ஏப்ரல் 30 எழும்பூர் இரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! தார்ச்சட்டி நமக்குப் புதிதல்ல - வாரீர்! வாரீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

ஏப்ரல் 30 எழும்பூர் இரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! தார்ச்சட்டி நமக்குப் புதிதல்ல - வாரீர்! வாரீர்!!

- கலி.பூங்குன்றன் -

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

அருமைத் தோழர்களே!

ஹிந்தி எதிர்ப்பும், ஹிந்தி எழுத்துகள் அழிப்பும் நமக்குப் புதிதல்ல!

ஹிந்தி என்பது வெறும் ஒரு மொழியல்ல - அது சமஸ்கிருதக் குடும்பத்தின் செல்லக் குட்டி - பார்ப் பனியப் பண்பாட்டின் சின்னம்!

ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில பிரதமராக (Premier)  இருந்தபோது சென்னை இலயோலா கல்லூரி யில் பேசும்போது, தன்னை அறியாமலேயே ஓர் உண்மையைப் போட்டு உடைத்தார்.

‘‘சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே ஹிந்தியை இப்பொழுது கொண்டு வருகிறேன்''  என்று ‘திருவாய்' மொழிந்தார்.

1937-1938 காலந்தொட்டு ஹிந்தி, சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை திராவிட வீரியத்துடன் எதிர்த்து வருகிறோம்!

அதுவும் இரயில்வே நிலையங்களில் பெயர்ப் பலகைகளில் இடம்பெறும் ஹிந்தி எழுத்துகளை அழிப்பது என்பது நமது போராட்ட வழிமுறைகளுள் ஒன்றே!

வழியனுப்பி வைக்கிறார் தோழர் முத்தரசன்

பிற்பகல் 3 மணிக்குக் கழகத் தலைவரிடம் தார்ச் சட்டியையும், பிரசையும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அளித்து வழி அனுப்பி வைக்கிறார்.

1952 ஆகஸ்டு ஒன்றாம் தேதி, 

1953 ஆகஸ்டு ஒன்றாம் தேதி,

1954 ஆகஸ்டு 8 ஆம் தேதி

ஆகிய நாள்களில் இரயில்வே நிலையங்களில் ஹிந்தி எழுத்துகளை தார் கொண்டு அழிக்கும் போராட் டத்தை தந்தை பெரியார் அறிவித்து நடத்தினார்.

திருச்சி ரயில்வே சந்திப்பில் தந்தை பெரியார் ஒரு பக்கமும், கலைஞர் மற்றொரு பக்கமும் ஹிந்தி எழுத்து களை அழித்த சுவை ததும்பும் தகவலும் உண்டு.

முதல் இடத்தில் ஹிந்தி, இரண்டாம் இடத்தில் இங்கிலீஷ், மூன்றாம் இடத்தில் தமிழ் என்றிருந்த இழிநிலை, தந்தை பெரியார் கட்டளைப்படி திராவிடர் கழகம் நடத்திய ஹிந்தி எழுத்துகள் அழிப்புப் போராட் டத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றம்தான் முதல் இடத்தில் தமிழ், இரண்டாம் இடத்தில் ஹிந்தி, மூன்றாம் இடத்தில் இங்கிலீஷ் (‘விடுதலை', 29.12.1955, பக்கம் 2) என்ற தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது.

இப்பொழுது, இரயில் நிலையத்திற்கு யார் சென் றாலும், தமிழ் முதல் இடத்தில் நின்று கண் சிமிட்டும் பொழுதெல்லாம், தந்தை பெரியார் நினைவிற்கு வர வேண்டும், திராவிடர் கழகக் கருஞ்சட்டைத் தோழர் களின் நினைவு கண்டிப்பாக வரவேண்டும்.

இரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தோடு முடிந்துவிடவில்லை.

1985 ஆம் ஆண்டிலும் ஹிந்தி எதிர்ப்பின் அடை யாளமாக சென்னை எழும்பூர் நிலையத்தில் பெயர்ப் பலகையில் இடம்பெற்ற ஹிந்தி எழுத்துகள் அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவித்தது (22.9.1985).

முதல் நாள் (21.9.1985) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஹிந்தி அழிப்புப் போராட்ட வழியனுப்பு விழாவில் பங்கு கொண்டு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்,

‘‘வீரமணி வென்றிடுக!

வெற்றி மணி ஒலித்திடுக!''

என்று போர் முரசம் கொட்டினார். அத்தோடு கடமை முடிந்துவிட்டதாக மானமிகு கலைஞர் அவர்கள் கருதவில்லை.

மறுநாள் - போராட்டக் களத்துக்குப் புறப்பட்ட திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களையும், புலவர் மா.நன்னன் அவர்களையும், அவர்களின் கரங்களில் தார்ச்சட்டியையும், பிரசையும் அளித்து வழியனுப்பி வைத்தார் என்பது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் செப்பேடாகும்.

ஆம், அதே சென்னை எழும்பூர் இரயில் நிலைய எழுத்துகளை அழிக்கும்  போராட்டக் களம் காண்கிறது திராவிடர் கழகம்.

ஆங்கிலத்திற்குப் பதில் ஹிந்திதான் அலுவல் மொழி என்று பட்டாங்கமாக அறிவித்துவிட்டார் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி / சமஸ்கிருதம் புகுத்தப் புறப்பட்டுவிட்டனர்.

கருஞ்சிறுத்தைக் கண்ணுறங்குமா?

தமிழர் தலைவர் வாளா இருப்பாரா? வாளாய் தானே சுழலுவார்!

வரும் 30 ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கு திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடல் கூட்டம். பிற்பகல் 3 மணிக்கு சென்னை பெரியார் திடலிலிருந்து எழும்பூர் இரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ள ஹிந்தி எழுத்துகளை அழிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, தார்ச்சட்டி - பிரசுடன் புறப்படுகிறார், புறப்படுகிறார் தமிழர் தலைவர்.

‘‘ஓடிவந்த ஹிந்திப் பெண்ணே கேள் - நீ

தேடிவந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!''

என்ற பாவலர் பாலசுந்தரம் 1938 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் யாத்த உணர்வோடு - புறப்படுவோம், புறப்படுவோம்!!

வாரீர்! வாரீர்!!

‘‘எப்பக்கம் வந்திடும் ஹிந்தி?

எதிர்த்து எக்காளம் போடுவோம்!''

வாரீர்! வாரீர்!!

No comments:

Post a Comment