ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 23, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி:  குல்லூகப்பட்டர் என்றால் என்ன? திரு. இராஜகோபாலாச்சாரி அவர்கள் குல்லூகப்பட்டர் என வர்ணிக்கப்படுவதற்கு காரணம் என்ன?

- இரா. அலமேலு,  செங்குன்றம்.

பதில்: குல்லூகப்பட்டர் முந்தைய வடநாட்டு சத்ரிய ராஜாக்களின் ஆட்சியில்ராஜகுருவாக இருந்து சனாதனம் - பார்ப்பனீய செல்வாக்கை பெருக்க வைக்க சூழ்ச்சிகளை செய்து அரசியல் செய்தவர்.

இப்பட்டத்தினை ஆச்சாரி யாருக்கு முதன்முதலில் வழங்கியவர் இந்தியாவின் முதல் நிதியமைச்சரான உலகப் புகழ் வாய்ந்த சர். ஆர்.கே.சண்முகம் அவர்கள் ஆவார்கள். (ஆர்.கே. சண்முகம் துவக்க காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர். காந்தியாருடன் உரையாடியபோது இவரது அறிவு ஆற்றலை வாதத்திறமையை வியந்த காந்தியார் அவர்கள் உங்களுக்கு யார் குரு என்று கேட்டவுடன், பெரியார் .வெ.ரா. என்று கூறியவர்) ஆச்சாரியார் சூழ்ச்சிகரமான வலைப்பின்னலுக்குப் பெயர் போனவர் என்பதால் இப்பெயர்! குலக்கல்வித்திட்டம் உள்பட சூழ்ச்சியான பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் என்பதால் அறிஞர் அண்ணா அவர்கள் இதனை அதிகமாகப் பயன்படுத்தியதால் மக்களிடையே இந்த பட்டம் பரவியது. அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில், சிவாஜி முடிசூட்டுவிழாவில் காகபட்டர், கங்கு பட்டர் பாத்திரங்களும் இடம் பெற செய்தார்.

கேள்வி : அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை நீக்க அறிஞர் அண்ணா வெளியிட்ட  அரசாணையை நடைமுறைப்படுத்த, சமூக நீதியின் சரித்திர நாயகர், ஆவன செய்வாரா?

- .கனிமொழி, காஞ்சிபுரம்

பதில்: பொறுத்திருப்போம் - காலம்கனியும், உண்மையான மதச்சார்பின்மையின் ஆதாரச் சான்றே அதுதான்!

கேள்வி : கருநாடகத்தைச் சார்ந்த மேனாள் முதலமைச்சரான  குமாரசாமி  இந்திய குடிமைப் பணியில் 4 ஆயிரம் பேர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளாரே?

- சிவகுமார் சண்முகம், பக்ரைன்

பதில்: இது திட்டமிட்ட ஏற்பாடு. 2014இல் பிரதமர் மோடி பதவிக்கு வந்ததிலிருந்தே அதிகமாகியது. வாஜ்பேயி காலத்தில் துவக்கப்பட்டது. பிறகு அய்க்கிய முன்னணி ஆட்சியில் அதற்குத் தடை. பிறகு தடை நீங்கி இப்போது பகிரங்கமாகவே பதவிகள் ஆர்.எஸ்.எசுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. தனியார் துறையிலிருந்து கூட நேரடி நியமனம் என்பதே அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறைக்கு விரோதமாக நடக்கிறது.

கேள்வி :  முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டது சரியா? நாணயமற்ற எதிரிகள் அதிகம் உள்ள நிலையில் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளலாமா?

- சா.அருண்குமார், உல்லியக்குடி

பதில்: இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியே சுட்டியுள்ளார். முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியம். மக்கள்தான் அவருக்கு உண்மையான பாதுகாப்புக் கவசம்!

கேள்வி : பொது இடங்களில் "நீட்" தேர்வு ரத்து குறித்து பேச, வாக்குறுதி வழங்க தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

- சு.அறிவன், வீராக்கன்

பதில்: திராவிடர் கழகமும் வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள யோசித்துக் கொண்டுள்ளது.

கேள்வி : ஆசிரியர் பணியில் சேருவதற்கான  வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தியுள்ளார்களே- இது நன்மை தருமா?

- அந்தோணி ராஜ், தென்காசி

பதில்: பல ஆண்டுகளாக நியமனம் இல்லாத நிலையில், இது சரியான முடிவு தானே!

கேள்வி : உலகப் பட்டினி குறியீடு வெளியீட்டில் பொருளாதாரத்தில் - ஏழ்மையில் பின்தங்கியுள்ள அண்டை நாடுகளைவிட மோசமான நிலைக்கு இந்தியா  தள்ளப்பட்டுள்ளது வளரும் நாட்டிற்கு இழுக்கு ஆகாதா?

 - எஸ். பத்ரா,  வந்தவாசி.

பதில்: இழுக்குத்தான். கவலைப்பட வேண்டிய வர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே! நீங்களும் நாமும் தான் இதைப் பற்றி பேசி கண்ணீர் விட வேண்டியுள்ளது.

கேள்வி: உலகிலேயே இந்தியாவில்தான் அரசு விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. விடுமுறை என்ற பெயரில் வளரும் நாடான இந்தியா மனித சக்தியை,  அறிவை -ஆற்றலை இழக்கலாமா? 

 - . சாந்தி,  நாமக்கல்.

பதில்: நூற்றுக்கு நூறு உண்மை. உலகிலேயே உலக நாடுகளில் அதிகமாக  அரசு விடுமுறை நம் நாட்டில்தான் - இழப்புகளும், பொருளாதாரம் உள்பட பல.

 நாமும் மாநாடுகளில் இது பற்றி பல தடவை தீர்மானம் உள்பட நிறைவேற்றியுள்ளோம். கேளாதார் காதில் ஊதிய சங்காக போய்விட்டது.

No comments:

Post a Comment