விருது வென்ற பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 15, 2022

விருது வென்ற பெண்கள்


பல்வேறு துறை களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிகழ்த் தியவர்களைக் கவுரவிப்பதற்காக ஒன்றிய அரசால் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. உலக உழைக்கும் மகளிர் நாளன்று வழங்கப்பட்ட விருதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் பெற்றனர். 2020ஆம் ஆண்டுக்கான விருது நீலகிரி தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெயா முத்து, தேஜம்மாள் ஆகிய இருவருக்கும், 2021ஆம் ஆண்டுக்கான விருது மனநல சிகிச்சை நிபுணர் தாரா ரங்கசாமிக்கும் வழங்கப்பட்டது. பாரம்பரிய கலைகளை அழியாமல் காத்துவருவதில் பெண்களின் பங்கு அளப்பரியது. தோடர் பழங்குடியின மக்களின் பழம்பெரும் கலையான சால்வைகளில் போடப்படும் பூத்தையல் வேலைப்பாட்டில் ஜெயாவும் தேஜம்மாளும் பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவர்கள். இதைச் செய்வதற்கான கைவினைக் கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்த அனுபவம் மிக்கவர் ஜெயா முத்து. கலைத்துறையில் இவர்கள் இருவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்தான் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

மகத்தான மனநல சேவை

மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்நாளிலும் மனம் தொடர்பான சிக்கல்கள் அச்சத்துடனும் அருவருப்புடனும்தான் அணுகப்படுகின்றன. உடல் நலக் குறைபாட்டைப்போலத்தான் மனநலச் சிக்கல்களும் என்பதை உணர்த்துவதற்காகவே அதில் நிபுணத்துவம் பெற்றார் தாரா ரங்கசாமி. 70-களில் மருத்துவம் பயின்ற பெண்களில் பெரும்பாலானோர் மகப்பேறு, குழந்தை நலம், தோல் சிகிச்சை போன்றவற்றை மேற்படிப்புக்குத் தேர்தெடுக்க, தாராவோ மனநல சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தார். மனிதர்களையும் அவர்களின் கதைகளையும் கேட்பதில் ஆர்வம் கொண்ட தாரா, ஆய்வுப் படிப்பையும் அதையொட்டியே தேர்ந்தெடுத்தார்.

இந்தியாவின் முதல் பெண் உளவியல் சிகிச்சை நிபுணர் சாரதா மேனணின் குழுவினருடன் இணைந்து 1984இல் ஸ்கார்ஃப் அமைப்பைத் தொடங்கினார்.  எனப்படும் மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆய்வுகளும் மறுவாழ்வுத் திட்டங்களும் இல்லாத நிலையில் பணியைத் தொடங்கியவர் தாரா. இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் செயலாற்றிவருகிறார். ஒரு மனிதரின் வாழ்நாளின் மிக முக்கியமான காலகட்டமான 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் மனச் சிதைவு நோய் தாக்கும் என்பதால் அது குறித்த விழிப்புணர்வு அவசியம். அதற்காகவே பள்ளி, கல்லூரிகளில் மனச் சிதைவு நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஸ்கார்ஃப் அதிகமாக நடத்திவருகிறது.

மனச் சிதைவு நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் அதை முழுமையாகக் குணப்படுத்திவிடலாம். ஆனால், மனத்தடையும் சமூகம் குறித்த பயமும் இந்த நோய் குறித்துப் பலரும் வெளியே சொல்வதைத் தடுகின்றன. பொதுமக்களிடம் இருக்கும் இந்த எண்ணத்தைப் போக்குவதற்கு மன நலம் தொடர்பான திரைப்படங்களையும் இவர்கள் திரையிடுகிறார்கள். மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் மூர்க்கத்துடன் நடந்துகொள்வார்கள், அபாயகரமானவர்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.  அது உண்மையல்ல என் பதை அறிவியல் பூர்வமாக எடுத்துரைப்ப தற்காகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை தாரா எழுதியுள்ளார். இந்தியாவில் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மனநலம் தொடர்பான ஆய்விலும் பயிற்சியிலும் ஈடுபட்டுவரும் ஒரே நிறுவனம் ஸ்கார்ஃப் மட்டுமே என்று தங்கள் அமைப்பு குறித்து தாரா ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment