லிம்கள் அந்தக் குழந்தைகளுக்காகப் பிரார்த்தித்து ஓதி ஊதிவிட்டுச் செல்வர்.

ஏக இறைவன்மீது முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கை.. முஸ்லிம்களின் பிரார்த்தனைமீது இந்து சகோதர சகோதரிகள் வைத்துள்ள நம்பிக்கை.. இவை மலையினும் உறுதியானவை, கடலினும் ஆழமானவை, வானினும் உயர்ந்தவை அன்றோ? அற்ப அரசியலுக்காக இந்த அழகிய பந்தத்தில் தீப்பந்தம் வைப்பதை அனுமதிக்கலாமோ?

உத்தராகண்டிலும், தஸ்லா பிர்வாடியிலும் இருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமிருந்தும் வீற்றிருக்கும் இருள் விரட்டும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் இங்கே வெளிப்படும் காலம் விரைவில் வரும்.. காயம்பட்ட மனங்களுக்கு அது ஆறுதல் தரும்.

நன்றி: 'தினமணி', 12.5.2022


No comments:

Post a Comment