தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த இந்நாளின் தனிச்சிறப்பு ‘‘சமூகநீதி நாளாக'' அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 17, 2021

தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த இந்நாளின் தனிச்சிறப்பு ‘‘சமூகநீதி நாளாக'' அறிவிப்பு!

மகிழ்ச்சியோடு நம் பயணம் தொடர்கிறது - அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மகிழ்ச்சிமிகு அறிக்கை

தந்தை பெரியார் அவர்களின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள  மகிழ்ச்சி கலந்த சமூகநீதி நாள் அறிக்கை வருமாறு:

எங்களுக்கு விழிதிறந்து வழிகாட்டி, எங்களதுபிறவி இழிவை' நீக்க, உங்கள் வாழ்நாள் எல்லாம் உழைத்து, எதிர்நீச்சல் அடித்து, ஏச்சுகளையும், ஏளனங்களையும் எதிர்கொண்டு அலுக்காமல், சலிக்காமல் அறிவுப் போர்க் களத்தில் இறுதிவரை போராடி, உருவத்தால் மட்டுமே மனிதர்களாக இருந்த எங்களை, உணர்விலும், கொள்கை யாலும், மானத்தோடும், அறிவோடும் வாழும் மக்கள் என்ற தனித்தகுதிக்கு உயர்த்திய எங்களின் உன்னதத் தந்தையே,

எங்களது கொள்கை வாழ்வின் மூச்சுக் காற்றே,

உங்களது போர்க் களங்களில் நீங்கள் வெல்லாதது எது - ஏது? காரணம், அவை வாய்மைப் போர்க்கள மாயிற்றே!

தூய்மையான பொதுத் தொண்டின் பெருமையான விளைச்சல் அல்லவா?

48 ஆண்டுகள் ஓடினாலும்...

இந்த 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நீங்கள் உருவமாக எங்களுடன் இருந்து எங்களை மகிழ்வித்து, 48 ஆண்டுகள் உருண்டோடினாலும் உணர்வாகவும், லட்சியக் களங்களாகவும் தாங்கள் தத்துவ ரீதியான - தடம் பதித்துள்ளதால், அதில் நாங்கள் தடுமாற்றமில்லாமல் பயணிக்கிறோம் - பயன்பெறுகிறோம்!

1973 சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டில் உங்களின் சூளுரை - இன்று செயல்வடிவம் கொண்டு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கியுள்ளது. கருவறைக் குள் நுழைந்து படமெடுத்தாடிய ஜாதிப் பாம்பும், அதன் தீண்டாமை நச்சுப் பல்லும் பிடுங்கப்பட்ட இடம் கரு வறை - இன்று தகுதி பெற்ற அனைவருக்கும் உரிய தாக்கப்பட்டு விட்டது!

தமிழ்நாட்டில் 2021 இல் பூத்த திராவிடர் இயக்கத்தின் நீட்சி - மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான ஆளுமைமூலம் உங்கள் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, எங்களை மகிழ்வித்து வரலாற்றைப் பெருமிதம் கொள்ளச் செய்தது! செய்கிறது!!

அதுமட்டுமா?

செப்.17 என்ற எம் அறிவு ஆசானின் பிறந்த நாள் சமூகநீதி நாள்' என்ற அறிவிப்போடு அனைவரும் உறுதி யேற்கும் நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!

நீங்கள் வாழுகிறீர்கள் - வரலாறாக!

சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் செயல்பாடுகள்!

சமூகநீதி, ஏட்டில் இருந்தால் போதாது; செயலில் நாட்டில் தென்படவேண்டும் - அதற்காகவே - இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் வகையில் - சமூக நீதி கண்காணிப்புக் குழுவும் உருவாகும் அறிவிப்பை நீதிக்கட்சி ஆட்சி என்ற திராவிடர் ஆட்சியின் (1921-2021) நூற்றாண்டையொட்டிய நாளில் அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் - அண்ணா, கலைஞர் பாரம்பரியத்தில் வந்து அரிய சாதனை செய்துவரும் ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' மு..ஸ்டாலின்.

‘‘பெரியார் அனைவருக்கும் உரியார்'' என்பதை தெரியார் உண்டோ என்று, கேட்கும்வண்ணம் இமய மாய் உயர்ந்துள்ள நாளில், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, சமதர்மம், சமத்துவம் - எல்லாம் பீடுநடை போட்டு புதியதோர் சமூகம் காண்போம்!

பெரியார் உலகம்!

திருச்சி சிறுகனூரில் ‘‘பெரியார் உலகம்'' கம்பீரமாக எழுந்து நிற்க ஆயத்தப்பணிகள் ஆரம்பமாகிவிட்டன!

1. 95 அடி உயர பெரியார் சிலை, 40 அடி பீடம் - ஒட்டுமொத்த 135 அடி உயரத்தில்!

அங்கே அது மட்டுமா?

2. பெரியார் நூல் நிலையம் - ஆய்வு மய்யத்தோடு

3. பெரியார் அறிவியல் அறிவுப் புரட்சியகம் (காட்சி யகம்)

4. மெழுகு சிலை அரங்கம்

5. காட்சி அரங்கம்

6. குழந்தைகள் பூங்கா

7. பெரியார் - ஒலி - ஒளி காட்சியகம்

8. சமூகநீதி - திராவிட இயக்க காட்சியகம்

9. பெரியார் கோளரங்கம்

10. உணவகம் -

இத்தியாதி, இத்தியாதி!

4 அல்லது 5 கட்டப் பணிகள்.

150 ஆம் ஆண்டு பிறந்த நாளில் பணி முழு நிறைவடைய இலக்கு.

மதிப்பீடு சுமார் 100 கோடி ரூபாய்!

மகிழ்ச்சியோடு பயணம் தொடரும்!

எல்லாம் நன்றி காட்டும் மக்களின் காணிக்கையில் அவை வரலாற்று அதிசய உலகமாகக் காட்சியளிக்கும் பணி - தமிழ்நாட்டின் புதிய பொலிவுகளுக்கு உரிய கூட்டல் இது என்று பார்த்தோர் பரவசப்படும் வகையில், சமூகநீதிப் பயணம் ஒரு தொடர் பயணம் அல்லவா?

மகிழ்ச்சியோடு எம் பயணம் தொடருகிறது - பெரியார் அய்யாவின் இந்த இனிய பிறந்த நாளில்!

உங்கள் தொண்டன், தோழன்

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

17.9.2021

No comments:

Post a Comment