ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் தீவிர தேச பக்தி - வேகா பருப்புதான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 15, 2021

ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் தீவிர தேச பக்தி - வேகா பருப்புதான்!

நம்முடைய மக்கள் மத்தியில் ஒரு பழமொழி உண்டு; "அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்று!

"மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு" என்றும் கூட வேறு வகையில் இதே கருத்தினைக் கூறுவதுண்டு.

அதுதான் இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது!

ஆர்.எஸ்.எஸ்., பா... காவிகள் திடீரென 24 கேரட் தேசபக்தி வழிவதால் மூச்சுத் திணறுகிறபடி மும்முரமாகப் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு, பழைய வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, திடீர் தேச பக்தர்களாக, விடுதலைப் போராட்ட வீர தீர சூரர்களின் பரம்பரை போல் காட்ட வேஷங்கட்டித் தெருக்கூத்துக்களில் ஆடுவது போல ஆடுகின்றனர்.

விவரமறிந்தவர்கள் விலா நோகச் சிரிக்கிறார்கள்!

நாட்டின் 75ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுவதாக தங்கள் கட்சிகளுக்கு, ஆர்.எஸ்.எசுக்கு இருக்கும் கறையைப் போக்கி, புது அவதாரம் எடுத்து, புரட்டு வேலை செய்வதில் கில்லாடித்தனம் காட்டுகிறார்கள்!

சுதந்திர தினத்தை, சுதந்திர உணர்வை விதைத்த, நமது சுதந்திரத்தைப் பெற்றுத் தரப் போராடிய 75 தமிழ் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்களாம்! தமிழ் நாட்டுப் பா... தலைவர்கள். தமிழ்நாட்டின் 75 இடங்களுக்கு 75 தலைவர்கள் செல்வார்களாம்!

பாவம், கட்சியை வளர்க்கவும், கடந்த கால கறை யைத் துடைக்கவும், கனக்கச்சிதமான ஏற்பாட்டினை செய்வதில் - அதில் இது ஒரு வித்தை - பழைய "மோடி வித்தை" போல!

சுதந்திரப் போராட்டத்திற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம் - தொடர்பு?

அட வெட்கங்கெட்ட மூளிகளே,

1925இல் ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட நிலையில் (பிஜேபி 1980இல், அதற்கு முன் பாரதிய ஜன சங்கம்) - இவைகளின் முன்னோடியான ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர் என்ன அறிக்கை விட்டார் தெரியுமா?

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து, காந்தி, காங்கிரஸ் நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்பதில்லை என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரபூர்வ முடிவு!

வெள்ளை அரசுக்கு எதிரான காந்தியின் உப்பு தண்டி யாத்திரையில் பங்கேற்க மாட்டோம் என்பதை,

1. அரசின் சட்டங்களை எதிர்த்து மீறுமாறு மகாத்மா காந்தி 1930இல் வேண்டுகோள் விடுத்தார். அவரே உப்பு சத்தியாக்கிரகம் நடத்தினார். இதில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்காது என்று டாக்டர் ஹெட்கேவர் என்ற (பார்ப்பன) தலைவர் அறிக்கை விட்டதை மறுக்க முடியுமா?

2. 1942இல் ஆகஸ்ட் போராட்டம் - “வெள்ளையனே வெளியேறு" என்று காங்கிரஸ் கட்சி நடத்தியது.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த, அவர்களால்குருஜி' என்று அழைக்கப்பட்ட கோல் வால்க்கர் அந்தப் போராட்டங்களில் பங்கு பெற்றாரா? அல்லது ஆதரித்தாவது அறிக்கை விட்டாரா?

1946இல் நடந்த கப்பற்படை போராட்டம் - அதையாவது ஆதரித்தாரா?

அப்போது "ஹிந்து ராஷ்டிரம்" தான் பேசியவர்!

1942 - வெள்ளையனை எதிர்த்த போராட்டத்தில், மேற்கு வங்காளத்தில் அதை ஒடுக்குமாறு வெள்ளைக் கார கவர்னருக்குக் கடிதம் எழுதியவர்சியாமா பிரசாத் முக்கர்ஜி' என்ற ஜன சங்க நிறுவனர் என்ற பார்ப்பன பெருமகன்! (ஆதாரம்: .ஜி.நூரானி எழுதிய நூல்).

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே எங்கே பயிற்சி எடுத்தவன்? ஆர்.எஸ்.எஸ்.-இல் அல்லவா?

இப்படிப்பட்டவர்கள் திடீர் தேசபக்தித் திலகங்கள் முத்திரை குத்திக் கொண்டு,

ஒரு நாளில் இந்த மதவெறி ஓநாய்கள் "சைவ" முத்திரை கொண்டு, சைவமாக மாறிவிட்டார்களா?

திடீர் காந்தி பக்தி!

திடீர் அம்பேத்கர் பக்தி!

திடீர் சமூக நீதி மேல் காதல்!

இடையிடையே காமராசர் பெயரும்! (அவரது  டில்லி வீட்டில் தீ வைத்த கூட்டம் எது - மக்கள் அறிவார்களே!)

இந்த வித்தைகள் - அரசியல் கழைக் கூத்துகள் ஒருவேளை வடநாட்டில் எடுபடக்கூடும்.

பெரியார் மண் பகுத்தறிவு பூமி; ஒப்பனை எது? உண்மை முகம் எது? என பிரித்துப் பார்க்கும்எக்ஸ்ரே' பார்வை உள்ள பக்குவப்பட்ட மண்!

இங்கே கதை நடக்காது;

அமாவாசையையும், அப்துல் காதரையும் கூட கொஞ்சம் இணைத்து காட்டலாமே.

அமாவாசையன்று மீன் வாங்கினால் அப்துல் காதருக்கு விலை சற்று குறைவாகக் கிடைக்கும் என்பதால்!

வித்தைக்காரர்கள் - ‘பப்பு' வேகாது! வேகவே வேகாது!! 

No comments:

Post a Comment