ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 27, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தாங்கள் தங்களின் 89 - ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் விடுக்கும் செய்தி என்ன?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: இளைஞர்களும், மாணவர்களுமான எம் அருந்தோழர்கள், "என்றும் பெரியாரைக் கற்போம்; அவர்வழி நிற்போம்" என்ற இலக்கை நோக்கிய தங்கள் பயணத்தை இடையறாத இலட்சியப் பயணமாக மாற்றி உழைப்பது, அவர்களையும் உயர்த்தும்; சமூகத்தையும், உலகத்தையும் உயர்த்தும் என்பதே பெரியாரின் வாழ்நாள் மாணவனான இந்த எளியவனின் வேண்டுகோள்! 

கேள்வி 2: சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவர், ஆளுநர் நிறுத்தி வைப்பது மாநில மக்களின் நலனுக்கு எதிரானது என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசியிருப்பது கையொலி எழுப்பி வரவேற்க வேண்டிய ஒன்றல்லவா?

- எஸ்.பத்ரா, வந்தவாசி.

பதில்: வரவேற்று அறிக்கை எழுதி பாராட்டியிருந்தோம். ‘விடுதலையிலும்முரசொலியிலும் வெளிவந்ததே, படிக்கவில்லையா? பலமாககை தட்டுங்கள்’ - அவரைப் பாராட்டி!

கேள்வி 3: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை பார்ப்பதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதை பெற்றோர்கள் ஏற்று செயல்படுத்துவார்களா?

 - பொன்மணி, பூவிருந்தவல்லி.

பதில்: பெற்றோர்கள் அவசியம் அதை செயல்படுத்த முன் வரவேண்டும். அது குழந்தைகளின் வாழ்வு, வருங்கால வளர்ச்சிக்கான தக்க பாதுகாப்பாக அமைவது உறுதி!

கேள்வி 4: மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கின்ற வேளையில், நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது சரியா?

- சு.சத்தியமூர்த்தி, நாமக்கல்.

பதில்: எதுவும் கையில் கிடைத்த பிறகு தானே நிச்சயம்; அதனால் தான் அவர்கள் தக்க விழிப்புடன் நிபந்தனை விதித்துள்ளார்கள்.

கேள்வி 5: பன்னாட்டு அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் (நவம்பர் - 25) கொண்டாடுகின்ற  நிலையில், ஆசிரியர்களால், மருத்துவர்களால்  அவ்வப்போது மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ்வது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு பயக்கும் செயல் அல்லவா?

 - .சுப்பிரமணி, அம்பத்தூர்.

பதில்: நிச்சயமாக; இப்போது வெளிவருவது பனிப்பாறையின் முனையளவே. ‘Tip of the ice berg’  என்ற சொற்றொடர் இதற்குப் பொருத்தம்.

கேள்வி 6: பிஜேபி.யின் மூளையாகச் செயல்படுகின்ற ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பை மக்களிடையே தோலுரித்துக் காட்டாமல், ஆர்.எஸ்.எஸ். முகமூடியான மோடியையும், அமித்ஷாவையும் மட்டும் எதிர்ப்பது சரியான பார்வையா?

- . சண்முகம், மணிமங்கலம்.

பதில்: நோய்நாடி, நோய் முதல் நாட வேண்டும். நோயை ஒழிக்க மூலக்கிருமியைப் பற்றி தெரிந்தல்லவா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்? தங்கள் கருத்து 100 க்கு 100 சரியானதே!          

கேள்வி 7: புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு உறுப்பினர் அனில் கன்வாட் கருத்து தெரிவித்திருப்பது விவசாயிகளின் நலனுக்கு எதிரான போக்கு அல்லவா?

- இராசு. மணி, காட்பாடி.

பதில்: எப்படிப்பட்டவர்களைக் கொண்டதாக அந்த விசாரணைக்குழு அமைந்துள்ளது என்பதற்கு இவரது கருத்தே ஒரு நல்ல சாட்சியமாகும்!

இவர்களது முடிவு எப்படி இருந்திருக்கும் - புரியவில்லையா?

கேள்வி 8: ஈஷா யோகா மய்யம் மீது 2016இல் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையத்தால் போடப்பட்ட வழக்கில் இதுவரை யாரும் ஆஜராகவில்லை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை கேள்விக்குறியாக்கவில்லையா ?

- . தமிழ்குமரன், ஈரோடு

பதில்: உயர்நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்து, தப்பிக்க நினைத்த சூப்பர் நடிப்புத் திலகத்தின் வாதத்திற்கு பூட்டு போட்டு விட்டதே!

கேள்வி 9: வடநாட்டில் நிகழ்ந்து கொண்டிருந்த அகோரிகள் கலாச்சாரம் தமிழ்நாட்டிலும் ஊடுருவ ஆரம்பித்துள்ளது கேடான ஒன்றல்லவா?

- முகிலா, குரோம்பேட்டை

பதில்: மிகுந்த எச்சரிக்கையுடன் முளையிலேயே கிள்ள வேண்டும்; இன்றேல்மண்டை ஓடுகள்தமிழ்நாட்டில் மலிந்துவிடும் - உஷார்! எச்சரிக்கை!!

கேள்வி 10: ஆங்கிலேயருக்கு வால் பிடித்தது நீதிக்கட்சி என்று குற்றம்சாட்டுகிறதே ஆர்.எஸ்.எஸ்.?

- .இளங்கோ, சென்னிமலை

பதில்: முன்பு பலரால் கூறப்பட்ட கீறல்விழுந்த கிராமபோன் பிளேட் பாட்டு வரிகளே இவை.

மூன்று முறை தடைசெய்யப்பட்டு, இப்போது ஆட்சிக்கு வந்து விட்ட ஆர்.எஸ்.எஸ்.க்கும், விடுதலைப்போருக்கும் - விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அப்போது இவர்கள் அமைப்பின் பங்களிப்பும் அதன் தலைவர்களின் தியாக வரலாறும் பற்றி ஏன் எழுதாமல், எங்கோ சென்று யாரிடமோ  இரவல் வாங்குகிறார்கள். வெட்கமாக இல்லையா? ‘தியாகம் கூட திருட்டுப் பொருளாக்கிஇன்று சந்திசிரிக்கிறது இவர்களிடம்!

..சிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இதுபோல எவ்வளவோ உண்டு. அம்பேத்கருக்கே காவி வண்ணம் பூசிட முனையும் களவான்கள் அல்லவா, இவர்கள்!

கேள்வி 11: உத்தரப்பிரதேசத்தில்  கோயிலில் உள்ள கடவுள் சிலை கீழே விழுந்து கையுடைந்த நிலையில் இருந்த அந்த சிலைக்கு மருத்துவர் கட்டுப்போட்டு சிகிச்சை அளித்தாக செய்திகள் வருகின்றனவே?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: கடவுளுக்கேவைத்தியம்பார்க்கும் பைத்தியங்கள் நிறைந்த பகுதி தான் .பி.என்பது உலகப்பிரசித்தி பெறுகிறது இதன்மூலம் - பலே! பலே!

No comments:

Post a Comment