டில்லியில் பெரியார் மய்யம் அமைய கடுமையாக உழைத்தவர் எங்கள் குடும்பம் வேறு - நல்.இராமச்சந்திரன் குடும்பம் வேறு அல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 21, 2021

டில்லியில் பெரியார் மய்யம் அமைய கடுமையாக உழைத்தவர் எங்கள் குடும்பம் வேறு - நல்.இராமச்சந்திரன் குடும்பம் வேறு அல்ல!

எனக்கு மெய்க்காவலர் போல இருந்தவர் என்.ஆர்.சி.

படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர்

சென்னை, செப்.21 டில்லியில் பெரியார் மய்யம் அமைய கடுமையாக உழைத்தவர்; எங்கள் குடும்பம் வேறு - நல்.இராமச்சந்திரன் குடும்பம் வேறு அல்ல! எனக்கு மெய்க்காவலர்போல இருந்தவர் என்.ஆர்.சி. என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

கடந்த 13.9.2021 அன்று காலை ஒரத்தநாடு புலவன்காட்டில் நடைபெற்ற மறைந்த கர்னல் நல்.இராமச்சந்திரன் அவர்களின் முதலாமாண்டு நினை வேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலமாக நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது நினைவேந்தல் உரை வருமாறு:

நம்முடைய துன்பத்தை, துயரத்தையெல்லாம், சோகத்தையெல்லாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய...

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்த வராகிவிட்ட அருமைச் செல்வர், டாக்டர் நல்.இராமச் சந்திரன் அவர்களுடைய முதலாமாண்டு நினைவைப் போற்றுகின்ற இந்த நிகழ்ச்சியில், அவருடைய படத்தைத் திறந்து வைத்து ஆறுதல் உரை ஆற்றக்கூடிய வாய்ப்பில், இதில் கலந்துகொண்டு, நம்முடைய துன்பத்தை, துயரத் தையெல்லாம், சோகத்தையெல்லாம் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரத்தநாடு சட்டப்பேரவையின் மேனாள் உறுப்பி னர் வழக்குரைஞர் எம்.இராமச்சந்திரன் அவர்களே,

கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களே,

நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய அருமைச் சகோதரர் நல்.பரமசிவம் அவர்களே,

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையை நிகழ்த்தவிருக்கக்கூடிய சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் தேர்வுக் கட்டுப் பாட்டாளர் சுந்தரராசன் அவர்களே,

புலவன்காடு நாட்டாண்மை திரு.எஸ்.ஆர்.எம்.ரவிக் குமார் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மெய்க்கப்பன் அவர்களே,

மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாகக்கூடிய பெரியவர் நல்லான் அவர்களே, முனைவர் எச்.பர்வீன் மற்றும் குடும்பத்தினர்களான உறவுகளே, தோழர்களே, நண்பர் களே, ஊர்ப் பொதுமக்களே உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

எப்படி பேசுவது? எப்படி இந்தப் பணியை செய்வது? என்பது எனக்குள்ள மிகப்பெரிய துன்ப மயமான ஒரு கடமை.

எங்கள் குடும்பம் வேறுராமச்சந்திரன் குடும்பம் வேறு அல்ல!

இது ஒரு கெட்ட வாய்ப்பு - காரணம், நாங்கள் பிள்ளை போல வளர்த்தவர். எங்கள் குடும்பம் வேறு, ராமச்சந்திரன் குடும்பம் வேறு என்று நாங்கள் பிரித்துப் பார்த்ததேயில்லை.

ராமச்சந்திரன் அவர்கள் இளமைக்காலம் முதற் கொண்டே துடிப்போடு, கடும் உழைப்போடு, நல்ல அறிவுத் திறத்தோடு, சுய உழைப்பினாலே வளர்ந்தவர்.

நாகையில், வலிவலம் தேசிகர் பாலிக்டெக்னிக் கல் லூரியில் அவர் பணியாற்றியபொழுது, அங்கு தேர்வு சம்பந்தமாக ஒருமுறை சென்ற, எங்கள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் திருமதி சுந்தரி வெள்ளையன் அவர்கள் இவருடைய ஆற்றலை, திறமையை அளந்து வந்து, என்னிடத்திலே சொன்னார்.

அவர் சிறப்பாக அங்கே பணியாற்றுகிறார். நம்மு டைய பாலிடெக்னிக்குக்கு வந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். நான் அவரை அழைத்திருக்கின்றேன். அதற்கு நீங்கள் ஒப்புதல் கொடுக்கவேண்டும் என்று சொன்னார். அப்பொழுது இராமச்சந்திரன் அவர்கள் எனக்கு அறிமுகம் இல்லை. அந்தக் காலம் முதற்கொண்டு அவர் நம்முடைய பாலிடெக்னிக் கல்லூரியில் பணி யாற்றினார்.

அதேபோல, பர்வீன் அவர்களும், ஜமீனுல்லிசா என்ற பெயரிலே இருந்தார். என்னுடைய மகன் அசோக் ராஜ் - அவருடைய துணைவியார் சுபிதா, திருவாளர் சுப்ரமணியம் இப்படி பலரும் அவருடன் பழகக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள்.

எங்களால் செதுக்கப்பட்டவர்எங்களால் எல்லா வகையிலும் வளர்க்கப்பட்டவர்

எல்லோரும் சிறப்பாகப் பழகிய நேரத்தில், பர்வீன் அவர்களும், இராமச்சந்திரன் அவர்களும் வாழ்விணை யராக ஆகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய ஒரு நிலை உருவானது. யாரிடத்திலும் பண்போடு பழகக்கூடியவர். என்னைவிட என்னுடைய வாழ்விணையர் அவர்களுக்கு செல்லப் பிள்ளையாக இருந்தவர். எங்கள் குடும்பத்தினருடன் கலக்காமல் அவர் எந்த முடிவையும் எடுக்கமாட்டார். எங்களால் செதுக்கப்பட்டவர்; எங்களால் எல்லா வகையிலும் வளர்க்கப்பட்டவர்.

அந்த வகையில், அவருடைய உழைப்பை நாங்கள் அங்கீகரித்து, மகளிர் பொறியியல் கல்லூரியாக ஆன நேரத்தில், அதிலேயும் அவரைப் பொறுப்பேற்கச் செய்து, படிப்படியாக வளர்ந்த நேரத்தில், கல்லூரி முதல் வராக, பிறகு துணைவேந்தராக ஒருமுறை அல்ல இருமுறை இருந்தார். இருமுறைதான் துணைவேந்தராக இருக்க முடியும்; அதற்குப் பிறகு சட்டத் தடை இருக்கிறது.

டில்லியில் பெரியார் மய்யம் அமைவதற்குக் கடுமையாக உழைத்தவர்

பிறகு அவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்று சிறப் பாகப் பணியாற்றித் திரும்பினார்கள். நான் டில்லிக்குச் சென்றால், அவரை அழைத்துச் செல்வேன்.

இந்தியத் தலைவர்கள், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்- போன்றவர்கள், கலைஞர் மற்ற தலைவர்கள் எல்லோ ருக்குமே அவர் அறிமுகமானவர்.

வடக்கில் சந்திரஜித் யாதவ் போன்றவர்கள் மற்ற தலைவர்களோடு - எந்தெந்த தலைவர்களோடு சமூகநீதி பயணங்களில் நான் பயணித்திருக்கிறோனோ, அத்தனை பேரும் இராமச்சந்திரன் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கக்கூடிய அளவிற்கு நான் அறிமுகப்படுத் தியிருந்தேன். அந்த வேகம்தான், டில்லியில் பெரியார் மய்யம் அமைவதற்கு, அவருடைய கடும் உழைப்புப் பயன்பட்டது.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், அதேபோல,  வல்லத்தில் பெரியார் மணியம்மை தொழில்நுட்பமாக வளர்ந்திருக்கக்கூடிய நிகர் நிலைப் பல்கலைக் கழகம் - கல்லூரியாகத் தொடங்கும்பொழுது, இங்கே ஒரு பச்சைப் புல்கூட முளைக்காது என்று சொன்னார்கள்; ஆனால், அதை மாற்றிக் காட்டிய பெருமை - கல்லூரி முதல்வராக இருந்த கோபால்சாமி அவர்கள் தொடக் கத்தில் கொஞ்சம் முயற்சி எடுத்தாலும்கூட, அதற் கடுத்துப் பொறுப்பேற்ற நம்முடைய இராமச்சந்திரன் அவர்கள், அதை மிகப்பெரிய அளவிற்கு மாற்றிக் காட்டினார். ஒவ்வொரு இடத்திலும் நாம் கொடுத்த சுதந்திரம், மிகச் சிறப்பாக செயல்பட அவருக்குத் துணை புரிந்தது.

டில்லி பெரியார் மய்யம் மட்டுமல்ல - அவரையே அறக்கட்டளையினுடைய உறுப்பினராகவும் நியமித்து, பல காரியங்களையும் செய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றோம்.

பண்பின் சிகரமாகபாசத்தின் நிறைகுடமாக இருந்தவர்

நம்முடைய கல்விக் குடும்பமாக இருந்தாலும் சரி, கொள்கைக் குடும்பமாக இருந்தாலும் சரி, உறவுக் குடும்பமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலுமே அவர் கள் முக்கியத்துவம் பெற்ற ஒருவராக, பண்பின் சிகரமாக, பாசத்தின் நிறைகுடமாக இருந்தார் அவர்.

கரோனா காலகட்டத்தில் காணொலிமூலமாக நடை பெற்ற கூட்டத்தில் எல்லாம் பங்கேற்றார். சில கருத்து களை அவர் எடுத்துச் சொன்னபொழுதுகூட, ‘விடு தலை'க்குக் கடிதம் எழுதுங்கள் என்று சொன்னேன். அப்படியே எழுதினார் - மாணவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று.

அப்படிப்பட்டவர், திடீரென்று கரோனா தொற்றினால் தாக்கப்பட்டு, கொடுமையாக நம்மிடருந்து அவர் பறிக்கப்பட்டார் என்பதை இன்னமும்கூட எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி ஆறுதல் சொல்வது என்பதைவிட, எப்படி ஆறுதல் பெறுவது என்பது எங்களுக்கு மிக முக்கியம்.

அம்மா அவர்கள், எங்கள் குடும்பத்தில் இருக்கின்ற அத்துணை பேரும் இரண்டு நாள்கள் அழுது கொண் டிருந்தார்கள். அவர்களுடைய துன்பம், துயரம் உண்மையானது; ஈடு செய்ய முடியாத ஒன்று. சொந்த பிள்ளையை இழந்ததுபோன்ற ஓர் உணர்வு.

அதேபோலத்தான், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நண்பர்கள் சாகோதரர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களானாலும், அதேபோல, அருள்செல்வி அவர் களானாலும், சிங்கப்பூரில் இருக்கின்ற கவிதா அவர் களானாலும் எல்லோருக்கும் அவரைப்பற்றி நன்றாகத் தெரியும். எல்லோர் வீடுகளிலும் உறுப்பினர்போல பழகியவர்.

ஒரு மெய்க்காவலர் போன்று என்னைப் பார்த்துக் கொள்வார்

எந்த நிலைக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்ளக் கூடிய எளிமையின் சின்னமாக இருக்கக் கூடியவர். வசதி, வாய்ப்புகள் இருக்காது. அவரை அழைத்துப் போனால், ஒரு மூன்று, நான்கு பேர் என்னோடு இருப்பதுபோல, ஒரு மெய்க்காவலர் போன்று என்னைப் பார்த்துக் கொள்வார். என்னோடுதான் அவர் தங்கி யிருப்பார், என்னுடைய உடல்நிலையைக் கருதி. அதே போல, எனக்கு என்ன தேவையோ, அதைத் தெரிந்து விரும்பி செய்வார்.

இன்னொரு பக்கத்தில் என்னுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வார். யாரோடு எப்படி தொடர்புகொண்டு பேச வேண்டுமோ, அதை சிறப்பாகச் செய்வார்.

பிரச்சாரங்களுக்காக வெளி மாநிலங்களுக்கு நான் செல்லுகிறபொழுது, ஆந்திராவாக இருந்தாலும், மகா ராட்டிராவாக இருந்தாலும், மற்ற மற்ற பகுதிகளுக்குச் சென்றாலும், தோழர் இராமச்சந்திரன் அவர்களை அங்கிருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்துவேன்.

எங்களுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிற்குத் தோன்றாத் துணையாக இருப்பார் என்று நினைத்தோம்!

அப்படி ஓர் அற்புதமாக வளர்ந்து, எங்களுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிற்குத் தோன்றாத் துணையாக இந்த இயக்கத்திற்கு, இந்த அமைப்பிற்கு, கல்வி நிறு வனங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்வார் என்கிற ஓர் எண்ணத்தோடு அவரை நாம் செதுக்கி செம்மைப்படுத்தினோம்.

ஆனால், இயற்கையின் கோணல்புத்தி அதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்று நினைக்கின்ற நேரத்தில், மிகப்பெரிய சோகம், கொடுமை சொல்லொணா அள வில் இருக்கிறது.

அவருக்கு இதய சங்கடம் ஏற்பட்ட நேரத்தில், நாங்கள் துடிதுடித்துப் போனோம்.

இல்லை, இல்லை - இதெல்லாம் வாயுத் தொல்லை என்று சொன்னவுடன்,

இல்லை இல்லை நீங்கள் உடனே சென்னைக்கு வாருங்கள் என்று நான் சொன்னேன். நான் சொல்வதைத் தட்டமாட்டார்.

அப்படி அவர் சென்னைக்கு வந்தவுடன், பிரபல மருத்துவரிடம் சென்று, அவருக்கு உரிய சிகிச்சை செய் யப்பட்டு,  அதன்மூலம் சரியான நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்.

அதற்குப் பிறகு அவர் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார். அப்படிப்பட்ட ஒருவரை நாம் இழந்து, ஓராண்டு ஓடிவிட்டது என்பது நினைக்க முடியாது ஒன்று.

அவரிடம் பயின்ற மாணவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்!

ஆனால், அவரால் பயன்பெற்றவர்கள் எண்ணற்ற மாணவர்கள். இன்னமும் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய மாணவ, மாணவிகள்என்.ஆர்.சி.' என்ற மூன்று எழுத்தை மறக்காதவர்கள்.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர் னியாவுக்குச் சென்றிருந்தேன், அப்பொழுது அங்கே நம்முடைய மாணவிகள் அவரைப்பற்றி விசாரிப்பார்கள். எங்கே பார்த்தாலும் அவருடைய மாணவ, மாணவி கள்தான். சிங்கப்பூருக்குச் சென்றபொழுதுகூட அவரு டைய மாணவிகள், அவரை விசாரித்தார்கள்.

நமக்கு மட்டும் இழப்பல்ல- ஊருக்கு மட்டும் இழப்பல்ல - உலகிற்கே இழப்புதான்!

இப்படி ஒரு நல்ல பண்பாளராக, சிறந்த கல்வியாளராக, நிறைந்த மனிதநேயமிக்கவராக இருக்கக்கூடிய அவரை, நாம் இழந்தது, நமக்கு மட்டும் இழப்பல்ல- ஊருக்கு மட்டும் இழப்பல்ல - உலகிற்கே இழப்புதான்!

இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந் தவர். அவருடைய பண்பாடு இருக்கிறதே, யார் உதவி என்று வந்தாலும், அதைத் தாராளமாகச் செய்வார். எல் லோரையும் கைதூக்கி விடவேண்டும் என்று சொல்வார். அது குடும்பத்துச் சகோதரர்களாக இருந்தாலும் சரி, வெளியுலகத்தில் இருக்கின்றவர்களாக இருந்தாலும் சரி.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான, மாமனிதநேயம் படைத்த ஒருவரை நாம் இழந்திருக்கிறோம் - இந்தக் குடும்பம் இழந்திருக்கிறது - இந்தக் கொள்கை இழந்திருக்கிறது - இந்த இயக்கம் இழந்திருக்கிறது என்றால், எப்படி நாம் பரிகாரம் செய்யப் போகிறோம் என்று தெரியாது.

இருந்தாலும், அய்யா அவர்கள், பகுத்தறிவாளர் என்ற முறையில் சொன்னார்கள்.

எது தவிர்க்க முடியாது இருக்கிறதோ -

எதை மீண்டும் பெற முடியாது என்ற அளவில் இருக்கிறதோ - அதை ஏற்றுக்கொள்வதுதான் பகுத்தறி வாளர்களுடைய கடமை என்று சொன்னதுதான், ஒரே ஓர் ஆறுதல் வார்த்தையாக நாம் கருதுகிறோம்.

அவர் விட்ட பணிகளையெல்லாம் தொடரவேண்டும்!

அந்த வகையில்தான், அவருடைய இழப்பு என்பது ஈடு செய்ய முடியாததாக இருந்தாலும், ஏற்க வேண்டி யதாக ஆகிவிட்டது. அந்த வகையிலே, அதனைத் துணிச்சலாக ஏற்றுக்கொண்டு, அவர் விட்ட பணி களையெல்லாம் தொடர்ந்து நடத்துவதற்கு முன்வந்த அவருடைய வாழ்விணையர் பேராசிரியை பர்வீன் அவர்கள், அதேபோல, அவருடைய சகோதரர்கள், அவருடைய குடும்பத்தினர் எல்லோரும்  பெருமை யோடு அந்தப் பணியை செய்து முடிக்கவேண்டும்.

இராமச்சந்திரன் அவர்கள் மறையவில்லை - நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்.

கிராமங்களில் இருக்கும் ஒவ்வொருவரும் படித்து விட்டு வெளிவருகிறபொழுது, இராமச்சந்திரன்களாக வெளியே வரவேண்டும்.

உழைப்பினாலே வளரவேண்டும் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

அப்படிப்பட்டவருடைய வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமைந்திருக்கிறது. ஆனால், அது குறுகிய வாழ்க்கையாக ஆகிவிட்டதே என்பதுதான் வேதனையான ஒன்று.

எனக்கு மகிழ்ச்சிகரமான கடமையல்ல - மிகவும் தொல்லையான ஒரு தண்டனையான கடமை!

அந்த வகையிலே, அவருடைய படத்தினைத் திறந்து வைப்பது எனக்கு மகிழ்ச்சிகரமான கடமையல்ல - மிகவும் தொல்லையான ஒரு தண்டனையான கடமை யாகும். அதைச் செய்து முடிக்கிறேன்.

இராமச்சந்திரன் அவர்களுடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், வல்லம் பெரியார் பல்கலைக் கழகத்தினுடைய வளாகம் முழுவதையும் அவர் சிறப் பாக உருவாக்கினார். அங்கே இருக்கின்ற கட்டடக் கலை வளாகப் பகுதியின் ஒரு பகுதியை இராமச்சந்திரன் அவர்களுடைய நினைவைப் போற்றும் வகையில் மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

எனவேதான், எப்பொழுதும் அவர் எங்களோடுதான் இருப்பார் என்பதற்கான அடையாளம் அது.

அந்த வகையில்தான், மறக்க முடியாதவராக என் றைக்கும் அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இராமச் சந்திரன் அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள், மறையவில்லை என்கிற ஒரு ஆறுதல்தான், அவருடைய ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.

எனவே, பல்கலைக் கழகத்தினுடைய வெற்றியில் இராமச்சந்திரன் இருப்பார்.

வாழ்க்கையின் வெற்றியில் இராமச்சந்திரன் இருப்பார்.

சகோதரர்களுடைய வெற்றியில் இராமச்சந்திரன் இருப்பார்.

அவருடைய வாழ்விணையரின் வெற்றியில் இராமச் சந்திரன் எழுந்து நிற்பார் என்பதுபோன்ற உணர்வுகளைப் பெற்று, அவரைப் போன்று மற்றவர்கள் மனிதநேயத் தோடு நடந்துகொள்ளவேண்டும் என்ற பாடத்தை அவரிடமிருந்து பெறவேண்டும்.

இராமச்சந்திரன் ஒரு படமல்ல - சமுதாயத்திற்குப் பாடம் - ஊருக்கும், உலகத்திற்கும் பாடம்

எனவே, இராமச்சந்திரன் ஒரு படமல்ல - பாடம் - நமக்கெல்லாம் பாடம் - சமுதாயத்திற்குப் பாடம் - ஊருக் கும், உலகத்திற்கும் பாடம் என்று கூறி, அவருடைய நினைவைப் போற்றுகிறோம்.

வாழ்க இராமச்சந்திரன் புகழ் -

வளர்க அவர் கண்ட வெற்றிகள் -

வாழ்க பெரியார்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

No comments:

Post a Comment