என்னுடைய இலக்கு சிங்கார சென்னை 2.0: சென்னை மேயர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

என்னுடைய இலக்கு சிங்கார சென்னை 2.0: சென்னை மேயர்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி 178 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுகவுக்கு 15, அமமுக, பாஜக தலா 1 வார்டிலும் சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். தனிப்பெரும்பான்மையுடன் சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில், 74ஆவது வார்டில் வெற்றி பெற்ற 28 வயதான பிரியா ராஜன் சென்னை மேயராக பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. சென்னை, தாம்பரம் ஆகிய இரண்டு மாநகராட்சிகளுக்கும் தாழ்த்தப்பட்ட இன பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சியை ஒரு பெண் மேயர் ஆளும் வாய்ப்பு உருவானது.

சென்னை மாநகராட்சி வரலாற்றில் 3ஆவது பெண் மேயர் பிரியா ஆவார். இதற்கு முன்னர், சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தாரா செரியன் (1957-1958), அதன்பின் காமாட்சி ஜெயராமன் (1971-1972) பதவி வகித்துள்ளனர். இதுவரை தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை மேயராக பதவி வகித்து வந்த நிலையில், வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையும் பிரியாவைச் சேரும். பிரியாவின் தந்தை பெரம்பூர் ஆர்.ராஜன் திமுக மூத்த நிர்வாகியாக திருவிக நகர் பகுதியில் இருந்து வருகிறார். எம்.காம் பட்டதாரியான பிரியா, 18 வயதில் திமுகவில் இணைந்துள்ளார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் உறவினரான பிரியா, சென்னையை சேர்ந்த அய்டி ஊழியர் ராஜா என்பவரை திருமணம் முடித்துள்ளார்.  

“முதலில் நான் மேயராக தேர்வு செய்யப்பட்ட தாக எனக்கு தகவல் வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை” என்கிறார் பிரியா ராஜன். சென்னை மாநகரின் பரபரப்புக்கு மத்தியில்  பேச ஆரம்பித்தார் பிரியா ராஜன்.  “எனது தந்தைதான் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் நிறைய திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாமல் இருந்தது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ‘எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’ என்கிற சீரிய கருத்தை முன்னெடுத்து தேர்தல் நடத்தி, அதில் மாபெரும் வெற்றியும் கண்டிருக்கிறார். இது மக்களின் வெற்றி. இனி வார்டு வார்டாக மக்களுக்கான வேலைகள் செய்வதற்கு நாங்கள் தயாராகிறோம். மேயர் என்பது மிகப்பெரும் பொறுப்பு. எப்போது ‘நான் நன்றாக பணி செய்திருக்கிறேன்’ என்று மக்களிடமிருந்தும், முதலமைச்சரிடமிருந்தும், மற்ற சகாக்களிடமிருந்தும் பெயர் வாங்குகி றேனோ அன்று தான் முழு சந்தோஷம். அந்த மகிழ்ச்சிக்காகவே மூத்தவர்களின் வழி காட்டுதலோடு, என்னை போன்ற இளம் வயதினரின் துணையோடு மக்களோடு மக்களாக இருந்து பணி செய்ய கடமைப்பட்டுள்ளேன்.  

எனது குடும்ப பின்னணி அரசியல் சார்ந்ததாக இருந்தாலும், நான் ஆசிரியையாகவே விரும்பினேன். அரசியலுக்குள் வர வேண்டும் என்று யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. எனது தந்தை தீவிர கட்சி உறுப்பினராக இருந்ததால், திராவிட பாதையே சரியானது என்கிற கண்ணோட்டத்தை ஆரம்பத்திலேயே வளர்த்துக் கொண்டேன். சுயமரியாதை, பெண் உரிமை எல்லாம் திராவிட அரசியலினாலேயே கற்றுக் கொண்டேன். இந்தப் புரிதல் என்னை அரசியலுக்கு அழைத்துச் சென்றது.

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக - வெள்ளந்தியான மக்கள் வாழும் வடசென்னையை நோக்கித் தன் பாசமிகு பார்வையை வீசியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர். இது குறித்து பகிரும் மேயர் பிரியா ராஜன், “வட சென்னையில் அதிகம் மேம்படுத்த வேண்டிய வேலைகள் இருக்கிறது. அங்கிருந்து ஒருவர் வந்தால் வேலை பார்ப்பதற்கு இன்னும் எளிமையாக இருக்கும். அந்த பெரும் பொறுப்பை என்னிடம் மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். ஏறத்தாழ பத்து மில்லியன் ஜனத்தொகை கொண்ட சென்னை மாநகரத்தின் தலைமைப் பதவியில் என்னை அமர்த்தியிருக்கும் அவர் நம்பிக்கைக்கு என்றும் துணை நிற்பேன்.

மழை நேரங்களில் சென்னை மக்கள் ரொம்பவும் துயரப்படுகிறார்கள். மற்ற பிரச்சினைகள் விட இது தான் பெரிதாக இருக்கிறது. கண்டிப்பாக இதற்கான தீர்வு கூடிய விரைவில் கிடைக்கும். ஏன் என்றால் எட்டு மாதத்தில் பெரிய பெரிய மக்கள் நல திட்டங்களை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். எனவே இதற்கான நடவடிக்கையும் கண்டிப்பாக எடுப்பார்.  25 ஆண்டுகளுக்கு முன் சென்னை மேயராக பொறுப்பு வகித்தபோது மாண்புமிகு முதலமைச்சரின் கனவுத்திட்டம் சிங்காரச் சென்னை. அதற்கு இப்போது ‘சிங்காரச் சென்னை 2.0’ என்ற பெயரில் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் நானும் இணைந்து வேலை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ‘பாலின சமத்துவம்’ குறித்து பேசுபவர்கள் மத்தியில் அதை செயல்வடிவமாக்கியிருக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் இந்த செயலை உலகார்ந்த பெண் சமூகம் கொண்டாடி மகிழும்” என்கிறார் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்.

No comments:

Post a Comment