பெண்கள் வரலாற்றை படைத்த பெண் ரேணு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 15, 2022

பெண்கள் வரலாற்றை படைத்த பெண் ரேணு

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப் பட்டுக் கிடந்த காலம் அது. தேசமே அடிமைப்பட்டுக் கிடந்த நிலையிலும் பெண்களை அடிமைப்படுத்துவதும் நடந்துகொண்டுதான் இருந்தது. அதுபோன்ற நேரத்தில் பெண்ணுரிமைப் போராளிகளின் செயல்பாடு முக்கியமானது. அப்படிச் செயல்பட்ட போராளிகளில் ரேணுவும் ஒருவர்.

அப்போதைய ஒன்றுபட்ட வங்காளத்தில் கல்கத்தாவின் வசதிமிக்க குடும்பம் ஒன்றில் சதன் சந்திர ராய் - பிரம்ம குமாரி வாழ்விணையரின் மகளாக, அக்டோபர் 21, 1917இல் பிறந்தவர் ரேணு. பள்ளிப் படிப்பைப் புகழ்பெற்ற லோரெட்டோ கான்வென்ட்டில் பயின்றார். அதிக மதிப்பெண்கள் பெற்றதால் கல்கத்தாவில் உள்ள உள்ள புகழ்மிக்க விக்டோரியா இன்ஸ்டிட்யூட்டில் சேர்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர் அத்துடன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1937- 1939 ஆண்டுக் காலகட்டத்தில் ஆங்கில இலக்கியம் கற்றுத் தேறியவர்.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் என்றும் ஆர்.பி.டி என்றும் அழைக்கப் பெற்றவரும் வரலாற்றாசிரியருமான ரஜினி பாமி தத் உடன் படிக்கும் காலத்திலேயே நல்ல நட்பும் தோழமையும் கொண்டிருந்தவர். 1938இல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதே ஆண்டில் இந்தியா திரும்பியவர், இங்கே தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிச இயக்கத்திலும் ஈடுபாட்டுடன் இணைந்து செயல்பட்டார்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1940 முதல் 1947 வரை ஆங்கில இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதே காலகட்டத்தில் பல்வேறு செயல்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் ரேணு. 1940ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டில்லியில் நடைபெற்ற அகில இந்திய மாணவர் பெருமன்ற மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் ரேணு மற்றும் கனக தாஸ்குப்தா இருவரும் இணைந்து நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் விளைவு 1940இல் லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் அகில இந்திய அளவிலான மாணவிகள் அமைப்பு ஒன்றைத் தொடங்குவதற்கான அடித்தளம் இடப்பட்டது. லண்டனில் சந்தித்து நண்பராகியிருந்த பத்திரிகையாளர் நிகில் சக்கரவர்த்தியை 1942இல் ரேணு திருமணம் செய்துகொண்டார். அதுவரை ரேணு ராய் என அறியப்பட்டவர் அதன்பின் ரேணு சக்கரவர்த்தி ஆனார்.

மகளிர் சுய பாதுகாப்புச் சங்கம்

இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்திருந்த நேரம் அது. பிரிட்டிஷ் ஆட்சியானது, வங்காளத்தைக் கிழக்குப் போர்முனைக்கான தளமாகப் பயன்படுத்தியது. இதனால், ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்தும் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கூட்டம் கூட்டமாகத் தங்கள் சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதனால், வேளாண் உற்பத்தி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதுவரை பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வந்ததும் நிறுத்தப்பட்டது. வங்கத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது.

பெண்கள் சார்பில் வைசிராய்க்குத் தொடர்ந்து மனுக்கள் அனுப்பப்பட்டன. அதே ஆண்டு அக்டோபரில் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் 1942இல் ராணி மித்ரதாஸ் குப்தா, மணிகுந்தளா சென், இலா ஆகியோருடன் இணைந்து மகிளா ஆத்ம ரக்ஷ சமிதி என்கிற மகளிர் சுய பாதுகாப்புச் சங்கத்தை ரேணு சக்கரவர்த்தி ஆரம்பித்தார். பாசிஸ்ட் ஆதரவாளர்களை எதிர்ப்பது, கடும் உணவுப் பஞ்சத்திலிருந்து மக்களை மீட்பது, அவர்களைப் பாதுகாப்பது போன்றவை இதன் நோக்கங்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலுள்ள பெண்களைத் திரட்டுவதும் பிரதானமான நோக்கம். ஏராளமான பெண்கள் இவ்வமைப்பில் இணைந்து போராடத் தயாரானார்கள். சுமார் 20 லட்சம் மக்களைப் பலி கொண்ட கடுமையான பஞ்ச காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் அமைந்த பெண்களின் ஒருங்கிணைப்பும் செயல்பாடுகளும் காண்போரை பிரமிக்க வைத்தன. இவ்வமைப்பின் முதல் மாநாடு 1943, ஏப்ரல் 27, 28 தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்றது. 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பேரணி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இப்பெண்கள் ஒருங்கிணைந்து போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான முதலுதவி மய்யங்கள், சமையற்கூடங்கள் போன்றவற்றை நிர்மாணித்து மக்களுக்கு உதவும் பணிகளில் ரேணு முன்னணியில் இருந்தார். அத்துடன் இடதுசாரிப் பெண்கள் இயக்கங் களின் வரலாறு பரவலாக அறியப்பட வேண்டும் என்கிற நோக்கில் 1940 முதல் 1950 வரையான பெண்களின் பங்களிப்பு பற்றிய அரிய வரலாற்று ஆவணத்தை மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையில் ஆய்வு நோக்கில் நூலாக எழுதினார். இது பின்னர் தமிழில் நா.தர்மராஜன் மொழிபெயர்ப்பில் இந்தியாவில் பெண்கள் இயக்கம் என்கிற பெயரிலும் வெளியானது. 1950-களுக்குப் பிறகான பெண்கள் இயக்க வரலாறு இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆளுமையாக மாறியவர்

ரேணு சக்கரவர்த்தி 1952-1957, 1962-1967 என இரு முறை இந்திய மக்களவைக்குத் தேர்வுசெய்யப்பட்டார். 1962 தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றியை ருசித்தார் என்பதும் வரலாறு. அவருடைய உழைப்பும், வாதத் திறமையும் தனிப்பட்ட முறையில் அவருக்கும் இயக்கத்துக்கும் பெருமை சேர்த்தன. பல நேரங்களில் நாடாளுமன்றக் கூட்டத்துக்குத் தலைமையேற்றும் வழி நடத்தியிருக்கிறார். 1969இல் மேற்கு வங்க சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாவது அய்க்கிய முன்னணி அமைச்சரவையில் அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். 1994இல்மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் பாதிப்புக்குள்ளாகி ஏப்ரல் 16 அன்று மறைந்தார்.  ஓய்வறியா உழைப்பாளி ரேணு சக்கரவர்த்தி மறைந்தாலும் அவரது செயல்பாடுகளும் எழுத்துகளும் என்றென்றும் அவரை நினைவில் நிறுத்தும்.


No comments:

Post a Comment