தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது! ஒத்த கருத்துள்ள தலைவர்களை அழைத்து இராமேசுவரத்தில் மீனவர் நலன் மாநாடு- போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 21, 2021

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது! ஒத்த கருத்துள்ள தலைவர்களை அழைத்து இராமேசுவரத்தில் மீனவர் நலன் மாநாடு- போராட்டம்

கும்பகோணத்தில் தமிழர் தலைவர் பேட்டி

கும்பகோணம், அக்.21 தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப் படுவது தொடர்கதையாகி வருகிறது; இதனைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில், ஒத்த கருத்துள்ள தலைவர்களை அழைத்து இராமேசுவரத்தில் மீனவர் நலன் மாநாடு - போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று (21.10.2021) காலை கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித் தார்.

அவ்விவரம் வருமாறு:

மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து மாநிலம் தழுவிய மாநாடு

செய்தியாளர்: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து நீங்கள் நேற்று ஒரு அறிக்கையையும் விடுத்திருக்கிறீர்கள். மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து போராட்டத்தினை நடத்தவிருக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: நீண்ட காலமாக தமிழக மீன வர்கள் கடலில் மரணத்தைத் தலையில் சுமந்து கொண்டு, தங்களுடைய தொழிலை நடத்தி, மற்ற வர்களை வாழ வைக்கக்கூடிய ஒரு சிறப்பான தொண்டு நிறைந்த தொழிலை செய்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டு மீன வர்கள், கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் இயற்கை யினுடைய சீற்றங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, செயற்கையாக, இலங்கை அரசுக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது ஒரு பக்கத்தில், அதை மீட்கப் போராடக் கூடிய சூழல் இன்னும் வெற்றி பெறாத அளவில் இருக்கும்பொழுது, இராமேசுவரம் தொடங்கி, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, சென்னை வரையில் மீனவர்களுடைய துயரம் ஒரு தொடர் கதையாக இருந்து கொண்டிருக்கிறது.

ஆகவேதான், நேற்றைய அறிக்கையில் விளக்க மாக எழுதியிருக்கின்றோம். திராவிடர் கழகம், அடுத்து, கொஞ்சம் நிலைமைகள் சரியானவுடன், விரைவில், மீனவர் நலன் பாதுகாப்பு மாநாட்டை நடத்தவுள்ளோம். திராவிட முன்னேற் றக் கழக  ஆட்சி - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் தலைமை யில் அமைந்திருக்கின்ற ஆட்சி பொறுப்பேற்கும்பொழுதே, ஒரு சிறப்பான நல்ல மாற்றத்தை இந்தத் துறைக்குத் தந்தது.

மீன் வளத் துறை என்று மட்டுமே இருந்த அந்தத் துறை - மீனவர் நலன் - மீன்வளம் இரண்டையும் பாதுகாக்கும் துறை என்று  மாற்றியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலில், மாநில அரசு, ஒன் றிய அரசுக்குக் கடிதம் எழுதித்தான் அதைச் செய்ய வேண்டி இருக்கிறது.

பா... ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால்,  கடற் தாமரை மலரும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், துயரங்கள் தொடர்ந்தவண்ணமாகவே இருக்கிறது. அதிகமாகிக் கொண்டிருக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறதே தவிர, வேறொன்றுமில்லை.

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, அநேக மாக இராமேசுவரத்தில் மீனவர் நலன் பாதுகாப்பு மாநாட்டினை - ஒத்தக் கருத்துள்ள அனைவரையும் அழைத்து, திராவிடர் கழகம் முன்னின்று நடத்து வதோடு, அதிலேயே, குறிப்பிட்ட கால அவகாசத்தைக் கொடுத்து, அவர்களுக்கு ஒரு நிரந்தரப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி, ஒரு அறப்போராட்டத்தை - அப்பொழுது மற்ற இயக்கங்கள், தலைவர்களையும் கலந்து சிறப்பாக நடத்த திராவிடர் கழகம் ஏற்பாடு செய்யும்.

ஒன்றிய அரசைக் கண்டித்துப் போராட்டம்

செய்தியாளர்: ஒன்றிய அரசுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்தை நடத்தவிருக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: ஆமாம். ஒன்றிய அரசுக்கு எதிரானது என்பதைவிட, மீனவர்களின் பாது காப்பிற்காக-அதைவிட, இலங்கை அரசு தமிழக மீனவர்களை வேட்டையாடுவதை எதிர்த்து.  நம்மு டைய மீனவர்களின் நியாயமான உரிமைகளைக் கூட மறுக்கிறது. நிலத்தைப் பொறுத்தவரையில், ஒரு நாட்டு எல்லையை இன்னொரு நாட்டினர் தாண்டினார்கள் என்பதற்காக கைது செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று நிலத்தில் இருக்கின்ற கோடு போன்று, எல்லை கிடையாது கடலில்.

மீன் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது, திடீ ரென்று காற்று வேகமாக அடித்தால், எல்லைத் தாண்டி போகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அது இவர்களுடைய கட்டுப்பாட்டிலும் இல்லை; கைகளி லும் இல்லை.

ஆனால், இப்பொழுது நிலை என்னவென்றால், நம்முடைய நாட்டு எல்லைக்குள் இருக்கும்பொழுதே, நம்முடைய கடற்படையினரின் தொல்லைகள் நம்முடைய மீனவர்களுக்கே இருக்கின்றன என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், திட்டமிட்டே, இலங் கைக் கடற்படையினர் கப்பலைக் கொண்டு மீனவர் படகின்மீது மோதுகிறார்கள்.

ஆகவே, இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, நிச்சயமாக அந்தப் போராட்டம் நடைபெறும்.

மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன

செய்தியாளர்: மாநில அரசின் உரிமைகளை யெல்லாம், ஒன்றிய அரசு பறித்துக்கொண்டிருக்கிறதே, அதற்கு எதிரான போராட்டங்களையும் நடத்துவீர் களா?

தமிழர் தலைவர்: மீனவர் பிரச்சினை என்பது மிக முக்கியமான பிரச்சினையாகும்.

அதற்கு வேண்டிய ஒரு தளநாயகர் நம்முடைய முதலமைச்சர்தான். தமிழ்நாடுதான் அதற்கு வழி காட்டக் கூடியது.

உறவுக்குக் கைகொடுப்போம்; அதேநேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று தெளிவாகச் சொன்னவர், அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்- திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வழிகாட்டி அவர்.

அண்ணா அவர்கள், மாநில உரிமைகளுக்காகவே, மிகப்பெரிய அளவிற்கு, மாநில சுயாட்சி என்று சொன்னார்.

மாநில சுயாட்சி என்று சொன்னால்கூட, நீங்கள் பயப்படுவீர்கள்; மாநில உரிமைகள் என்று சொல்கி றோம்.

மாநில உரிமைகள் அரசமைப்புச் சட்டம் இருக் கின்றபொழுதே, எப்படி ஒரு புத்தகத்திற்குள் செல்லரித்துக் கொண்டு போகுமோ - அதுபோல, அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டே மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு நீட் தேர்வை எடுத்துக்கொள் ளலாம்.

மாநிலப் பட்டியலிருந்து கல்வி நெருக்கடி காலகட்டத்தில் கொண்டு போகப்பட்டது. இப்பொழுது இருப்பது ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்).

ஆனால், ஒத்திசைவுப் பட்டிலிலிருந்து, யூனியன் லிஸ்ட் என்று சொல்லக்கூடிய ஒன்றிய அரசினுடைய அதிகாரத்தின்கீழ் கொண்டு போனதுபோன்று, இந் தியா முழுவதும் ஒரே தேர்வினை நடத்துவோம் என்று சொல்வதற்கு, அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அதுமட்டுமல்ல, நீட் தேர்வு - தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவக் கல்லூரியில், இங்கே இருக் கின்ற பிள்ளைகள் படிக்க வாய்ப்பில்லை. போதுமான அளவிற்கு டாக்டர்கள் -நோயாளிகள் விகிதாசாரத்தை சரியான அளவிற்குப் பூர்த்தி செய்ய முடியவில்லை.

இப்பொழுது வெளி மாநிலத்தில் இருக்கின்றவர் களுடைய படிப்பிற்காக - நாங்கள் வியாபாரத்திற்காகக் கொடுப்போம் - அவர்கள் எத்தனை லட்சம் ரூபாயை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னால், Commercialization of Medical Education  - முழுக்க முழுக்க வணிக மயமாக்கக் கூடிய ஒரு தத்துவம். அதற்கு ஒரு கோட்டா ஒதுக்குகிறார்கள்.

''அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே'' என்ற பழைய கிராமத்துப் பழமொழி போன்று, எங்கே இருந்து எடுத்து,  யாருக்குக் கொடுப்பது? நம்முடைய மாநிலப் பிள்ளைகளே இடம் இன்றித் திணறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாட்டில் டாக்டர் படிப்பு படித்தார் என்றால், அவர், அவருடைய மாநிலத்திற்குச் செல் வாரே தவிர, இந்த மாநிலத்தில் உள்ள நோயாளிகளைக் கவனிப்பதற்கு வாய்ப்பில்லை.

ஆனாலும், கல்வி இன்னமும் ஒத்திசைவு பட்டியலில்தான் இருக்கிறது.

அதேபோன்றுதான், விவசாயிகள் பிரச்சினை. ஓராண்டிற்கு மேலாகப் போராடிக் கொண்டிருக்கி றார்கள். விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கின்றது. மாநில உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறது ஒன்றிய அரசு.

அண்மையில், கூட்டுறவுச் சட்டம் - இதுவரையில் கூட்டுறவு என்பது முழுக்க முழுக்க மாநில அதிகாரம்.

எப்படி கல்வி பறிக்கப்பட்டதோ,

எப்படி விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப் பட்டதோ,

அதேபோன்று கூட்டுறவுத் துறையும் பறிக்கப்படும்  நிலை!

கூட்டுறவுத் துறை என்பதற்கு வழிகாட்டி தமிழ் நாடுதான். முதன்முதலில் கூட்டுறவுத் தத்துவத்தை வளர்த்தவர்கள் தமிழ்நாட்டவர்கள்தான்.

ஆகவே, இந்த உரிமைகள் நாளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

ஒரு மரியாதைக்குக்கூட மாநிலங்களைக் கலந்தா லோசிப்பது கிடையாது. இதை ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் இன்றைக்கு உணர்ந்து கொண்டிருக் கின்றார்கள்.

கேரளத்திலிருந்து மேற்கு வங்காளம் வரையில் -

இந்தப் பக்கம் அசாம் வடகிழக்குப் பகுதி உள்பட உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேகங்கள் திரண்டு கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய அளவிற்கு எதிர்காலத்தில் ஒரு பெரிய போராட்ட வடிவத்தை எடுக்கும்.

இதற்குத் தூண்டுகின்றவர்கள் யார் என்றால், ஒன்றிய அரசுதான்.

அபகரிக்கப்பட்ட இடங்களை மீட்பது நல்ல பணிதான்!

செய்தியாளர்: கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பிரச்சினை என்கிறார்களே?

தமிழர் தலைவர்: அபகரிக்கப்பட்ட இடங்களை மீட்கிறோம் என்று சொல்வது நல்ல பணிதான். அது கோவிலாக இருக்கட்டும்; அரசுக்குச் சொந்தமான இடமாக இருக்கட்டும்.

ஆனால், அதேநேரத்தில் இந்தப் பிரச்சினையில், ஏழை விவசாயிகள், நீண்ட காலமாக வாய்ப்பில்லாதவர்கள் - அவர்களை வெளியேற்றுவது என்பதில், மனிதாபிமானத்தோடு அரசு நடந்துகொள்ளவேண்டும் - இந்த ஆட்சி உள்பட!

எனவேதான், இது மக்கள் ஆட்சி - மக்கள் உரிமை; கோவில்கள்கூட மக்களால் கொடுக்கப்பட்டது - அதுமட்டுமல்ல, அது மக்களுடைய பணம்.

இன்றைக்குச் சிறப்பான முறையில், அறநிலையத் துறை சார்பாக 6 கல்லூரிகளைத் தொடங்குகின்றோம் என்று அறிவித்திருக்கிறார்கள். கல்வி என்பது சோசியல் இன்வெஸ்ட்மெண்ட் - சமூக முதலீடு. அதேமாதிரியான அளவிற்குத்தான் அந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

ஜாதிக்கலவரங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும்

செய்தியாளர்: தஞ்சை மாவட்டத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் அதிகரித்து பதற்றமாக இருக்கிறது; இரண்டு காவல்துறையினர் தாக்கப்பட்டு இருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய பணிகளை நாம் செய்துகொண்டிருக்கின்றோம். ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தை வலியுறுத்தி, மிகப்பெரிய அளவிற்கு தந்தை பெரியாருடைய பணி - அனைத்து ஜாதியினர் உள்பட - அதுதான் அதனுடைய அடையாளம்.

வடக்கே இருந்த ஜாதிக்கலவரத்தை இங்கே கொண்டுவருவதற்காக வேண்டுமென்றே சில சக்திகள் திட்டமிட்டு ஊடுருவியிருக்கின்றன.

அதுமட்டுமல்ல, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை, இப்படி ஓர் அமளிக்காடாக ஆக்குவதன்மூலமாக வேறு வகையில், தமிழ்நாட்டு அரசை குறை சொல்ல முடியவில்லை - ஆகவே, இதன்மூலமாகவாவது சட்டம் - ஒழுங்கு என்ற ஒரு சாக்கை  சொல்லலாமா என்பதற்காகத்தான் - இந்த பொம்மலாட்டத்தின் இரு கயிறுகளையும் இழுத்துக் கொண்டிருப்பது ஒரே நபர்தான் என்பதை அரசாங்கம் அடையாளம் காட்டவேண்டும்.

ஒரே நபர் என்றால், உருவகப்படுத்தி நான் சொல்கிறேன்; அதற்கு மூலாதாரம் எங்கு இருக்கிறது என்று பார்க்கப்படவேண்டும்.

இப்பொழுது என்ன செய்கிறார்கள்? மறைந்து போயிருக்கின்ற ஜாதிகள் எல்லாம் - ஜாதிப் பெயரைப் போடுவது அநாகரிகம் என்று கருதியதற்குப் பதிலாக - புதிதாக ஜாதிப் பட்டத்தை போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்கள் - ஜாதிப் பெருமைகளைச் சொல்லவேண்டும் - என் ஜாதிப் பெருமை - உன் ஜாதிப் பெருமை என்று சொல்லி, எப்படி கிராமத்தில், வடக்குத் தெருக்காரர்களுக்கும் - தெற்குத் தெருக்காரர்களுக்கும், கிழக்குத் தெருக்காரர்களுக்கும், மேற்குத் தெருக்காரர்களும் சண்டை உண்டாக்குவது திருவிழாக்களின்போது என்பதுபோல,

ஆகவே, இதுபற்றி ஓர் ஆய்வு செய்து, ஜாதிக் கலவரங்கள்  இல்லாத அளவிற்குச் செய்யவேண்டும். முளையிலேயே அரசு இதில் தயவு தாட்சண்யம் இல்லாமல், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, களைந்தெறியவேண்டும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment