52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது - பாராட்டுக்குரியது பாலியல் குற்றங்கள், சாமியார் மோசடிகள் 'கவுரவக் கொலைகளுக்கு' முற்றுப் புள்ளி வைக்கப்படட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 26, 2021

52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது - பாராட்டுக்குரியது பாலியல் குற்றங்கள், சாமியார் மோசடிகள் 'கவுரவக் கொலைகளுக்கு' முற்றுப் புள்ளி வைக்கப்படட்டும்!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஆட்சிக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள்!

52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது & பாராட்டுக்குரியது. பாலியல் குற்றங்கள், சாமியார் மோசடிகள் 'கவுரவக் கொலைகளுக்கு' முற்றுப் புள்ளி வைக்கப்படட்டும். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஆட்சிக்குப் பாராட்டுகள் -& வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு முதல் அமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.. ஸ்டாலின் அவர்களது பொறுப்பில் உள்ள காவல்துறையின்   சிறப்பான சட்டம் -  ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமும், நம்பிக்கையும் ஏற்படும் வகையில்  23.9.2021 அன்று இரவு தொடங்கி 52 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை அனைவரது பாராட்டுதலையும் பெறுவது உறுதி.

தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக, சட்டம் - ஒழுங்குப் பராமரிப்புக்குரிய துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (டி.ஜி.பி.) சைலேந்திரபாபு அவர்களது அதிரடிஉத்தரவுக்கிணங்க தமிழ்நாட்டில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டும், 7 நாட்டுத் துப்பாக்கிகள், 1110 பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதும் சரியான நடவடிக்கையாகும்!

அரசுக்கு மிகப் பெரிய சவால்

கடந்த காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் ரவுடிகளின் அட்டகாசங்களும், கூலிப்படைகளின் சர்வ சாதாரணக் கொலைகளும் புதிதாகப் பொறுப் பேற்றுள்ள தி.மு.. அரசுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தன.

தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் பற்றிய பட்டியலை வைத்து, சரியான வியூகம் வகுத்து 870 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி, 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து மட்டும் 3 நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் போன்ற 250 ஆயுதங்களைக் காவல் துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.

52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்த  'ஸ்டாமிங் ஆப்பரேஷன்' (Storming Operation)என்ற முற்றுகை செயல்பாடு நல்ல பலனைத் தந்துள்ளது!

கூலிப்படைகள் மலிந்து விட்டன!

கூலிப்படைகள் மலிந்து விட்டன என்பதை நடை பெறும் பல கொலைகளும், உடனடியாக அவர்கள் சரண் அடைவதும்  தெள்ளத் தெளிவாகவே விளக்கு வதாக உள்ளன!

சிறைக்குள்ளே கூலிப்படைத் தலைவர்கள் அடைக் கப்பட்டிருக்கும் நிலையிலேயே அவர்கள் ஒரு 'நெட் ஓர்க்' போல அங்கிருந்தே தனது சீடர்களுக்கு கொலைக்குத் திட்டமிட போதிய கருத்துரைகள் வழங்கு வதாகப் பரவலாகப் பேச்சு பலமாகவே அடிபடுகிறது!

ஏதோ ஓர் ஒப்பந்தம் போல மிகவும் 'விஞ்ஞான பூர்வமாக' யாரிடம் எவ்வளவு தொகை தர வேண்டும்; எந்த வழக்குரைஞரை வாதாட வைக்க வேண்டும்; ... அதுவரை அவ்வப்போது எவ்வளவு தொகையை கூலிப்படை உதவியை நாடியவர்கள் தர வேண்டும் என்பதெல்லாம் திட்டமிட்டே நடத்தப்படுகின்றன என்பவை வெளியே உலவும் கொடூரமான செய்தி களாகும்!

புது வாழ்வை வாழ செய்ய நடவடிக்கைகள் தேவை

இவர்களைக் கைது செய்வதோடு இவர்களில் தரம் பிரித்து, மனோ தத்துவ ரீதியில் பக்குவப்படுத்தி, புதுவாழ்வை வாழச்  செய்ய முடியுமா? என்று ஆய்வு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்தால், குற்றங்கள் நிரந்தரமாகக் குறையக் கூடும்!

திருந்தவே மாட்டார்கள் என்ற நிலையைக் கண்டறி யப்படுபவர்கள்மீது கடுமையாகச் சட்டங்கள்  - நடவடிக்கைகள் பாயட்டும்!

சிறைச்சாலை, காவல்துறை, இத்தகைய குற்றமிழைப் போர் என எல்லோரும் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த ஒரு தொடர் நடவடிக்கை மூலமே இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்க முடியும்; இன்றேல் இது ஒரு நாள் பரபரப்புச் செய்தியாகவே முடிந்து விடக் கூடும்!

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கிடுதல் வேண்டும்

இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடுதல், வட மாநிலங்களிலிருந்து வருவோரில் சந்தேகத்திற்குரியவர்களைத் தனியே அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது போன்றவைகள் நல்ல பலனைத் தருவது நிச்சயம்.

தமிழ்நாடு அரசுக்கும், முதல் அமைச்சருக்கும், காவல் துறைத் தலைவருக்கும், ஒத்துழைக்கும் அதிகாரி களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவர்.

சாமியார்களின் மோசடிகள்

சாமியார் மோசடிகள், 'கற்பழிப்புகள்' என்ற வல்லு றவுக் கொடுமை, மந்திரவாதிகள் போர்வையில் பழைய கேடிகளும், ரவுடிகளும் வேஷம் போட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி வஞ்சிப்பது போன்ற கொடுமைகளைத் தடுக்க, ஒரு தனிப் படையை - 'Q' பிரான்ஞ் மாதிரி - உருவாக்கிடுதலும், 'கவுரவக் கொலைகளுக்கு' முற்றுப் புள்ளி வைக்கப்படுவதும் அவசர அவசியமாகும்!

பாலியல் குற்றங்களும், இத்தகையவர்கள் மூலம் பரவுகின்றன. தமிழ்நாட்டில் நரபலிகளும்கூட தலை காட்டத் தொடங்கியுள்ளன. அவற்றை முளையிலே கிள்ளி எறிய, அதிரடித் தனிப்படை 'மோப்பம்' பிடித்து, வருமுன்னரே தடுத்தாட் கொள்ள வேண்டும் என்பதே காவல்துறை தலைமைக்கு நமது அன்பு வேண்டுகோள் ஆகும்! காரணம் சில நேரங்களில் 'செய்யத்தக்கவைகள் செய்யாமையாலும் கெடும்' என்ற நிலை இருப்பதால் கூடுதல் கவனம் தேவை!

கி.வீரமணி 

தலைவர் 

திராவிடர் கழகம் 

சென்னை       

26.9.2021            

No comments:

Post a Comment