ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: ‘தினமணிநாளேட்டில் (24.09.2021) வெளிவந்ததிராவிடம் என்பதோர் வெற்றுச் சொல்எனும் நடுப்பக்கக் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரையாகவெற்றுச் சொல்லா திராவிடம்எனும் தலைப்பில் விடுதலை நாளேட்டில் (30.09.2021) வெளிவந்த கட்டுரையை நூலாக வெளியிட ஆவன செய்வீர்களா?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: வாசக நேயர்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றப்படும். நன்றி!

- - - - -

கேள்வி: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பார்ப்பனர்கள் சிலர் வந்து, அதிகாரி ஒருவருக்கு மலர் அபிஷேகம் செய்து வேத மந்திரங்களைக் கூறியது சட்டப்படி குற்றமல்லவா?

- சீதாலட்சுமி, திண்டிவனம்.

பதில்: அத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர் விதிகளுக்கு இது முற்றிலும் விரோதமாகும்.

- - - - -

கேள்வி:   மத்தியப் பிரதேசத்தில் 45 வயதுப் பெண் ஒருவரின் தீய பார்வையால் அவரது உறவினர்கள் திடீர் நோய்களால் பாதிக்கப்பட்டு வந்தார்கள் என்ற மூட நம்பிக்கையால், அந்த பெண்ணின் உற வினர்களே அவரை நிர்வாணப்படுத்தியும், அடித்தும் துன்புறுத்தியுள்ளது சமூக அவலம் அல்லவா?

- . பொன்மணி, பூந்தமல்லி.

பதில்: அரசமைப்புச் சட்டத்தின் 51 பிரிவு கூறும் அறிவியல் மனப்பான்மை வளர்த்தல் என்பதை  வெறும்ஏட்டுச் சுரைக்காய்அன்றி கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் வரை இப்படியான அவலங்கள் தொடரவே செய்யும்.

- - - - -

கேள்வி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி, வாரணாசி, மதுரா மற்றும் பிறபுனிதத் தலங்களில்பா... அரசு சார்பில் நடைபெற்று வரும் பணிகளை பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தடுக்க மாட்டோம் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி கூறி இருப்பது தேர்தல் உத்தியா? இல்லை பி.ஜே.பி. கட்சிக்கு மறைமுக ஆதரவா?

- கு. கணேஷ், கடப்பாக்கம்.

பதில்: இப்போது பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி பாஜகவின் மாயமான் ஆகிவிட்டார் என்பது புரிகிறது. கன்சிராம் அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியைப் பயன்படுத்தினார். மாயாவதி அம்மையாரோ இப்படி சர்வஜன் என்ற பெயரில்பார்ப்பனர்கள்’ - மிஸ்ராக்களிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டார். அது பாஜகவின் ஒட்டு ஆகிவிட்டது போலும். வேதனைக்கும் வருத்தத்திற்கும் உரியது!

- - - - -

கேள்வி:  பகுத்தறிவுள்ள மனிதர்கள் மனநல மருத்துவர்களிடம் சிகிக்சை மற்றும் ஆலோசனை பெறுவது சரியான நடவடிக்கையா?

- .சங்கர், திருமுடிவாக்கம்

பதில்: மனநலம் குன்றினால் பகுத்தறிவுள்ள மனிதர்களும் சிகிச்சை பெறுவது தவிர்க்க முடியாதது.

- - - - -

கேள்வி: ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்களா? அரசுத்துறையாக இருந்ததுபோல் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்குமா?

- ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: தனியார் மயமானால் எந்த உத்தரவாதமும் கிடையாதே! அது டாட்டாவின் கருணையைப் பொறுத்ததே, உரிமையாக கேட்க முடியாது.

- - - - -

கேள்வி: உளமாற என்று உறுதிமொழி எடுத்தாலும் மதச்சார்பற்ற அரசாங்கத்தில் பணியாற்றிக் கொண்டு மதம் சார்ந்த பூமி பூஜை போன்ற சடங்குகளை செய்கிறார்களே?

- தமிழ்வாணன், மதுரை

பதில்: அரசு அதிகாரிகளும் அரசு இயந்திரமும் இன்றைய மாநில அரசைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே உள்ள சுற்றறிக்கைகளை- மதச்சார்பின்மையை வலியுறுத்துவனவற்றை தலைமைச் செயலாளர் செயல்படுத்துவது அவசியமாகும்.  அவர்கள் வீட்டில் எப்படியோ நடக்கலாம்; அரசு இயந்திரத்தில் மதச்சார்பின்மையை கொச்சைப்படுத்தக் கூடாது. அது அரசமைப்புச் சட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும்.   

- - - - -

கேள்வி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனி ராணுவப் பள்ளி அமைத்துள்ளது போல் நாம் ஏன் அமைக்கக் கூடாது?

- .மணிமேகலை, வீராபுரம்

பதில்: அது அவ்வளவு எளிதானது அல்ல. அவர்களின் ஹிந்துத்துவ தத்துவமே, “இராணுவத்தை ஹிந்துமயமாக்கு, ஹிந்துவை இராணுவமயமாக்குஎன்பது அல்லவா? நம் கொள்கை அதுவல்லவே! இராணுவக் கட்டுப்பாட்டை நம் இயக்கத் தோழர்கள்  பின்பற்றுகின்றனர். அது மேலும் வலுவடைந்தாலே போதும்.

- - - - -

கேள்வி: இந்தியா முழுவதும் வலிமையான கட்சியாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உருவா காமல், 2024 தேர்தலில் பிஜேபியை வீழ்த்த முடியுமா?

- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: நிச்சயம் முடியாது, வலுவான பொது அணியைக் கட்டியாக வேண்டும்.

- - - - -

கேள்வி: கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று இன எதிரிகள் தங்களுக்குள் நடைபெற்ற கூட்டங்களில் பேசிக் கொள்கிறார்களே- கலைஞருடன் நீண்ட காலம் பழகிய நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: முதலமைச்சர் மு..ஸ்டாலினுக்கு இன எதிரிகள் தந்த சிறப்புச் சான்றிதழாகப் பார்க்கிறேன்.

No comments:

Post a Comment