ஆதரவற்றவர்களுக்கு கை கொடுக்கும் கலைவாணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

ஆதரவற்றவர்களுக்கு கை கொடுக்கும் கலைவாணி!

உலகம்  அனைவருக்குமானது. இயற்கையின் நியதியும் அதுவே. அதில் தான் யார்  என்பதை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் காணாமல் போய்விடுகிறோம். அப்படி தன்னை கண்டவர்கள், மற்றவர்களையும் அவர்கள் யார்  என்பதை காண செய்வது சொற்பமே. அவ்வாறு சொற்பத்தில் ஒருவராக இருக்கிறார் சேலத்தை சேர்ந்த கலைவாணி. எங்கோ ஒரு மூலையில் பிறந்து பிழைப்புத் தேடி சேலம் வந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், ஏதோ ஒரு காரணத்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள்...

இப்படிப்பட்டவர்களை நகரங்களில் வீடு வாசல் இன்றி அனாதைகளாக சாலையில் திரிவதை பார்க்க முடிகிறது. அவர்களில் சிலர் உடல் நலக்குறைவாலோ, விபத்தினாலோ, குடிப்பழக்கத்தாலோ இறந்து அனாதை பிணங்களாக கிடக்கும் பல நிகழ்வுகளையும் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான அனாதைப் பிணங்களை தத்தெடுக்கும் தாயாக இருந்து புதைப்பது செய்து வருவதோடு, கை விடப்பட்ட முதியோர்களுக்காக விடுதி அமைத்து அடைக்கலமும் கொடுத்து வரும், கலைவாணி தன் கதையினை தோழியரோடு பகிர்கிறார்.

‘‘சிறு வயதிலிருந்தே யாராவது உதவி கேட்டு வந்தால் உதவ வேண்டும் என்கிற மனப்பாங்கு ஆழமாக மனதில் பதிந்திருந்தது. 2005ஆம் ஆண்டு தயாநிதி என்பவர் ஒரு அறக்கட்டளை வைத்திருந்தார். அதில் கைம்பெண் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு தையல் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனது எண்ணத்திற்கு ஏற்றாற் போல் வேலையும் அமைந்தது. அதோடு மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பெண்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தினோம். இவ்வாறு வேலைகள் தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு தாத்தா-பாட்டி எங்கள் கவனத்திற்கு வந்தார்கள். அவர்கள் அந்த காலத்திலேயே ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததால், இரு வீட்டிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டவர்கள்.

அவர்களுக்கு குழந்தைகளும் இல்லை. சமையல் வேலை பார்த்து வந்த தாத்தாவிற்கு, உடல் நிலை சரியில்லாமல் படுத்துவிட்டார். பாட்டியாலும் ஏதும் செய்ய முடியாத சூழல். இவர்கள் நிலை அறிந்து தினமும் சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொண்டோம். தாத்தா இறந்த போது, அவருக்கு இறுதி மரியாதை செய்யக்கூட பாட்டியிடம் வசதி இல்லை. அப்போது தான் மகளிர் சுய உதவி குழு மூலம் நண்பர்களாக இருந்த பெண்கள் ஒன்று சேர்ந்து புதைப்பது செய்தோம். பாட்டியும் கொஞ்ச நாளில் இறந்து விட அவங்களுக்கும் நாங்களே காரியம் செய்தோம்.

இதற்கு அடுத்த ஒரு பிச்சைக்காரர், கொஞ்சம் மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பார். அடிக்கடி அவருக்கு கை,கால் இழுப்பு வந்துவிடும். அவருக்கு தினமும் டீ வாங்கி கொடுத்து கண்காணித்து வந்தோம். ஒரு நாள் இரவு இழுப்பு வந்து குழிக்குள் விழுந்து இறந்து விட்டார். காலை செய்தி தெரிந்து போன போது யாரும் தூக்க முன் வரவில்லை. மறுபடியும் மகளிர் சுய உதவி குழு தோழிகளை அழைத்தேன். அவர்களும், எனக்கு கைகொடுக்க முன்வந்தார்கள்.

ஆனால் அவரை எங்கு புதைப்பது என்பது தெரியவில்லை. அங்கிருந்த காவலர்களிடம் புதைப்பது செய்வது பற்றி கேட்ட போது... அவரோ, ‘புதைப்பது எல்லாம் நீங்க செய்ய முடியாது. முதலில் அரசு பொது மருத்துவமனை கொண்டு போய் உடற்கூராய்வு செய்த பிறகு தான் எதுவும் செய்ய முடியும் என்று சொன்னார். நாங்களும் அரசு பொது மருத்துவமனை சென்றோம். அங்கு போன பின் தான் மாதம் பத்து பதினைந்து அனாதை பிணங்கள் வருவது தெரியவந்தது.

இவர்களை புதைப்பது குறித்து கேள்விப்பட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. காவல்துறை,  மாநகராட்சியிடம் இருந்து குப்பை கொண்டு போகும் வண்டியில் இந்த பிணங்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்து உடற்கூராய்வு செய்து அதே வண்டியில் கொண்டு போய் புதைக்கிறார்கள். சில நேரம் இரண்டு, மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து துணியில் கட்டி குழி தோண்டி புதைத்துவிடுகிறார்கள். இதை கேட்டதும் மனது பதைபதைத்து விட்டது.

காகம் கூட தன் கூட்டத்தில் ஒன்று இறந்துவிட்டாலே கத்தி கூப்பாடு போட்டு எல்லோரையும் வரவழைத்து ஆர்பாட்டம் செய்கிறது. ஆனால், ஆதரவு இல்லாத ஒரு மனிதன் இறந்தால் அவனுடைய நிலை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. ஓர் உயிர் பிரிந்த பின் முறையான இறுதி மரியாதை செய்ய வேண்டும். இதை நாம் எடுத்து செய்ய வேண்டும் என்று 2007ஆம் ஆண்டு முதல், அனாதைகளாக இறந்து கிடப்போரின் உடல்களை புதைக்கும்  வேலையில் ஈடுபட்டு, இதுவரை 2716 உடல்களை இறுதிமரியாதை செய்திருக்கிறோம்.  

ஆரம்பத்தில் கை வண்டி கொண்டு இழுத்து போய் பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இறுதி மரியாதை செய்தோம். அது சிரமமாக இருந்தது. அதன் பின் நகராட்சியில் பழனிசாமி என்ற அய்.ஏ.எஸ் படித்த ஆணையர், எங்கள் வேலைகளை பார்த்து பழைய வண்டி ஒன்றை கொடுத்தார். அதை கொஞ்ச நாள் பயன்படுத்தினோம். எங்கள் சேவையை அறிந்து சேலத்தில் இருக்கக்கூடிய நல்ல உள்ளங்கள் எல்லாரும் சேர்ந்து புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

இது போல் வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது தான் 2011ஆம் ஆண்டு சேலம் பழைய பேருந்து நிலையம் வணிக வளாகத்திற்குள் ஒரு பாட்டி இறந்திருக்காங்க, அவர்களை புதைப்பதற்கு உதவும்படி காவலர்கள்  கேட்டார்கள். நாங்களும் குழுவோடு சென்றோம். அந்த பாட்டியை ஸ்டெச்சரில் வைக்கும் போது தான் தெரிந்தது, பத்து நாள் காய்ச்சலால்  சாப்பிடாமல், சோர்வில் மயக்க நிலையில் இறந்தது போல் இருந்திருக்காங்க. அங்கேயே ஒரு உணவு வாங்கிக் கொடுத்து, சிகிச்சை அளித்து ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தோம். அந்த சமயத்தில் தான் இந்தப் பாட்டியைப்போல்  பலர் ஆதரவு இல்லாமல் இருக்காங்க. அவங்களுக்காக 2011ஆம் ஆண்டு ஒரு முதியோர் இல்லம் ஆரம்பித்தோம்.

எங்களின் சேவை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்ததைப் பார்த்த அப்துல்கலாம் அவர்கள், எங்களை அழைத்து, ‘இந்த சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். எந்த சூழலிலும் நிறுத்தக் கூடாது’’ என்றவர் எங்களின் தேவையை அறிந்து ஒரு வாகனத்தை அளித்தார். மேலும் தமிழ்நாடு அரசும் எங்களின் சேவையை அறிந்து 13 சென்ட் நிலம் கொடுத்தார்கள். அதில் தான் இப்போது முதியோர்களுக்கான இல்லம் அமைத்திருக்கிறோம். இங்கிருக்கும் ஒவ்வொருவரின் பின்னால் ஒரு கதை உண்டு. அதைக் கேட்டால் நம்மில் பலருக்கு இரவு தூக்கம் வராது. எனக்கு பிறகும் இந்த சேவை இயங்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு’’ என்றார் கலைவாணி.



No comments:

Post a Comment