தடை தாண்டும் ஓட்டத்தில் தடம் பதித்த பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 8, 2022

தடை தாண்டும் ஓட்டத்தில் தடம் பதித்த பெண்

சென்னை நேரு விளையாட்டரங்கம்... இந்த கரோனா காலத்திலும் பரபரப் பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்கான 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இளம் வீராங்கனைகள் தயாரான நிலையில் இருந்தனர்.  துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பினைப் போல் சீறி சென்று, இலக்கை 14.6 விநாடிகளில் கடந்து, தங்கப் பதக்கத்தினை வென்றார் நந்தினி கொங்கன். 

சென்னை, பிரபல கல்லூரியில் எம்.ஏ. மனிதவள நிர்வாகம் இறுதியாண்டு படிக்கும் இவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் வெள்ளி வென்று, தடகள விளையாட்டுக்களில் வெற்றி மங்கையாக உலா வருகிறார். 

என்னுடைய அப்பா கொங்கன். கபடி வீரர். பள்ளிகளுக்கு இடையேயான பல போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். 

அதனாலேயே அவரால் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரைப் போன்று நான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, விளையாட்டில் என்னைச் சேர்த்துவிட்டு, இன்று வரை மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

அவர் தரும் ஊக்கத்தால் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்று, பதக்கங்கள் வென்று வருகிறேன். எங்கள் பள்ளியிலும் எப்போது விளையாட்டு தினம் வந்தாலும் அதற்கான போட்டியில் கண்டிப்பாக நான் பங்கு பெறுவது வழக்கம். பங்கு பெறுவது மட்டுமில்லாமல், பரிசும் கண்டிப்பாக வென்றுவிடுவேன். 

ஆனால் எங்களின் பள்ளியில் நான் படிக்கும் போது 14, 16 வயதுக்கு உட்பட்டோருக்கென 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவில்லை. அதற்காக போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வந்தேன். இதில் தேசிய அளவில் பங்கு பெற்று பரிசும் பெற்றிருக்கேன்.

அந்த சமயத்தில் தான் என்னுடைய பயிற்றுநர் நாகராஜ் மற்றும் உடற் பயிற்சியாளர் காளிதாசன் இருவரும், என்னை 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் கலந்து கொள்ள சொன்னாங்க. எனக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் மேலும் என்னை ஊக்கப்படுத்தினர். அதனால் பத்தாவது படிக்கும் முதல் தடை தாண்டுதல் போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன் என்ற நந்தினி இதற்கென தனிப்பட்ட பயிற்சி முறைகளை கடைப்பிடித்து வருகிறார்.

இதுவரைக்கும் மாநில தேசியப் போட்டிகள், சீனியர் நேஷனல்ஸ் எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டு, 15 மெடல்கள் வென்றுள்ளேன். தேசிய போட்டியில் மட்டும் 3 தங்கம், 7 வெள்ளி, வெண்கலம் ஒன்று வென்றுள்ளேன். என்னுடைய இந்த வெற்றிக்கு அப்பா கொங்கன், அம்மா காந்திமதி, பயிற்றுநர் நாகராஜ், அக்கா லாவண்யா, அண்ணன் மோனிஷ், பி.டி.மேடம் அமுதா, கல்லூரி நிர்வாகத்தினர் என எல்லோரும் முக்கிய காரணம். அவர்களின் ஊக்குவிப்பு, ஒத்துழைப்பு இல்லாமல் இந்த அளவிற்கு என்னால் சாதித்து இருக்க முடியாது. 

அடுத்து 2024ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றார் நந்தினி.

No comments:

Post a Comment