ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 25, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு மூலம் குடியரசுத்தலைவர், பிரதமர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து அழுத்தம் கொடுத்தால் என்ன?

- அய்ன்ஸ்டீன் விஜய், சோழங்குறிச்சி

பதில்: ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சார்பாக முதலமைச்சர் சென்று வற்புறுத்தினார்; அதுவும் - மேற்கொண்டு அப்படி அவர்களை பார்ப்பது பெரும்அளவுக்கு பயன் தருவதைவிட, மக்கள் இயக்கத்தை நாடு முழுவதும் கட்டி, இடையறாத தீவிர பிரச்சாரமே பெரும் பயன் தரும்.

கேள்வி : உள்ளாட்சி தேர்தலில் உள்ளூரில் மக்களுக்குத் தேவையான, ஓரளவிற்கு நேர்மை யான ஒருவரை தேர்ந்தெடுக்காமல், எவ்வளவு நேர்மையற்றவராகவும், குறைபாடு உடையவராக இருந்தாலும், ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதனாலேயே தேர்ந்தெடுப்பது எப்படி சரியாக இருக்கும்?

-சி.இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில்: உண்மைதான்; கட்சி அமைப்பு ஜனநாயகம் உள்ளாட்சித் தேர்தலில் வந்துவிட்ட பிறகு, வெற்றி பெறுகிறவர் விலைபோகும் நிலை மலிவாகிவிடும். பல குறைபாடுகள் இருப்பினும் தற்போதைய சூழலில் கட்சி பிரதிநிதிகளால் தான் ஏதாவது வளர்ச்சிக்கு உதவிட முடியும். அடிப்படை மாற்றம் ஏற்பட்டால் ஒழிய, உங்கள் நியாயம் - இந்த சூழ்நிலையில் எடுபடாது. எதிர்பார்க்கும் பலன் தராது.

கேள்வி: பொதுமக்களின் மனுக்கள் மாவட்ட அளவில் தீர்க்கப்படாமல் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் குவிவது எதைக் காட்டுகிறது? இதற்கு என்ன தீர்வு?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்: கடந்த கால ஆட்சியில் தவறானவையும், மக்கள் விரோதப்போக்கும் மலையளவு உள்ளன என்பதையே காட்டுகிறது!

கேள்வி : ஜி.எஸ்.டி என்ற பெயரில் மாநில அரசின் வருவாயும், உரிமையும் பறிக்கப்பட்டு மாநில அரசுகளை பிச்சைக்காரர்கள் போல் நடத்தும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்கள் எப்போது எதிர்க்கும்?

-தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்: மற்ற மாநிலங்களுக்கு உரிய விழிப்புணர்வும், உரிமைப் போராட்ட உணர்வும் வந்தால்தான் விடியல் பிறக்கும்! பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கொடுத்த முழக்கமே தலைகீழாகிவிட்டதே!

கேள்வி : தனியார் துறையில் இடஒதுக்கீடு வேறு மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ எங்காவது சாத்தியமாகி உள்ளதா?

-. மணிமேகலை, வீராபுரம்

பதில்: வெளிநாடுகளில் அமெரிக்காவில் பல ஆண்டு காலமாய்AFFIRMATIVE  ACTIONஎன்ற பெயரில் செயல்பட்டு வருகிறதே! கொள்கை அளவில் தனியார் துறையில் இடஒதுக்கீடு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 

கேள்வி 6: சேதுக்கால்வாய் திட்டம் இனிமேல் சாத்தியமே இல்லையா? தென்மாவட்ட இளைஞர் களுக்கு வேறு என்ன வாய்ப்பு ஏற்படுத்தப்படும்?

-ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை

பதில்: மக்கள் மறந்தே போய்விட்டார்கள். நாம்தான் நினைவூட்டிப் பேச வேண்டும். தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இதனால் பெரிதும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது!

கேள்வி : விவசாய நிலங்கள் எல்லாம் வேகவேகமாக விழுங்கப்பட்டு புதிய மாநகராட்சிகளும், நகராட்சிகளும் உருவாவது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

- கவிநிலா புகழ்மணி, விக்கிரமங்கலம்

பதில்: இரண்டும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும் வகையில் திட்டங்களும், வளர்ச்சியும் ஒன்றை மற்றொன்று அழிக்காமல் துணை நிற்கும் வகையில் வளர்ச்சி ஏற்பட்டால் வீழ்ச்சி ஏற்படாது.

கேள்வி : இராணுவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்கும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே - இந்த காலத்திலும் இப்படியா? அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு எதிராக உள்ள இதற்கு என்னதான் தீர்வு?

- தமிழ்வாணன், மதுரை

பதில்: உச்சநீதிமன்றம் இதனை மண்டையிலடித்துத் தீர்ப்பு தந்துவிட்டதோடு, இந்த ஆண்டே தேசிய அகாடமியில் பெண்கள் - மகளிர் இடம் பெற்றாக வேண்டும் என்று கூறியுள்ளது மிகவும் சரியான இடித்துரை.

செயல்படுத்தாவிட்டால் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரக்கூடும் என்பதால் நிச்சயம் செயல் படுத்தப்படும் வாய்ப்பு ஏற்படவே செய்யும்.

கேள்வி : தொல்லியல் துறை என்றாலே காவிகள் கதறுவது ஏன்?

- சங்கர், திருமுடிவாக்கம்

பதில்: திராவிட நாகரிகம் - தொன்மை வாய்ந்தது. காலத்தாலும், பண்பாலும், சிந்தனை செயலிலும் மூத்தது; முதிர்ந்தது என்ற உண்மை அதன் மூலம் வெளிவருமே என்ற ஆரிய கலக்கம்தான் காரணம்!

கேள்வி : செயற்கையாக உருவாக்கப்பட்ட ஜாதித் தடைகள் மற்றும் பாலினப் பாகுபாடுகளை இந்தியச் சமூகத்தில் இருந்து அகற்றுவதில் கல்வி நிறுவனங்கள் பங்கு வகிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள் புதுச்சேரியில் நடைபெற்ற தொழில்நுட்ப பல்கலைக் கழக நிகழ்வில் வலியுறுத்தி இருப்பதை கையொலி எழுப்பி வரவேற்கலாம் அல்லவா?

- ஜெ. சகுந்தலா, மேடவாக்கம்.

பதில்: மேடைப் பேச்சு மட்டும் போதுமா? ஆட்சி அதிகாரத்தில் ஜாதி ஒழிப்புக்கு என்ன திட்டம்?

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என்பவர்கள் ஏன் ஒரே ஜாதி என்று அவசரச் சட்டம் மூலம்  பிரகடனப்படுத்தக்கூடாது என்ற நம் கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லையே ... ஆளும் தரப்பில்!

ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு - கல்வி நிறுவனங்களில் கருத்தரங்கம் நடத்தினால் ஒழியுமா? செயல் யாரிடம் உள்ளது?

No comments:

Post a Comment