இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர்

இந்தியர்களில் மாரடைப்பு ஏற்படுவதில் 50 வயதிற்குட்பட்டவர்கள் 50 சதவீதத்தினர். 40 வயதிற்குட்பட்டவர்கள் 25 சதவீதத்தினர். இப்படி இந்திய இளைஞர்களுக்கிடையே இதய நோய் அதிகரித்துக் கொண்டே வருவது உண்மையிலேயே கவலையளிக்கிறது..!  என்கிறார் டாக்டர் பத்மாவதி. இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர்.

பல இந்திய இதயங்கள் ஆபத்தைத் தாண்டித் துடிக்க நம்பிக்கை அளித்த மருத்துவர். பர்மாவில் இருந்து அவர் வந்தாலும் அவரின் மருத்துவக் கனவு தமிழ்நாட்டின் கோவையில் இருந்தே தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால், அதுதான் உண்மை.. அவர்தான் டாக்டர் பத்மாவதி..! இந்தியாவின் காட் மதர் ஆப் கார்டியாலஜி என புகழப்பட்டவர், கடந்த ஆண்டு அவர் மறையும் வரை மக்கள் சேவை செய்தவர்.

பிறந்தது 1917 ஜூன் 20. அப்போது ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த பர்மாவில் தனது மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர். அவரது குடும்பத்தில் மட்டுமல்ல, ரங்கூன் மருத்துவக் கல்லூரியின் முதல் மருத்துவப் பட்டதாரியும் இவர்தான். அதிலும் பல்கலைக்கழகத்திலேயே முதல் மதிப்பெண். பல்வேறு தங்கப் பதக்கங்கள் என்று தனது முத்திரையை துவக்கத்திலே அழுத்தமாய் பதித்தவர். 

பத்மாவதியின் கல்லூரி வயதுவரை பர்மாவில் வசித்து வந்த அந்தக் குடும்பத்தை அங்கிருந்து நகர்த்தியது ஒரு போர்.  ஆம்.. இரண்டாம் உலகப்போரில், பர்மா மீது ஜப்பான் தாக்குதல் நடத்த, 1942இல் மெர்க்யூ நகரிலிருந்து விமானம் மூலம் தனது தாயார் மற்றும் சகோதரிகளுடன் பர்மாவை விட்டு வெளியேறினார். 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற எச்சரிக்கை வந்ததும், எங்கே போவது என்று யோசித்தபோது எங்கள் மனதில் முதலில் வந்தது தமிழ்நாடுதான்.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் எங்கள் குடும்பத்தின் ஆண்களைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லாத போதும் தமிழ்நாட்டின் கோவையில் நாங்கள் மிகவும் பாதுகாப்பாய் இருந்தோம் என்று நினைவு கூர்ந்துள்ளார் இவர். போர் முடிந்த பின் பிரிந்த குடும்பம் ஒன்றுசேர, தனது மேற்கல்வி குறித்து பத்மாவதி அப்போது எடுத்த முடிவுகள் அவருக்கானதாக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கானதாகவும் அது மாறியது எனலாம்.

1949இல் தனது மேற்படிப்புக்காக லண்டன் சென்ற டாக்டர் பத்மாவதி, அங்கு ராயல் காலேஜில் தனக்குப் பிடித்தமான இதயத் துறையைத் தேர்ந்தெடுத்தார்.  டாக்டர் ஹெலன் டௌசிக் என்ற பிரபல இதயநோய் பேராசிரியரிடம், ப்ளூ பேபி எனப்படும் இதய நோய்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கக் கற்றுக் கொண்டார். தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், நவீன இதய நோய் சிகிச்சையின் தந்தையான பேராசிரியர் டாக்டர் பால் வைட் அவர்களுடன் நான்கு வருடம் பணியாற்றினார். ஆஞ்சியோ உட்பட நவீன இதய சிகிச்சை நுட்பங்களையும் அறிந்து கொண்டவர், தொடர்ந்து ஸ்வீடனில், எக்கோ என்ற இதய ஸ்கேனிங்கில் பயிற்சியும் பெற்று தன்னை ஒரு தேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவராக மாற்றினார்.

டாக்டர் பத்மாவதியை இழக்க விரும்பாத அமெரிக்க மருத்துவமனைகள் அவரை அங்கேயே பணிபுரிய அழைத்தன. அதேசமயம் அப்போதைய சுகாதார அமைச்சரான ராஜ்குமாரி அம்ரித் கவுர், டில்லியின் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய நியமன ஆணையினை பத்மாவதிக்கு அனுப்பி வைத்தாராம். அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதில் அற்புதமான எதிர்காலம் இருப்பதை உணர்ந்தாலும், போர்க்காலத்தில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் வாழ்வளித்த இந்தியாவிற்கு திரும்புவதுதான் முறை என்று முடிவெடுத்து, 1953இல் இந்தியா திரும்பி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தனது பணியைத் துவங்கியுள்ளார். அது இந்தியாவின் இதயநோய் சிகிச்சைத் துறைக்கே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பதுதான் உண்மை.

1954இல், தான் பணிபுரிந்த மருத்துவக் கல்லூரியில், இதயத் துறையை முதன்முதலாய் தொடங்கியவர், அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் நிறுவனத்தின் நிதியுதவியோடு,  இந்தியாவின் முதல் கேத் லாப் ஒன்றையும் தொடங்கினார். மாரடைப்பின் போது மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோகிராம், ஸ்டென்டிங் போன்ற உயிர்காக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் இந்த கேத் லாப் அந்தக் காலத்திலேயே துவங்கப்பட்டது இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம்.

 மாணவர்கள் வெளிநாடு போகாமல், இந்தியாவிலேயே எளிதில் கற்குமாறு இதயத் துறையின் பட்ட மேற்படிப்பான டி.எம். கார்டியாலஜியைத் துவக்கியதும் டாக்டர் பத்மாவதியே. ஆம். இந்திய மருத்துவக் கவுன்சிலின் முக்கிய உறுப்பினரான அவரது பரிந்துரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேற்படிப்பு தான், இன்று நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான இதய நோய் வல்லுநர்களை உருவாக்கி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

இறுதி மூச்சுவரை மருத்துவப் பணிபுரிந்த டாக்டர் பத்மாவதிக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பி.சி. ராய் விருது, கமலா மேனன் விருது, டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் என்று பல்வேறு விருதுகளைத் தொடர்ந்து  அடுத்தடுத்து வழங்கி சிறப்பித்துக் கொண்டே இருந்தது இந்திய அரசு. திருமணம் செய்து கொள்ளாமலே தன் வாழ்நாளை இதய நோய் சிகிச்சைத் துறைக்கு அர்ப்பணித்த இந்த பெண் ஆளுமை கடந்த 2020 ஆகஸ்ட் 29இல் தனது 103ஆம் வயதில் கோவிட் நோய் தொற்றில் சிக்கி தான் பணியாற்றிய மருத்துவமனையிலே இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது.

No comments:

Post a Comment