பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 5 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 5

6ஆம் வகுப்பில் 2 முறை தோல்வி அடைந்தால் - குலத் தொழில்தான்!

மக்கள் சிந்தனைக்கு...

தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம் ஒன்று 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு ஆவணத்தின் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பலதளங்களிலும் விமர்சனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து திராவிடர் கழகம் உடனடியாக அனைத்துக் கட்சி, கல்வி அமைப்புகளைக் கூட்டி இந்தக் கல்விக் கொள்கையை முற்றாகப் புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டது (28.7.2016).

அந்தக் கூட்ட முடிவின் அடிப்படையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மிகப்பெரிய அளவில் எழுச்சி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது (8.8.2016).

இந்தத் திட்டம் நவீன குலக்கல்வித் திட்டம் - சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும் நோக்கம் கொண்டது - வேதக் கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடிய இந்தத்துவா திட்டம் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது.

இவையெல்லாம் அபாண்டம். அத்தகு கல்வி திட்டம் அல்ல இது என்று வாய்ச் சவடால் அடித்து வந்தனர் பார்ப்பனர்களும், அவர்களின் தொப் புட்கொடி அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களும், பி.ஜே. பி.யைச் சேர்ந்தவர்களும், அவர்களின் ஊடகங்களும்.

ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதத்தில்' (2.9.2016) "எங்களப்பன் குதிருக்குள் இல்லை" என்று சொல்லி தன் முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டு விட்டது. 

இதோ :

வேதக்கல்வி 

1. இந்த வரைவுக் கொள்கை முக வுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி, வேதக் கல்வி அடிப்படையில் அமைந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதும், குரு - சிஷ்ய உன்னதமான உறவு பற்றியும் ஒரு சிறிய பத்தியில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதைக் கல்வி காவி மயமாக்குதல் எனப் பேசுவது அபத்தம்! (பக்கம் 19).

அறிவியல் வளர்ந் தோங்கும் ஒரு கால கட்டத்தில் குருகுலக் கல்வியாம், வேதக் கல்வியாம் - ஒப்புக் கொண்டுள்ளது விஜயபாரதம்.

சிறிய பத்தியில் குறிப்பிட்டிருந்தால் என்ன? பெரிய பத்தியில் விவரித்திருந்தால் என்ன? என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது தானே முக்கியம்!

வேதங்கள் சூத்திரனுக்கான கல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதா என்பது முதற்கேள்வி. சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்று சொல்லுகிற வேதத்தை - பாவ மன்னிப்பாக இப்பொழுது சூத்திரர்களுக்குக் கற்பிக்கப் போகிறோம் என்று சொல்லப் போகிறார்களா?

குருகுலக் கல்வி என்பது நடைமுறை சாத்தியம்தானா?

 சீடர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு வந்ததை உணவாக்கி, சீடர்களுடன் குருவும் அமர்ந்து சாப்பிடப் போகிறார்களா?

இதைவிட ஒரு பிற்போக்குக் கல்வித் திட்டம் ஒன்று இருக்க முடியுமா? இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் முதலில் பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகள் சேருவார்களா? ‘விஜய பாரதத்திற்கே' வெளிச்சம்!

2. 8ஆவது வகுப்புக்குப் பதிலாக, 5 ஆவது வகுப்பு வரை தான் ஆல் பாஸ்; அதற்குப் பிறகு 6ஆவது வகுப்பில் இருந்து 'பாஸ் - பெயில்' உண்டு. அதிலும் 2 ஆண்டுகள் தொடர்ந்து பெயிலானால், அதே வகுப்பில் படிக்க முடியாது. அதன் பிறகு மாற்றுக் கல்விதான்.'' (அதாவது தொழிற்கல்வி). (விஜயபாரதம்', பக்கம் 20).

முன்பெல்லாம் “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்” என்ற திட்டத்தை ஆக்கப்பூர்வமாகச் செயல் படுத்தினார்கள். கைத்தொழிலில் ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு, அவ் வழியில் செல்ல வழிவகை உலகெங்கும் செய்யப்படுகின்றது. வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. தற்போதுகூட கைத்தொழிலில் ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளியிலிருந்தே கம்யூனிட்டி காலேஜில் இணைந்து மேற்படிப்புப் படிக்கிறார்கள். இது ஆராய்ச்சிக் கல்வி வரை நீளுகின்றது. இதை உணராமல் 'குலக்கல்வி' எனக் கொச்சைப்படுத்துவது சரியல்ல. ('விஜயபாரதம்', பக்கம் 18).

6ஆம் வகுப்பில் இரண்டாண்டு தொடர்ந்து தோல்வி அடைந்தால், அந்த மாணவன் மேலே படிக்கத் தகுதி யில்லாதவன் ஆக்கப்பட்டு விடுவான் - அவனது அதிகபட்ச கல்வித் தகுதியே வெறும் 5 ஆம் வகுப்புதான். அதன் பிறகு தொழிற்கல்விதானாம்.

 5ஆம் வகுப்புவரை படித்தவன் எந்தத் தொழிற் கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்? சராசரி அறிவுள்ளவர்களே சுலபமாகப் புரிந்து கொள்ளமாட்டார்களா?

அந்தத் தொழிற்கல்வி என்பது வேறு ஒன்றும் அல்ல - அவனது அப்பன் தொழில் - குலத்தொழில்தானே!

உடம்பெல்லாம் மூளை என்று வருணிக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சராக இருந்தபோது (1952-1954) இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்; அதன் காரணமாகவே பதவியிலிருந்தும், பொது வாழ்விலிருந்தும், தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்து விரட்டப்பட்டார்.

இந்த 5 ஆம் வகுப்போடு நிறுத்தப்படுபவர்கள் யாராக இருக்க முடியும்? எந்தப் பார்ப்பன வீட்டுப் பிள்ளைக்கு இந்த நிலை ஏற்படப் போகிறது?

கைத்தொழிலில் ஆர்வமுள்ளவர்கள் கம்யூனிட்டி கல்லூரியில் சேர்ந்து படிப்பார்களாம். அதில் சேருவதற்கு 5 ஆம் வகுப்புத் தகுதி போதுமானது தானா?

கேட்பவன் கேனயனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுகிறது என்று சொல்லுவானாம்; அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது - விஜயபாரதம் கும்பலே எச்சரிக்கை!

3. "அய்.நா. சபையால் உலகில் சீனம், பெர்ஷியன், ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய ஏழு மொழிகள் செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 22 தேசிய மொழிகளில், சமஸ்கிருதம் தவிர அனைத்து மொழிகளும் ஏராளமான வர்களால் பேசப்படுகின்றன. ஆனால், நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க தொன்மையான, வளமையான, கலாசார, இலக்கிய, விஞ்ஞான, தொழில்நுட்பங் களை அள்ளித்தரும் செம்மொழியான சமஸ்கிருதம் மிகக் குறைந்த எண்ணிக்கை மக்களாலேயே படிக்கப்படுகின்றது. நமது நாட்டில் இச்செம்மொழி அழியாமல் இருக்க இதைப் படிக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று இத்திட்டம் அறிவித்துள்ளது சரி யானதே! ('விஜயபாரதம்', பக்கம் 19).

செத்துச் சுண்ணாம்பாக ஆகி விட்டது பேச்சு வழக்கற்றும் போய் விட்டது சமஸ்கிருதம் என்று நாம் சொல்லுவதை வேறு வார்த்தைகளில் சுதப்பிக் கொண்டுள்ளது விஜயபாரதம்.

இப்படி பேச்சு வழக்கற்று ஒழிந்து போன மொழிக்குப் பெரும்பாலான மக்களின் வரிப் பணத்தைக் கொட்டி அளக்க நினைப்பது போக்கிரித்தனம் அல்லவா!

வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும் யாருக்கு வேண்டும்? குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட வேண்டியதை ஒரு வீட்டில் குந்த வைத்து மாப்பிள்ளையாக்கி மாலை சூட்டத் திட்டமாம்.

சமஸ்கிருதம் தேவபாஷை - பிராமணாளைத் தவிர மற்றவாள் படிக்கக் கூடாது - கேட்கக்கூடாது என்று கூறி அந்த மொழியை சாகடித்த பார்ப்பனர்களே - அதற்கு உயிர் உண்டாக்க குட்டிக்கரணம் அடித்துப் பிரயத்தனம் செய்வதுதான் பெரிய நகைச்சுவை!

இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய விவேகானந்தர் சமஸ்கிருதம் பற்றி என்ன கருத்துக் கூறினார்?

"மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங்களும், பல்குவதற்கு பெருங்கருவியாய் இருந்ததும்; இருப்பதும் சமஸ்கிருதமே! சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகு மேயானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகும்!" என்று விவேகானந்தர் கூறவில்லையா?

மக்களிடத்திலே பேதங்களை மதமாச்சரியங்களை உருவாக்கிவரும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியும், சங்பரிவார்களும், சமஸ்கிருதத்தை வளர்த்து எடுப்பதற்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணம் என்பதை எழுதி வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இவ்வளவு சப்பைக் கட்டுக்கட்டி சமஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்த முயன்றாலும், உண்மை நிலைமை என்ன?

என்னென்ன ஆசை வார்த்தைகளை எல்லாம் காட்டி பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிலையங்களிலும் சமஸ்கிருதத்தைப் படிக்க வைக்க கோடிக் கோடியாகப் பணத்தைக் கொட்டி தூக்கி நிறுத்தப் பார்த்தாலும், மாணவர்கள் சேர்க்கையின்றி அவை மூடப்பட்டுக் கிடக்கின்றன என்ற செய்தி வெளிவந்து விட்டதே!

விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லையே!

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் 'ஞானகங்கை'யில் (Bunch of Thoughts) அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடைய தொடர்ச்சிதான் பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடு.

- கலி. பூங்குன்றன்


No comments:

Post a Comment