பெண் கல்வியை உறுதி செய்யும் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

பெண் கல்வியை உறுதி செய்யும் திட்டம்

அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்வி யை உறுதிசெய்வதற்காக அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப் படுள்ளது. 

2022-2023ஆம் ஆண் டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்தத் திட்டத்துக்கென 698 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பைத் தொய்வின்றி தொடர வழிசெய்யும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குக்கே மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலைப் படிப்பு முடிக்கும்வரை இந்த நிதியுதவி தொடரும். 

அய்.டி.அய்., டிப்ளமோ படிப்பில் சேர்கிறவர்களுக்கும் இந்த உதவித்தொகை உண்டு. தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு, மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின்மூலம் ஆறு லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றம்பெறுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

திருமண நிதியுதவியைவிட, இந்தத் திட்டம் பெண்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாலிக்குத் தங்கம் வழங்கும் அரசின் திருமண நிதியுதவித் திட்டங்கள், ஏழைப் பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைத்துவரும் நிலையில் இந்தத் திட்டம் உயர்கல்வித் திட்டமாக மாற்றம்பெறுவது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், திருமண நிதியுதவி வழங்கும் அயந்து அரசுத் திட்டங்களில் மற்ற நான்கு திட்டங்களும் எந்த மாற்றமும் இன்றிச் செயல்படும் என்பதால் கவலைகொள்ளத் தேவையில்லை என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

பெண்களின் கல்வியை ஊக்குவிக் கும் இதுபோன்ற திட்டங்கள் வரவேற்கப் படவேண்டியவை. (நன்றி: இந்து தமிழ்திசை)

No comments:

Post a Comment