பிஞ்சுகளிடம் பகுத்தறிவு வித்தூன்றும் பழகுமுகாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

பிஞ்சுகளிடம் பகுத்தறிவு வித்தூன்றும் பழகுமுகாம்!

தந்தை பெரியார் கேட்கும் கேள்விகள் எல்லாம் நல்ல கேள்விகள்தான்!

கழகத் துணைத் தலைவர் கவிஞரின் உரையாடலும் -  பெரியார் பிஞ்சுகளின் 'பளிச்' பதில்களும்!

தஞ்சை, மே 23 'பெரியார் பிஞ்சு' மாத இதழ் வழங்கும் பழகு முகாமில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பிஞ்சு களிடம் கேள்வி பதில் உரையாடல் மூலமாக கலந் துரையாடினார். பிஞ்சுகளும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு பதிலளித்தனர்.

1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குழந்தை களுக்கான பழகு முகாம் கடந்த இரண்டு ஆண்டு களாக, கரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இப்போது அரசு தனது கட்டுப்பாடுகளை அரசு நீக்கிய பிறகு, இந்த ஆண்டு மே 22 முதல் 26 வரையிலான 5 நாட்கள்  தஞ்சையில் உள்ள வல்லம் பெரியார் மணியம்மையார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத் தில், 8 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தை கள் மட்டும் பங்கு பெறலாம் என்று பெரியார் பிஞ்சு மாத இதழ் சார்பில் அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது. இதில் மாணவர்கள் 39 பேரும் மாணவிகள் 33 பேருமாக மொத்தம் 72 பேர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டுகளில் 8 - 12, 13 - 16 என்ற இரண்டு பிரிவுகளில் சேர்த்தே 100 மாண வர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பழக்க வழக்கங்களை 

கற்றுக்கொடுக்கும் பழகு முகாம்!

பழகு முகாம் என்பது கலந்து கொள்ளும் குழந்தைகளுடன் பழகுவது என்பது மட்டுமல்ல, அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலிருந்து செய்யத் தவறும் பல்வேறு வாழ்வியல் சார்ந்த நல்ல பழக்கங்களையும் சேர்த்தே பழகிக் கொள்வது தான்! அதிலொன்று அதிகாலை நேர நடைபயிற்சி! இது பொதுவாக வயதான பிறகுதான் என்பது இன்றைய பழக்கமாக இருக்கிறது. பழகு முகாம்

அந்த அரிய வாய்ப்பினை, மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழக்கத்தை சின்னஞ்சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்து, பிஞ்சுகளுக்கு பழக்குகிறது. அந்தப்படியே பழகு முகாமின் முதல் நாளான 22 ஆம் தேதி, உற்சாகமான நடைபயிற்சியுடன் தொடங்கியது.

முன்னதாக பதிவுகள், அடையாள அட்டைக் கான ஒளிப்படங்கள் எடுத்தல், மாணவர்களுக்கு தங்கும் அறைகளை ஒதுக்குதல் போன்ற பணிகள் முடிந்து காலை உணவுக்குப் பிறகு, பெரியார் பெருந்தொண்டர் தோழர் இமயவரம்பன் தோட் டத்தில் அமைந்துள்ள சொர்ணா ரங்கநாதன் விடுதியில், பயிற்சி ஆசிரியர்கள் தலைமையில் பிஞ்சுகள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்ட பின்னர். திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் பழகு முகாமில், குழந்தைகளின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ”தோள் பை” வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

தனித்திறன் வாய்ப்புகளில் 

அசத்திய பிஞ்சுகள்

எடுத்த எடுப்பிலேயே மாணவர்களுக்கு முதல் வகுப்பாக நீச்சல் பயிற்சி அமைந்தது. எப்போதுமே இந்த வகுப்பை எப்போது, எப்போது என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருப்பது குறிப்பிடத் தக்கது. மாணவிகளுக்கு அய்ஸ்ண்டீன் அரங்கில் தனித்திறன் வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பை சரவணகுமார், பிரின்சு என்னாரெசு பெரியார் இருவரும்  ஒருங்கிணைத்தனர். இதில் தொடக்கத்தில் திருவண்ணாமலை அனு வந்தனா, சென்னை சமத்துவமணி, இசைப்பிரியா, தருமபுரி இதயா ஆகியோர் மேடைக்குச் சென்று தங்களின் கருத்து களை முன்வைத்தனர். இதில் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் கேள்விகள் பெரும்பாலும் கடி ஜோக் என்பதாகவே இருந்தது. இசைப்பிரியா ’அசுரன்’ படத்தில் இடம்பெற்ற “எள்ளு வய பூக்கலையே” என்ற பாடலையும், ஆனந்த பிரபா கரன் “கருப்புச் சட்டை போட்டு வந்த கிழவன்டா” என்ற பாடலையும் ராகம், பாவம் கலந்து பாடி பாராட்டைப் பெற்றனர். மு.க.கதிரவன் மேசையில் தாளம் தட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து மாணவர்கள் நீச்சல் வகுப்பு முடிந்து திரும்பியவுடன் மாணவிகள் நீச்சல் வகுப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து மாண வர்களுக்கும் தனித்திறன் வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் பொதுவாக பெண்கள் சமையல் செய்வது, ஆண்கள் வேலைக்குப் போவது, மகள் பாத்திரம் தேய்ப்பது, மகன் விளையாடுவதாகவே இருக்கிறதே, இது ஏன்? என்பதை மாணவிகளு டனான கேள்வி பதில் மூலமாகவே விளக்கினார்.

மதிய உணவுக்குப் பிறகு, பன்னோக்கு உள் விளையாட்டரங்கில் பிஞ்சுகள் அனைவருக்கும் ஓவியம் வரையும் கலையை கற்றுக் கொடுக்கும் வகுப்பை அருள் நடத்தினார். அவர் வரைந்த ஓவியத்தில் மிக நுட்பமான ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டி அறிவுக்கரசு என்ற பிஞ்சு சுட்டிக்காட்டி ஓவிய ஆசிரியரின் பாராட்டைப் பெற்றார். மாலை சிற்றுண்டிக்குப் பிறகு, அவரவருக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதிக்கப் பட்டு திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் விடப்பட்டனர்.

பெரியார் பிஞ்சுகளின் அசத்தலான பதில்கள்!

முதல் நாளின் இறுதி வகுப்பு திறந்த வெளியான ‘முத்தமிழ்  அரங்கில்’ நடைபெற்றது. இதுவும் குழந் தைகளின் தனித்திறன்களை வெளிப்படுத்துகிற வகுப்பாக இருந்தாலும், துணைத்தலைவரின் தலை மையில் நடைபெற்றதால் சுவையான அனுபவமாக பிஞ்சுகளுக்கு அமைந்தது. அனைவருக்கும் மதிப் பளித்து அனுமதித்தால் கவிஞர் குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறியிருந்தார். பிறகு, கவிஞர் பெரியாரின் சிறு வயதில் நடைபெற்ற ஜாதி, தலைவிதி தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை பிஞ்சுகளுடன் கேள்வி, பதில்களாக உரையாடிய வாறே பேசியதால் விளையாடும் போது இருந்த உற்சாகம் இதிலும் கரைபுரண்டோடியது. அப் போது ஜாதி, தலைவிதி தொடர்பாக பெரியார் தன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டும் சரியான பதில்கள் கிடைக்காததைச் சுட்டிக்காட்டி, “பெரியார் கேட்டது நல்ல கேள்விதானே?” என்ற கேள்வியை முன்வைத்தார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் “பெரியார் கேட்ட கேள்வி கள் எல்லாமே நல்ல கேள்விகள் தான்!” என்று மாணவர்கள் பதிலளித்து அசத்தினர்.

இரவு உணவுக்கு பிறகு, பெரியார் பிஞ்சுகள் அவரவர் அறைகளுக்குச் சென்றனர். காலையிலி ருந்து தங்களது பெற்றோர் நினைவின்றி இருந்த குழந்தைகள் ஒன்றிரண்டு பேருக்கு நினைவு வந்து அழுததும் அனுபவம் வாய்ந்த ஒருங்கிணைப்பாளர் கள் பேராசிரியர் பர்வீன், முனைவர் அதிரடி க.அன் பழகன் ஆகியோர் அதை சரியாக கையாண்டதும் பழகுமுகாமின் சிறப்புகளில் ஒன்றே!

No comments:

Post a Comment