பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 6 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 6

ஒன்றிய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கை இதுதான்!
தமிழகப் பெருமக்களின் முக்கிய கவனத்திற்கு!

மக்கள் சிந்தனைக்கு...

கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதன் காரணமாக, தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் வகையில், மிக முக்கியமான பிரச்சினைகள் இன்று எழுந்துள்ளன.

சமஸ்கிருத மொழித் திணிப்பு என்ற பெயரால் நடைபெறும். பண்பாட்டுத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் குலக் கல்வி, சமூகநீதி மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, கல்விக் கொள்ளை போன்றவை அவற்றுள் சில. ஏன் இவற்றை எதிர்க்க வேண்டும்? ஒவ்வொன்றாகக் காண்போம். 

புதிய கல்விக் கொள்கை ஏன் எதிர்க்கப்பட வேண்டும்? 

• அய்ந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் படிப்புக்குச் செல்ல வேண்டுமாம். அந்தப் பத்து வயதில் அவர்களின் தந்தை வழித் தொழிலைத் தானே தேர்ந்தெடுப்பார்கள். மறைமுகமாக ஜாதித் தொழிலுக்குள் குழந்தைகளைத் தள்ளி குலக் கல்வியைக் கொண்டுவரும் - சூழ்ச்சித் திட்டம் தானே இது! 

• பள்ளிகளை அருகில் உள்ள ஆசிரமங்களுடன் தொடர்புப்படுத்துவார்களாம்! என்னே பார்ப்பனத் தனம்! 

• இன்று நாம் பெற்று வரும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு, பொருளாதாரம் மற்றும் திறமை யின் அடிப்படையில் வழங்கப்படுமாம். அரசி யல் சட்டப்படியான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களின் சமூகநீதி உரிமையை அடியோடு அழிக்கும் திட்டமல்லவா இது.

• கல்விக் கடன்களும் கூட அந்த அடிப்படையில் தான் இருக்குமாம். 

• இருபால் மாணவர்கள் சேர்ந்து படிக்கக் கூடாதாம்! 

• கல்வித்துறை மாநில அரசிடமிருந்து பறிக்கப்பட்டு, ஒற்றைக் கல்வி என்ற அடிப்படையில் இந்தியாவின் பன்மைத்துவம் முற்றிலும் ஒழிக்கப்படும். மாநில அரசின் உரிமை பறிக்கப்படும். 

• +2 தேர்ச்சிக்குப் பின் கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம். எனில் +2 தேர்வுகள் எதற்கு? 

• கல்வித் துறைக்கு இனி அரசு செலவழிக்கக் கூடாதாம். முற்றிலும் தனியார் பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுக் கொள்ளைக்கான ஏற்பாடுதானே இது. 

• ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் ஒரு தலைமுறை தப்பித் தவறிப் படித்துத் தலை எடுக்கத் தலைப்பட்டது என்றவுடன், அதற்கு மரண அடி கொடுத்துத் தரைக்குள் புதைக்க ஆரியம் சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது. 

இவை மட்டுமல்ல; இன்னும் ஏராளமான சதிக் குழிகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட மக்கள், கடந்த நூற்றாண்டில் மெல்ல மெல்ல எழுந்து வந்திருக்கிறார்கள் அல்லவா? அதை ஒழித்துக் கட்டத் தான் இந்த ஏற்பாடு?

இதைத் தான் புதிய கல்விக் கொள்கை என்று பசப்புகிறார்கள். 

ஆர்.எஸ்.எஸின் நீண்ட காலத் திட்டம்! 

இப்பொழுதுதான் முகமூடி அணிவித்து நவீன குலக் கல்வியைப் புகுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று கருத முடியாது.

இது ஆர்.எஸ்.எஸின் நீண்ட காலத் திட்டமே! வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்தபோது, 1998 அக்டோபர் 22ஆம் தேதியன்று, டில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸின் கல்வி நிபுணர் என்று கூறப்படும் சிட்டியங்லா என்பவரால் தயாரிக்கப்பட்ட திட்டம் அது. 

அதில் கூறப்பட்டவை. 

1) இந்தியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டு முதல் வகுப்பு முதல் உயர்நிலைக் கல்வி வரைக்கும் பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். 

2) பெண்களைப் பொறுத்தவரை வீட்டை நிர்வகிப்பது சம்பந்தமாகப் போதிக்கப்பட வேண்டும். 

3) இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். 

4) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் (பெரும்பாலும் இராமாயணம், கீதை, இதிகாசப் புராணக் கதைகள் தான் இடம் பெறும்). 

5) சரஸ்வதி வந்தனா, வந்தே மாதரப் பாடல்களை, சகலப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும். 

6) பாடத் திட்டங்கள் யாவும் சுதேசிமயமாக்கப்பட வேண்டும். 

7) நாட்டின் நான்கு பிரதேசங்களில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட வேண்டும். 

8). இந்தியத் தத்துவப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும்.

அ) உபநிஷத்துகள், வேதங்கள் முதலியவை பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும். 

ஆ) எல்லோருக்கும்‘ உயர்கல்வி அளித்திடும் இன்றைய முறையை மாற்றி அமைத்திட வேண்டும்! அப்பொழுதுதான் கல்வியைத் தரமானதாக உயர்த்திட முடியும். 

இ) கல்வி கூடங்களைத் தொடங்குவதற்கு அரசு அனுமதி தேவையில்லை. 10 வருடங்கள் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களுக்கு உடனே அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டாக வேண்டும்.

அந்தக் கல்வியமைச்சர்கள் மாநாட்டில் சரஸ்வதி வந்தனா, சமஸ்கிருத சுலோகங்கள் கூறப்பட்டன. அதனை எதிர்த்து அம்மாநாட்டில் பங்கேற்ற தமிழகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளிநடப்புச் செய்தார். அவருடன் புதுவை, கேரளம், கருநாடகம், மேற்கு வங்கம், திரிபுரா, பீகார், பஞ்சாப், ஒரிசா, மத்தியப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் அந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே வெளி நடப்புச் செய்தனர். 

அன்று கலைக்கப்பட்ட ஆர்.எஸ். எஸ். கல்வித் திட்டம் என்ற கரு இப்பொழுது இன்னொரு பெயர் தாங்கித் தன்  தலையை நீட்டியுள்ளது. நம்மை ஆழமும் பார்க்கிறது.

இப்பொழுது கல்வித் திட்டத்தைத் தயாரித்தது 5 பேர் கொண்ட குழு என்றாலும் இதில் ஒரே ஒருவர்தான் கல்வியாளர் - அந்தக் கல்வியாளரும் ஜே.எஸ்.ராஜ்புத் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரரே!

இந்தித் திணிப்புக்கு ஒரு காரணம் - சமஸ்கிருதத் திணிப்புக்கு முரண்பட்ட காரணமா? 

இந்தியை ஏன் படிக்க வேண்டும் என்றால் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படுவது இந்திதான் என்று சமாதானம் சொல்லுவார்கள். அப்படியானால் மக்களால் அறவே பேசப்படாத சமஸ்கிருதம் எதற்கு என்று கேட்டால், அது நமது கலாச்சாரத்துக்காக என்று சாமர்த்தியமாகப் பேசுவதாகக் கருதிக் கொண்டு பதில் சொல்கின்றனர். 

சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. அது ஒரு  கலாச்சாரப் படையெடுப்பு - அதாவது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே! சமஸ்கிருதத்தை சொல்லிக் கொடுப்பது என்றால் வேதங்களும், உபநிஷத்துக்களும் சாஸ்திரங்களும், புராணங்களும், இதிகாசங்களும் சொல்லிக் கொடுக்கப்படும்  என்பதுதான் பொருள். வேறென்ன இருக்கிறது அதில்? 

வருணாசிரமம், பிறவிப் பேதம் என்பவை இதன் மூலம் பிஞ்சு உள்ளங்களில், மாணவர்கள் மத்தியிலும் ஊட்டப்படும், அபாயத்தை அலட்சியப்படுத்தி விட முடியுமா?

மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்தது முதற்கொண்டு தொடர்ந்து சமஸ்கிருதம் தொடர்பான பரப்புதலில்தான் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனிச் சலுகை ஏன்? 

• மருத்துவக் கல்விக்கு சி.பி.எஸ்.இ. அடிப்படையில் நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ.-இல் சமஸ்கிருதம் கட்டாயம். ஆக, மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் கட்டாயம் என்பது எத்தனை அயோக்கியத்தனமான திணிப்பு?

• பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி புதிய திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருகிறது. “நாடு முழுவதும் சமஸ்கிருத மொழியைக் கற்பிப்பதில் அனைத்துப் பல்கலைக் கழகங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று 120-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி தலைவர் வேத பிரகாஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

• தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டு சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்குத் தேவையான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. 

• அரியானாவில் சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க 1000 கோடி ரூபாயை வாரி வழங்கியுள்ளது மத்திய பிஜேபி அரசு.

• அரசின் ஓர் அங்கமாக சமஸ்கிருதப் பிரச்சார நிறுவனத்திற்கு 2014-2015ஆவது ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.270 கோடி செலவுக்கான கணக்கை இன்று வரை ‘ ஒப்படைக்கவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதிராணி கூறவில்லையா? அப்படியிருந்தும் 2015-2016ஆவது ஆண்டு மேலும் 740 கோடி ரூபாய் தாரை வார்க்கப்பட்டது. 

• இந்திய அரசமைப்புச் சட்டம் 8ஆம் அட்ட வணையில் 22 மொழிகள் இருக்க, இந்த சமஸ்கிருத மொழிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகளும், முன்னுரிமைகளும்? இவ்வளவுக்கும். மக்களால் பேசப்படாத செத்தொழிந்த மொழி சமஸ்கிருதம். அது பார்ப்பனக் கலாச்சாரத்தின் சின்னம் என்ற ஒரே காரணம் தானே இதன் பின்னணியில் உள்ளது. 

இந்தப் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை - திணிப்பை - சதியை முறியடிக்கக்கூடிய சக்தி தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணுக்கே உண்டு.

1938ஆம் ஆண்டே விரட்டியடித்தோம்! மீண்டும் பெரியார் மண் முறியடிக்கும்! 

அன்று 1938இல் ‘பிரதம அமைச்சராக இருந்த ஆச்சாரியார் இந்தியைத் திணித்தார். சமஸ்கிருதத்தை படிப்படியாக திணிக்கவே முதற்கட்டமாக இந்தியைப் புகுத்துகிறோம் என்று சென்னை லயோலா கல்லூரியில் பேசினார். அதனை முறியடித்தது தமிழ் மண் - தந்தை பெரியார் தலைமையில். 

இப்பொழுது அதே இந்தி - அதே சமஸ்கிருதம். மூர்க்கமாக பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்படுகிறது - பார்ப்பன பாரதிய ஜனதா ஆட்சியால். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி மட்டுமே என்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டதே! இருமொழித் திட்டத்தில் படித்ததால்தானே நம் பிள்ளைகள் உலகெங்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள் பிழைப்புத் தேடி தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்களே. இந்திக்கே இந்த நிலையென்றால் எவரும் பேசாத சமஸ்கிருத மொழியைத் திணிப்பது ஏன்?

தந்தை பெரியார் பிறந்த அதே தமிழ் மண்தான் இப்பொழுதும் அதனை முறியடிக்கப் போகிறது - முறியடித்தாக வேண்டும்.

- கலி. பூங்குன்றன்


No comments:

Post a Comment