இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!

 பெண் குழந்தைகள் வளர்ப்பு, பழகு முறைகள், பாலியல் கல்வி உள்ளிட்ட சிந்தனையைத் தூண்டும் பகுத்தறிவை வளர்க்கும் கல்வி முறை தேவை!

இந்திய ஒன்றியத்தில் கல்வி வளர்ச்சியில் சிறந்தோங்கி விளங்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது வெட்கக் கேடாகும். இரும்புக்கரம் கொண்டு சட்டம் இதனை ஒடுக்க வேண்டும் கல்வி முறையில், குழந்தைகள் வளர்ப்பு, ஆண், பெண் பழகுமுறை, பாலியல் கல்வி உள்ளிட்ட பெண் சமத்துவத்துக்கு வழிகோலும், சிந்தனையைத் தூண்டும் பகுத்தறிவுக் கல்வி முறையைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

கல்வியில் சிறந்து, வளர்ந்தோங்கி, வரலாறு படைத்து வருவது நம் தமிழ்நாடு. காரணம், 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட திராவிட ஆட்சியை, அதன் பிறகு காமராசர் ஆட்சியைத் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் ஆட்சிகள் ஆகும்!  அதற்கு 'திராவிட மாடல்' பெரிதும் காரணமாகும். 

அண்மையில் கல்வி வளர்ச்சியில் அனைத்திந்திய அளவில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் வரிசையில் கேரளா முதலில் என்றும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் என்ற பெருமை படைத்து உள்ளது.

வேலியே பயிரை மேய்வதா?

இதனைச் சீர்குலைத்து, ஒரு கரும்புள்ளி விழுவதுபோன்று, அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில்  கற்றுத்தரும் ஆசிரி யர்களும், பயிற்றுநர்களுமே  மாணவிகளிடம் பாலியல் சீண்டல்கள் செய்து முறைகேடாக நடந்து கொண்ட விஷமங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து பெரும் வேதனையையும், வெட்கத்தையும் ஏற்படுத்துகின்றது!

மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்த வேண்டிய நல்லாசான்கள் ஆசிரியர்கள். அவர்களில் பெரும்பாலோர் எழுத்தறிவிக்கும் இணையற்ற நற்றொண்டு ஆற்றுபவர்கள் அல்லவா!

வேலியே பயிரை மேய்வது போன்ற வெட்கத்திற்குரிய கீழ்த்தர செயல்களில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்ற புகார்கள் - வெடித்துக் கிளம்பும் நிலை ஏற்படுவது அவர்களுக்குப் பெருமையோ?

ஒரு குடம் பாலில்

ஒரு துளி விஷம்

பெரும்பாலான ஆசிரியப் பணிபுரிவோர், இப்படிப்பட்ட ஈனத்தனத்தில் ஈடுபடுவது இல்லை என்பது உண்மையென்ற போதிலும், ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் விழுந்ததைப் போன்றதல்லவா?

கடந்த  மூன்று வாரங்களாக வெளிவரும் விசாரணைகளும், பத்மாசேஷாத்திரி பள்ளி, மகரிஷி வித்தியா மந்திர் பள்ளி, செட்டிநாடு வித்தியாசிரம் போன்ற பள்ளிகளும், மேலும் சில பள்ளிகளின் ஆசிரியர் பெயர்களும் குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ளன.

இதில் பத்மா சேஷாத்திரி பள்ளிஆசிரியர் ராஜகோபாலன் என்பவரைக் கைது செய்து, போலீஸ் காவலில் மூன்று நாள் விசாரணைக்கு எடுத்து விசாரித்ததில், அவர் தன்மீதான புகார்களை ஒப்புக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதுபோலவே நாகராஜன் என்ற பயிற்றுநர்மீதும் பல புகார்கள் - பாதிக்கப்பட்ட மாணவிகளால் கூறப்பட்டு, அவரும் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். கராத்தே மாஸ்டர் ஜெயராஜ்  என்பவரும் சிக்கியுள்ளார்.

மகரிஷி வேதாத்ரி பள்ளி ஆசிரியர் ஆனந்தன் என்பவர்மீதும் புகார்கள் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்!

குழந்தைகள் நல ஆணையமும், பள்ளிக் கல்வித்துறையும், காவல்துறையினரும் விசா ரணைக்கு ஒத்துழைக்குமாறு சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டோர், அந்தப் பள்ளியின் பொறுப்பாளர்களிடம் முறைப்படி அறிவித்து -  தக்க முறையில் சட்டப்படி விசாரித்து, பதிவு செய்து வருகின்றனர்

இதைச் சிலர் ஆரிய - திராவிட பிரச் சினையாக்கி, தமிழ்நாடு தி.மு.. அரசின்மீது பழி தூற்றலாம் என்று ஏற்கெனவே பல வழக்குகளில் மூக்கறுபட்டு மூலையில் உள்ள 'அரசியல் மூளிகள்' சிலர் முனைப்புக்  காட்டுவது - அவர்கள் காற்றை விதைத்து புயலை அறுவடை செய்யும் அதிபுத்திசாலிகளாக இறுதியில் ஏமாறுவது உறுதி!

பெண்கள் சமூகத்தை

இருட்டுக்குள் தள்ளுவதா?

பாலியல் சீண்டல், விஷமம், பாலியல் தொல்லை என்கிற குற்றங்களைப் புரிபவர்கள் யாராக இருந்தாலும் ஜாதி, மதம், இனம், கட்சிக் கண்ணோட்டமின்றி, சட்டம் தனது கடமையைச் செய்து, கல்வித் துறையில் முளைக்கும் களைகளையும், இளம் பயிர்களைச் சீரழிக்க எண்ணும் விஷக் கிருமிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அப் புறப்படுத்தி, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி - காலங்காலமாய் மறுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் சரி பகுதியான பெண்களுக்குக் கிடைக்கும் வகையில் அமையும் திராவிடக் கல்வி நீரோடையில் சிற்சில முதலைகள் இருந்து கொண்டு மாணவிகளின் கல்வியை மட்டுமல்லாமல், வாழ்வின் வருங்காலம் உள்பட அனைத்தையும் இருட்டுக்குள் தள்ளுவது எவ்வகையிலும் ஏற்கக் கூடியதல்ல.

சட்டமும், நீதியும் இரும்புக்கரம் கொண்டு இத்தகைய இழி செயல் மனப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முன் வர வேண்டும்.

பாலியல் குற்றமாக இதை வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், சமூகத்தில் பெண் குழந்தைகள் வளர்ப்பு, பழகு முறைகள், எச்சரிக்கையுடன் எவரிடமும் அத்துமீறல்களுக்கு இடந்தராத உரிமை எல்லை இவற்றைப் பற்றிய அறிவு விளக்கத்துடன் கூடிய - ஆண் பெண் சமத்துவ சிந்தனையை வளர்க்கும் கல்வியையும், பாலியல் கல்வியையும் தர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெண்களை பாலின பண்டங்களாகப் பார்க்கும் பார்வைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பகுத்தறிவை வளர்க்க வேண்டும்.

 கி.வீரமணி

 தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை     

9.6.2021               

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image