முதல் பெண் துபாஷி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

முதல் பெண் துபாஷி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துபாஷி பொறுப்பிற்கு முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மொழிபெயர்ப்பாளராக துபாஷிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு பேரவைத் தலைவருக்கு உதவியாக துபாஷிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் துபாஷிகளாக ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது முதல்முறையாக துபாஷி பொறுப்பில் ராஜலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரவைத் தலைவர் என்பவர் சட்ட மன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துகளை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துகளை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுதும் கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவரும் அவரே. அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தாலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இத்தகைய அதிகாரம் மிக்க பதவி பேரவைத் தலைவர் பதவி என்பதால் பாரம்பரிய முறைப்படி அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் துபாஷி என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு கொண்டவர், சட்டமன்ற வளாகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் இருந்து, சட்டமன்றம் வரை பேரவைத் தலைவர் செல்லும் போது முன்னே செல்வார். பேரவைத் தலைவர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் பேரவைத் தலைவர், அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார். துபாஷி என்பவர் பேரவைத் தலைவர் வருவதை உறுதி செய்யும் நபராகவும் கருதப்படுகிறார்.

“இது போன்ற முக்கிய பொறுப்பில் என்னை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் 60 வயது நிரம்பிய ராஜலட்சுமி. “நான் சென்னை பெண். கோடம்பாக்கத்தில் தான் பள்ளி படிப்பு. திருமணமாகி மூன்று பிள்ளைகள். திருமணத்திற்கு முன்பே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன். அதை தவறாமல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதுப்பித்திடுவேன். குடும்பம், குழந்தைகள் என இருந்த எனக்கு ஒரு நாள் திடீரென நேர்காணலுக்கு  கடிதம் வந்தது. அந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் ‘பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு’ கொடுத்திருந்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சீனி யாரிட்டி அடிப்படையில் என் பெயர் பரிந் துரைக்கப்பட்டது.

சட்டமன்ற அலுவலக உதவியாளருக்காக நிறைய பேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். இறுதியில் அய்ந்து பெண்கள், ஏழு ஆண்கள் என 12 பேர் தேர்வானோம். அப்போது இந்த வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஆரம்பத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளராக எங் களை நியமித்தார்கள். 1990 அக்டோபர் 1 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன். அன்று முதல் நிறைய அதிகாரிகளுக்காக வேலை பார்த்துள்ளேன். முதன் முதலில் பெண் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் பணியில் அமர்த்தப்பட்டேன். அடுத்து தலைமை செயலகத்தில். இங்கு சட்டமன்ற அலுவலக உதவியாளர், தேர்வு நிலை அலுவலக உதவியாளர், கமிட்டி அலுவலருக்கு தபேதா, துபாஷி என்று, இன்று ஒரு சிறந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றார்.


No comments:

Post a Comment