சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்கியதே ஜஸ்டிஸ் என்ற திராவிடர் கட்சியை- இயக்கத்தை பலப்படுத்துவதற்குத்தான்; பாதுகாப்பதற்காகத்தான்!

 பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவு நாள் ஆய்வு உரையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, ஜூன் 7 ‘‘சுயமரியாதை இயக்கத்தை நான் தொடங்கியதே, ஜஸ்டிஸ் என்ற திராவிடர்  கட்சியை, இயக்கத்தை பலப்படுத்துவதற்குத்தான்; பாதுகாப்பதற்காகத்தான்'' என்று சொன்னார் தந்தை பெரியார்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்க உரையாற்றினார்.

பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-2

கடந்த 25.5.2021 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு  ஆய்வு பொழிவு -  ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் இரண்டாவது சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

அவ் ஆய்வுரை வருமாறு:

வரவேற்புரையாற்றிய பேரன்பிற்குரிய கழகத் தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களே, இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கின்ற திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடிய அருமை கொள்கை உறவுகளே, தமிழன்பர்களே, பகுத்தறி வாளர்களே, தோழர்களே, சகோதரர்களே, சகோதரி களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் சி.வெள்ளையன் அவர்களுடைய நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு என்று வரு கிறபொழுது, அதை ஓர் ஆய்வுச் சொற்பொழிவாக நிகழ்த்தவேண்டும்; அது பயனுள்ள அளவிற்கு இன்றைக்கு மற்றவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பார்வையைத் தரவேண்டும்.

தத்துவ ரீதியாக நம்முடைய இளைய தலை முறையினர் - குறிப்பாக இந்தக் கருத்துகளை அவர்கள் அசைபோட்டு சிந்திக்கவேண்டும் என்ற அடிப்படையிலேதான்,  ‘‘திராவிடர் கழகம் - நீதிக்கட்சி தொடங்கி, நீதிக்கட்சி - திராவிடர் கழகம்;  சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழகம்; நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம்; அதே போல, பொது வுடைமை இயக்கம் - திராவிடர் இயக்கம்'' எல்லாவற்றையுமே ஒருங்கிணைக்கக் கூடிய வாய்ப்பாக - ஒரு பரவலாக இருக்கக்கூடிய வாய்ப்பில், எப்படியெல்லாம் சோதனைகள் ஏற்பட்டு, ஓர் இயக்கத்தை நடத்துகின்ற நிலையில், ஒரு பக்கத்தில் பரிணாம வளர்ச்சி, இன்னொரு பக்கத்தில் சோதனைகள்; இவற்றையெல்லாம் அந்தத் தலைமை எப்படி எதிர்கொண்டது? எப்படி முறியடித்தது? என்பதையெல்லாம் விளக்கி, ஆதாரங்களோடு சொல்லவேண்டும்; அந்த ஆவணங்கள் பதிவு செய் யப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான், இன்றும், அடுத்த 3 ஆவது சொற்பொழிவும் அமைய விருக்கிறது.

நம்முடைய காலத்தைப் பயனுள்ள அளவிற்கு செலவழிக்கவேண்டும்!

அருமை நண்பர்களே, உங்களைச் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி. கரோனா காலத்தில், எல் லோரும் கவலையோடும், அதேநேரத்தில், மிகுந்த எச்சரிக்கையோடும் இருக்கக்கூடிய பகுத் தறிவு வாதிகளாகிய நாம், மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்கிற சிந்தனையோடு இருக்கக் கூடிய நாம், நம்முடைய காலத்தைப் பயனுள்ள அளவிற்கு செலவழிக்கவேண்டும் என்ற அடிப்படையில், நான் மகிழ்ச்சியோடு உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதை சிறந்த வாய்ப்பு என்று கருதுகிறேன்.

இதற்கு முன்பு, கடந்த ஓராண்டுக்கு மேலாக, கரோனா காலகட்டத்தில், இதற்கு முன்பு எனக்குப் படிக்கின்ற வாய்ப்பு கிடைத்ததைவிட, இப்பொழுது அதிகமான அளவிற்குக் கிடைக்கிறது. புதிய புத்தகங்களையும், அதேநேரத்தில், பழைய புத்தகங்களையும் மறு வாசிப்பு செய்து, பாடங்களை நினைவூட்டிக் கொள்வதைப்போல, நம்முடைய வழிமுறைகளை ஆழமாக - எப்படி அது அமையவேண்டும் - அதில் எந்தவிதமான வழி தவறல்களும் இருக்கக்கூடாது- பாதையைவிட்டு நழுவிவிடக் கூடாது என்கிற உறுதியை நாம் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக, பல்வேறு பழைய பாடங்களையெல்லாம் படித்து, அதனை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

எல்லையற்ற ஒரு பெரிய மகிழ்ச்சி எனக்கு!

இவ்வளவு அதிகமாகப் படிக்கக்கூடிய வாய்ப்பு இதற்கு முன்பு எனக்குக் கிடைக்கவில்லை! பணிகள் இருந்தன - சுற்றுப்பயணங்கள் - தோழர்களை சந்திப்பது - ‘விடுதலை' அலுவலகப் பணி என்பது ஒரு பகுதி நேரம் - மற்ற ஏடுகளுக்கு எழுதுவது என்பது இன்னொரு பகுதி நேரம்; உறங்குவது, உண்பது போன்ற அன்றாடக் கடமைகள் உடல் நிலையைப் பொறுத்து, உள்ளத்தைப் பொறுத்தது என்பது அது இன்னொரு பகுதி. அதைவிட அதிகமாக நான் அதிகமாக உங்களைச் சந்திப்பது போன்று, படிப்பது போன்று, குறிப்புகளை எடுப்பது போன்றவற்றில் எல்லையற்ற ஒரு பெரிய மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது.

எத்தனை முறை படித்தாலும், நம்முடைய அறிவும், அனுபவமும், தெளிவும், பயனும் பெருக ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு அவை அமைந்திருக் கின்றன.

அந்த வகையில் பார்க்கின்றபொழுது, வெள் ளையன் அவர்களுடைய பெயரால் நடைபெறக் கூடிய நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு கடந்த 30.4.2021 தொடங்கினோம்; அதனுடைய தொடர்ச்சி சொற்பொழிவு இன்று நடைபெறுகிறது;

அய்யா அவர்கள் இயக்கத்தைப்பற்றிச் சொல்லும் பொழுது, ஓர் இயக்கத்தை எப்படி நடத்தவேண்டும் என்பதைச் சொன்னதை, சென்ற பொழிவில் நான் நினைவூட்டினேன்.

ஜஸ்டிஸ் என்ற திராவிடர்  கட்சியை, இயக்கத்தை பலப்படுத்துவதற்குத்தான்; பாதுகாப்பதற்காகத்தான்!

அய்யா அவர்களுடைய உரைகுடிஅரசு' இதழில் இருந்து எடுக்கப்பட்டது.

நம்முடைய இயக்கத்திற்கு 1933-1934 ஆம் ஆண்டுகள் மிக முக்கியமான கட்டங்களாகும்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் என்ன தொடர்பு? என்பதிலிருந்து அதில் தகவல்கள் கிடைக்கின்றன.

‘‘சுயமரியாதை இயக்கத்தை நான் தொடங்கியதே, ஜஸ்டிஸ் என்ற திராவிடர்  கட்சியை, இயக்கத்தை பலப்படுத்துவதற்குத்தான்; பாதுகாப்பதற்காகத்தான்'' என்று சொன்னார் - தந்தை பெரியார்!

தேசியவாதிகள்' என்ற போர்வையில் இருந்த பார்ப்பனர்களுடைய விமர்சனம்!

அதை பலர் குறை சொன்னார்கள்; அக்கால இளைஞர்களே குறை சொல்லக்கூடிய அள விற்கு இருந்தார்கள். இன்னொரு பக்கம் பொது வுடைமைக் கொள்கை - அதை அவர்கள் விட்டுவிடுகிறார்களோ என்கிற ஒரு சந்தேகப் பார்வை. மூன்றாவது, அதற்காக அரசாங்கத் திடமிருந்து தாக்குதல்கள். இன்னொரு பக்கம் பிரிட்டிஷ்காரர்களை இவர்கள் ஆதரிக்கிறார்கள்; வெள்ளைக்காரர்களுக்கு வால் பிடிக்கிறார்கள் என்றுதேசியவாதிகள்' என்ற போர்வையில் இருந்த பார்ப்பனர்களுடைய விமர்சனம்; இவை யெல்லாம் ஒருங்கிணைந்த அந்தக் காலகட்டத் தில், அவற்றையெல்லாம் சந்தித்தார் தந்தை பெரியார்! இதுதான் நாம் மனதிலே உள்வாங்கிக் கொள்ளவேண்டிய மிக ஆழமான கருத்தாகும்.

அப்படி சந்திக்கின்றபொழுது, எவ்வளவு பெரிய கொள்கைத் தெளிவும்; அசாத்திய துணிவும், அதேநேரத்தில், லட்சியங்கள் என்று சொன்னால், அதில் சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு, அதில் இறங்கினார்; அதிலே தான் வெற்றி பெற்றார் தந்தை பெரியார் அவர்கள்.

வித்தியாசமான ஒரு குறள்!

‘‘எனக்குப் புகழ் வேண்டாம்; நான் நன்றியை எதிர்பார்க்கமாட்டேன்; யாரிடத்திலும் கைநீட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் கருத்தை சுதந்திரமாக நான் சொல்லுவேன்; எனக்கென்று தனி சுயநலம் கிடையாது'' என்ற ஒரு துறவிகளுக்கு அப்பாற்பட்ட நிலை.

‘‘யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்

அதனின் அதனின் இலன்''

(அதிகாரம்:துறவு, குறள் எண்:341)

இது மிகவும் வித்தியாசமான ஒரு குறளாகும்.

இதன் பொருள் என்னவென்றால், ஒருவன் தன் னிடமுள்ள எல்லாவற்றையும் ஒருங்கே துறக்கா விட்டாலும், எது எதிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அவன் அவற்றினால் துன்பம் அடைதல் என்பது மட்டும் இல்லை.

துறவுகள் என்று வரக்கூடிய துறத்தலில்கூட, எல்லாவற்றையும் துறக்கவேண்டிய அவசியமில்லை என்பதுதான் - விதிவிலக்கு அளிக்கும் விசித்திரக் குறள்.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையில், அறிவுப்பற்று கொண்டவர்; வளர்ச்சிப் பற்று கொண்டவர். அதற்காகவே மற்றவைகளைப் பற்றி கவலைப்படவில்லை என்பது கிடையாது.

குடிஅரசு' தலையங்கத்தில் தந்தை பெரியார் என்ன குறிப்பிட்டார் என்பதை எடுத்துக் கூறித்தான் என்னுடைய முதல் சொற்பொழிவை முடித்தேன்.

முதல் சொற்பொழிவு நடைபெற்று ஏறத்தாழ 24 நாள்கள் ஆகிறது. பல பேருக்கு மறந்திருக்கும்; நேற்று நடைபெற்ற செய்தியே இன்றைக்கு மறந்து விடுகிறது.

பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

ஆகவேதான், அதனை நினைவூட்டும் அள விற்கு சான்று சொல்லுகிறேன்:

‘‘இயக்கத்தைப் பொறுத்தவரையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, விமர்சனம் செய்கிறவர்களைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும் என்றெல்லாம் தாராளமாகக் கருத்தைச் சொல்லுவார்கள்.

‘‘அன்றியும், சில பேர் இயக்கத்தைப் பொறுத்த வரையில், விமர்சனம் செய்கிறவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்? பொறுப்பு யாருக்கு இருக்கிறது? இயக்கத்தை நடத்தக்கூடியவர்களுக்கு இருக்கிறது.

மற்றவர்கள் எல்லோரும் தம்மைப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை. தன்னுடைய கொள்கையில் உறுதியாக, அதற்கு நல்ல அஸ்திவாரம் - கற்பாறை போன்று ஒரு பாறைக் கோட்டையாக அமைக்கவேண்டும். அது மணல் வீடாக இருந்தால், சரிந்துவிடும்'' என்று சொல்லுகிறார்.

பழைய செய்தியை நான் மீண்டும் நினைவூட்டி, அதற்கு மேலும் சில செய்திகளுக்குச் செல்கிறேன்.

இயக்கத்தைப்பற்றிய சில சிந்தனைகள் - பொதுவு டைமைக் கொள்கைகளை விட்டுவிட்டார்; அல்லது பயந்துவிட்டார்; அல்லது அச்சப்பட்டுவிட்டார்; பிரிட்டிஷ் அரசாங்கத்தினுடைய நடவடிக்கையால் பின்வாங்கிக் கொண்டார் என்பதற்கெல்லாம் இட மில்லை. அதைத்தான் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஒரு முன்னோட்டம் போன்று எடுத்துச் சொன்னார் இங்கே.

ஆழ்ந்து படித்து ‘‘கற்க'' வேண்டும்

அய்யா எழுதும்பொழுது, அந்த எழுத்துகள் ஒவ்வொன்றும்குடிஅரசு' தலையங்கத்தில் மிக விளக்கமான ஆணித்தரமான எழுத்துகள்; ஆழ மான சிந்தனைக்குரியவை.

ஒரு கமா (,), ஒரு புள்ளி (.) என்பது கூட பய னுள்ளதாக இருக்கும்; ஆழ்ந்து படித்து ‘‘கற்க'' வேண்டும்.

அதுமட்டுமல்ல, தந்தை பெரியாருடைய எழுத்து கள், கருத்துகளை எல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும்.

நம்முடைய அறிவு எந்த அளவிற்கு விசால மானதாக இருக்கிறதோ; எந்த அளவிற்கு உள் வாங்கிக் கொள்ளக்கூடிய ஆற்றலோடு இருக்கிறதோ - எந்த அளவிற்கு அசைபோடக் கூடிய அளவிற்கு மிகப்பெரிய சக்தியைப் பெற்று இருக்கிறதோ - அதைப் பொறுத்துதான் அந்தக் கருத்து விளக்கமும், நமக்குக் கலங்கரை வெளிச்சம்போல் கிடைக்கும்.

அதிலே ஒரு பகுதியை நினைவூட்டி மேலே செல்லலாம்.

‘‘அன்றியும், அவர் ஒரு காரிய வீரரே தவிர, வெறும் கொள்கை வீரரல்ல. கொள்கையைச் சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள்; கொள்கைகளைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சவுகரியமாய் இருந்தால், செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய, கொள்கைகளை மட்டும் சொல்லிவிட்டு, ஜெயிலுக்குப் போவது மேலானதாகிவிடாது.''

ஒரு வார்த்தையைப் போடுகிறார் பாருங்கள்; வித்தியாசமான வார்த்தை. இதுவரையில், யாருமே அப்படி கேட்டிருக்க, பார்த்திருக்க முடியாது. ஏனென்றால், இதை நிதானமாகப் படித்து, ஆழமாகச் சிந்திக்கவேண்டும்.

இயக்கத்தில் இரண்டு வகையானவர்; ஒன்று, காரிய வீரர் - இது ஒரு புதிய சொல். நாம் இதற்குமுன் கேட்டதில்லை. இன்னொன்று கொள்கை வீரர். 

‘‘கொள்கை வீரர்'' என்பவர் வெறும் பிரச்சாரம் செய்துகொண்டு, கொள்கைகளை வகுத்துக் கொண்டே போகலாம்.

அய்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?

தந்தை பெரியார் அவர்களுடைய சிறப்பு - அய்யா அவர்களுடைய தனித்தன்மை என்ன வென்றால், கொள்கை வீரராகவும் இருந்தார்; லட்சியத்தை உருவாக்கினார்; அவர்களே அதனை செயல்படுத்தினார்; அதற்காகப் போராட்டம் நடத்தினார்; பல விலை தந்து அதன் வெற்றியையும் அறுவடை செய்தார்.

இந்த இலக்கணத்தில், உலகத்திலுள்ள எந்தத் தலைவரையாவது, எந்தச் சிந்தனையாளரையா வது அய்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மற்றவர்கள் பெரிய சிந்த னையாளராக இருப்பார்கள்; ஆனால், சிந்தனை யாளர்களாக இருந்தால்  போதாது. அவர்கள் மிகப் பெரிய அளவிற்கு செயல்வீரர்களாக இருக்க மாட்டார்கள். அப்படியே செயல் வீரர்களாக இருந்தாலும், பற்பல சிக்கலான நேரங்களில் பின்வாங்கிக் கொள்ளக்கூடிய அளவிற்கு இருப்பார்கள்.

எனவேதான், இது மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி, இதைத் தெளிவாக மற்றவர்கள் உணரவேண்டும்.

ஜெயிலுக்குப் போவது ஒரு பெரிய தியாகம் அல்ல!

‘‘அன்றியும், அவர் ஒரு காரிய வீரரே தவிர, வெறும் கொள்கை வீரரல்ல. கொள்கையை சொல் பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள்; கொள்கைகளைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சவுகரியமாய் இருந்தால், செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய, கொள்கைகளை மட்டும் சொல்லிவிட்டு, ஜெயிலுக்குப் போவது மேலானதாகிவிடாது.''

தியாகத்தைக்கூட சிலர் செய்யலாம்; ஜெயிலுக்குப் போவது ஒரு பெரிய தியாகம் அல்ல என்று பெரியார் அவர்கள் சொல்லுவார்கள்.

ஜெயிலுக்குப் போவது ஒரு பெரிய தியாகமல்ல,  அது தன்னுடைய மகிழ்ச்சிக்காக, தண்டனையை ஏற்கிறோம் என்பது வேறு விஷயம்.

ஆனால், அதைவிட கொள்கைகள் மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதுதான் மிக முக்கியம். அந்த அடிப்படையை தந்தை பெரியார் அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

ஆகையால்தான், காரியத்தில் சாத்தியமான தையே எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும், தொல்லை களுக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார்.

‘‘இதற்குப் பெயர் கோழை என்றாலும், துரோகம் என்றாலும் எனக்குக் கவலையில்லை.

கோழை என்பது செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியங்களை விட்டுவிட்டு ஓடுவதேயாகும்.

துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டு சுயநலத்திற்குப் பின்வாங்கு வதாகும்.''

மேற்கண்ட இரண்டு வியாக்கியானங்களையும் (கோழை - துரோகம்) நன்றாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இன்று அவருக்குச் செய்வதற்கு சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டுவிட்டு ஓடவில்லை.

இரண்டாவதாக, யாரிடத்தில், எவ்வித வாக் குறுதி கொடுத்தோ, கடுகளவாவது தன் சுயநலத் திற்குப் பிரதி பிரயோஜனம் அடைந்தோ, வேறு எந்த சுயநலக் காரியத்திற்கோ ஆசைப்பட்டு பின்வாங்கிவிடவில்லை.

ஆகையால், பாமர மக்கள் என்ன நினைப் பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப் பார்கள் என்றோ, கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்களோ என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடைமையாகாது.

இவையெல்லாம் நமக்கு - இயக்கம் நடத்தக் கூடியவர்களுக்குப் பாடங்கள்.

அந்தத் துணிவுடைமை என்பது, கருத்து ஒருமித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே, துணிவுடைமையும், அறிவுடைமையும் ஆகும்.

கருத்து ஒருமித்தவர்களே அவரது உயிர்த் தோழர்கள். கருத்து வேறுபாடு உடையவர்கள் மற்றவர்களேயாவார்கள்.                     (தொடரும்)

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image