‘‘குடிஅரசு'' இதழ்கள் இல்லை என்றால், இன்றைக்கு வரலாறு ஏது?

 பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவு நாள் ஆய்வு உரையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, ஜூன் 9  ‘‘குடிஅரசு'' இதழ்கள் எல்லாம் இல்லை என்றால், இன்றைக்கு வரலாறு ஏது? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் சொற்பொழிவு-2

கடந்த 25.5.2021 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வெள்ளையன் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு  ஆய்வு பொழிவு -  ‘‘சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - பொதுவுடைமை இயக்கம்பற்றிய தந்தை பெரியாரின் அரிய விளக்கமும் - இன்றைய தொடர்ச்சியும்'' என்ற தலைப்பில் இரண்டாவது சொற்பொழிவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார்.

அவ் ஆய்வுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இதற்கு முன்னாலே இருக்கின்ற செய்தி இரண்டு செய்திகள்.

தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் ஒரு தவறான செய்தியைக் குறிப்பிட்டார்கள்!

முன்பு தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் எழுதியபொழுது, ஒரு தவறான செய்தியைக் குறிப் பிட்டார்கள்; பிறகு அதை நான் தெளிவுபடுத்தினேன்.

‘‘பாஸ்போர்ட் இல்லாமல், ரகசியமாக தந்தை பெரியார் அவர்கள் ஒரு சரக்குக் கப்பலில் ஏறிப் போனார்கள்'' என்பது போன்று ஒரு தவறான தகவலைக் கொடுத்தார்.

இல்லை,தந்தை பெரியார் அவர்கள் பாஸ்போர்ட் வாங்கித்தான் முறையாகச் சென்றார். அந்த பாஸ்போர்ட் இன்னமும் எங்களிடம் இருக்கிறது என்று சொல்லி, அந்தத் தரவுகளிலிருந்து எடுத்து வைத்திருக்கிறோம்.

ஆகவே, அது ஒரு தவறான தகவல். ஏனென்றால், தந்தை பெரியாரைப்பற்றி எங்கெங்கெல்லாம் தவறான தகவல்கள்பரபரப்பப்படுகின்றதோ,அதனைமறுத்து தெளிவுபடுத்தவேண்டியது பெரியார் தொண்டர் களாகிய நம்மைப் போன்றவர்களுடைய உயிர்க்கடமை யாகும்.

ஏனென்றால், இன்றைக்கு நாம் அதைச் செய்ய வில்லை என்றால், ஏற்கெனவேஜாதகக் கதைகள்' புத்தருக்கு வந்தது போன்று - இப்பொழுதே நிறைய கதைகளை சிலர் உருவாக்குகிறார்கள். ‘நான்தான் பெரியாருக்குக் கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்தேன்' என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

ஆகவேதான், நாம் அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான், அதையெல்லாம் பதிவு செய்தோம். அப்படிப் பதிவு செய்த பிறகு, யாருக்கும் சந்தேகம் இல்லை.

ஒருமுறை இந்திய - ரஷ்ய கலாச்சார அமைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெறும்பொழுது, இந்து ராம் அவர்களையும், அங்கே இருந்த ரஷ்ய அதிகாரியையும் வைத்துக் கொண்டு பேசும்பொழுது, அந்தப் பாஸ் போர்ட்டை எடுத்துக் கொண்டு போனோம்.

‘‘குடிஅரசு'' இதழ்கள் இல்லை என்றால், இன்றைக்கு வரலாறு ஏது?

1931 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் வாங்கி யிருக்கின்ற பாஸ்போர்ட். ரஷ்ய மொழியும் அந்தப் பாஸ்போர்ட்டில் இருக்கும். அதை அவர் பார்த்தவுடன், அந்த அதிகாரி வியந்து போனார்.

நண்பர் இந்து ராம் அவர்கள், ‘‘என்னங்க, இது வரையில்  அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக் கிறீர்களே'' என்று சொன்னார்!

ஆமாம்! அன்னை மணியம்மையார் அவர்கள் எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்திருப்பார் என் றேன். சில முக்கியமான தரவுகள் எல்லாம் இருக் கின்றன. அந்த அடிப்படையில்தான், ‘‘குடிஅரசு'' இதழ்கள் எல்லாம் இல்லை என்றால், இன்றைக்கு வரலாறு ஏது? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

அதற்கடுத்து, ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

பேராசிரியர் அரசு

மறைந்த நம்முடைய நண்பர் ஆனைமுத்து  அவர்களைப்பற்றிப்ரண்ட் லைன்' பத்திரிகையில், மே 7 ஆம் தேதி, நம்முடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய சிறந்த முற்போக்காளர் - சென்னை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று - இன்றைக்கும் நம்முடைய திராவிட இயக்கக் கருத்துகளையும், இடதுசாரி சிந்தனையும் உடையவராக இருக்கக்கூடிய பேராசிரியர் அரசு அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அவருடைய சிறப்புகளையெல்லாம் எடுத்து, சமூகநீதிக்காகப் போராடிய போராளி என்று தோழர் ஆனைமுத்து அவர்கள் மறைந்தவுடன் அவரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையில் ஒரு தகவல் இருக்கிறது - எப்படியோ எல்லா செய்திகளையும் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கக்கூடிய நம்முடைய பேராசிரியர் அவர்கள், இந்த இடத்தில், யாரோ சொன்னதைக் கேட்டோ - செவி வழிச் செய்திகளைக் கேட்டோ - ஒரு தவறான தகவல் அந்தக் கட்டுரையில் இடம்பெறும்படி பதிவு செய்துவிட்டார்.

என்ன அந்தத் தவறான தகவல் என்று சொன்னால் நண்பர்களே,

மார்க்ஸ் ஏங்கல்ஸ் அவர்களுடைய கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவை மொழி பெயர்த்து குடிஅரசு இதழில், தமிழில் வெளியிடுகிறார். அதற்குப் பிறகுதான் 1931-32 தந்தை பெரியார் அவர்கள் சோவியத் ரஷ்யாவிற்குச் செல்கிறார்.

சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று வந்த பிறகு, அதை வெளியிடவில்லை என்பதுதான் மிக முக்கியமானது.

கவிஞர் இங்கே உரையாற்றும்பொழுது, அதனைச் சுட்டிக்காட்டினார்.

சமத்துவம் முக்கியம்மனிதநேயம் முக்கியம்!

ஆகவே, வரலாற்றில் மிகத் தெளிவோடு இருக்க வேண்டும்.

காங்கிரசில் இருக்கும்பொழுதே, ‘பிராமினோகிரசி' என்று சொல்கிறார். தனிப்பட்ட முறையில், பார்ப்பனர் கள்மீது என்ன கோபம்? கடவுள் மீதோ, மதத்தின் மீதோ அவருக்குக் கோபம் கிடையாது - அவருக்கு சமத்துவம் முக்கியம்; மனிதநேயம் முக்கியம்.

அதை ஒவ்வொரு முறையும், அவருடைய கொள் கையில் எடுத்து தெளிவாகச் சொல்கிறார்.

மக்கள் சமத்துவமாக இருக்கவேண்டும்; பெண் களுக்கு சமத்துவ உரிமை கிடைக்கவேண்டும்.

அதற்கு எங்கெங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக் கிறது என்று சொல்லும்பொழுது, அவருக்கு முதலில் அதற்குத் தடையாக இருப்பது வருணம். வருணத்தை யொட்டித்தான் நம்முடைய நாட்டில் வர்க்கம். இதில் மிகத் தெளிவாக இருக்கிறார்.

ஏனென்றால், பெரியார் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர் ஆவார்.

எனவேதான், அவர்கள் இன்னொரு புத்தகத்தைப் பார்த்து கொள்கைகளை வகுத்துக் கொண்டவர் அல்ல. அதேநேரத்தில், தன்னுடைய கருத்துகளை வைத்துக் கொண்டு, அந்தக் கருத்துகளுக்கு உள்ளோட்டமாக யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ உலகத்தில் - எந்த நாட்டில் இருந்தாலும், அதையெல்லாம் எடுத்து தன்னுடைய ‘‘குடிஅரசு'' என்று சொல்லக்கூடிய அந்த சுயமரியாதைப் பிரச்சார மேடையில் மிக ஆழமாக மக்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

அதனுடைய அடிப்படையில் வருகின்றபொழுது, சோவியத் ரஷ்யாவிற்கு அதற்குப் பிறகு செல்கிறார்.

சாதாரண மக்கள் தங்கும் விடுதியில்தான் தங்கினார்

ரஷ்யாவில் எப்படிப்பட்ட முறைகள் இருக்கின்றன என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லி, எந்தத் தலைவரும் இல்லாத அளவிற்கு, சுமார் 100 நாள்கள் அங்கே தங்கி, பெரிய ஓட்டலில் அவர் தங்கவில்லை, பெரிய அரசு மாளிகைகளில் தங்கவில்லை. சாதாரண மக்கள் தங்கும் விடுதியில்தான் அவர்களுடன் தங்கினார், கலந்துரையாடினார்கள்.

அதேநேரத்தில், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள், செய்திகள் எல்லாம் இருக்கின்றன.

இப்படி இருக்கையில், எப்படியோ ஒரு தவறான தகவலை, பொறுப்பாக எப்பொழுதுமே எதையும் சொல்லக்கூடியவர் இன்றைக்கும் நம்முடைய மரி யாதைக்கு உரியவர் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் - அப்படிப்பட்டவர், மே இதழானப்ரண்ட் லைன்' இதழில் என்ன எழுதியிருக்கிறார் என்றால்,

“when Singaravelar received an invitation to visit the Soviet Union, he requested Periyar to make the trip since he knew he would not be permitted to travel to the Soviet Union by the British Government”

சிங்கார வேலர் இந்தியாவினுடைய முதல் கம்யூ னிஸ்ட் என்று புகழப்பட்டவர். உங்களுக்குத் தெரியும், சிங்காரவேலர், தந்தை பெரியார் அவர்களை மதித்தவர். பெரியார் அவர்களும், சிங்காரவேலரை அழைத்து, ‘‘குடிஅரசு'' இதழில் மிகத் தெளிவாக எழுதி வைத்தவர். இரண்டு பேரும் மிகத் தெளிவான பணி செய்தவர்கள். சுயமரியாதை இயக்கத்தை சிங்காரவேலர் மிகவும் மதித்தவர். அவரைப்பற்றி கே.முருகேசன், சி.சுப்பிர மணியம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.

சிங்காரவேலரைப்பற்றி இதுவரையில் யாருமே அதுபோன்று சொன்னது கிடையாது. முதன் முறையாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

பெரியார் சோவியத் ரஷ்யாவிற்கு, அவராகப் போகவில்லை. அதற்குப் பதிலாக சிங்காரவேல ருக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவிற்குச் செல்வதற்கு, சிங்காரவேலருக்கு அனுமதி வழங்கமாட்டார்கள் பிரிட்டிஷ் அரசாங் கத்தார்; ஆகவே, நீங்கள் போய்விட்டு வாருங்கள் என்று சிங்காரவேலர் அனுப்பினார்; அதனால்தான் சோவியத் ரஷ்யாவிற்குச் சென்றார் என்கிற கருத்து இதில் பரப்பப்படுகிறது.

ஏன் இதை மறுக்கவேண்டும் என்றால், பெரிய அளவிற்கு இதற்கு மறுப்பு தெரிவிக்கவேண்டும்; பேராசிரியர் அரசுக்கு மறுப்புச் சொல்லவேண்டும் என்பதற்காகவோ அல்லது இதை விவாதப் பொரு ளாக்கவேண்டும் என்பதோ அல்ல.

நம்முடைய நாட்டில், உண்மைகளையே திரித்துத் திரித்துச் சொல்கிறார்கள். அதுபோன்று வருகின்ற பொழுது என்னாகும்? நாளைக்கு ஆய்வாளர் கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தரவை எடுத்து, இவரே இப்படி கட்டுரை எழுதியிருக்கிறார்; இவர் மிக முக்கிய மான பேராசிரியர்; ‘ஃப்ரண்ட் லைன்' மிகவும் தரமான பத்திரிகை. அதில் இப்படி எழுதியிருக்கிறார்; அதற்கு எந்தவிதமான மறுப்பும் இதுவரை வரவில்லை. திராவிடர் கழகமோ, மற்றவர்களோ மறுக்கவில்லை என்று சொன்னால், அந்தக் கட்டுரைக்கு மறுப்பு சொல்ல வில்லை என்றால், அது உண்மை என்றாகிவிடும்.

ஆதாரமே கிடையாது!

ஆகவே, அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் அந்தத் தகவலுக்கு கொஞ்சம்கூட ஆதாரமே கிடை யாது.

உடனே, நம்முடைய கழகப் பொருளாளர் நண்பர் குமரேசன் அவர்களின்மூலமாக தெளிவாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம், இயக்கம் சார்பாக.

ஃப்ரண்ட் லைன்' நிருவாகத்தினரும், முதலில் நாங்கள் ஆன்லைனில் பதிவிடுகிறோம். பிறகு அதை இதழில் வெளியிடுகிறோம் என்று சொன்னார்கள்.

அந்தப் பத்திரிகை கருத்துள்ள பத்திரிகை; கொள்கை ரீதியாக நடத்தப்படும் பத்திரிகை. நமக்கு அந்தப் பத்திரிகையோடு சண்டை போடவேண்டும் என்பதற்காகவோ அல்லது இதை ஒரு விவாதப் பொரு ளாக மாற்றவேண்டும் என்பதற்காகவோ இதனை சொல்லவில்லை.

ஆனால், இது நாளைக்கு பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றில், மிக முக்கியமான பகுதியாக இருக்கக்கூடிய அவருடைய சோவியத் ரஷ்ய பயணங்கள் என்பதில், நாளைய ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள் என்ப வர்களால் தவறாகப் பயன்படுத்தக் கூடும்.

ஏனென்றால், பாஸ்போர்ட் இல்லாமல் ரஷ்யா விற்குப் பெரியார் சென்றார் என்பதை, பலர் அதுபற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

நாம் அதற்கு மறுப்பு தெரிவித்து, பாஸ்போர்ட் இருக் கிறது என்று காட்டிய பிறகுதான், அந்தப் பேச்சையே விட்டார்கள்.

ஆனைமுத்து அவர்களே வருத்தம் தெரிவிக்கவில்லை!

ஆனால், அப்படி எழுதிய ஆனைமுத்து அவர் களே வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு செய்தி.

ஏனென்றால், இதுவும் மிக முக்கியமான அடிப் படையாகும். ஆகவேதான், இந்த மாதிரி எந்த முகாந் திரமும் அதற்குக் கிடையாது. அது ஒரு தவறான தகவல்.

பெரியார் அவர்கள் மற்ற மேலைநாடுகளுக்கு சென்றிருக்கிறார். அதைப்பற்றி நாகை கே.முருகேசன் அவர்கள், சி.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய நூலை நியூ சென்சுரி புக் அவுஸ் வெளியிட்டு இருக் கிறார்கள்.

சுயமரியாதை இயக்கத்திற்கும், மற்றவற்றிற்கும் இருக்கக்கூடிய உறவுகளைப்பற்றி மிக அழகாக எழுதி யிருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தைப் பாராட்டி, சுயமரியாதை இயக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதையெல்லாம்பற்றி இந்த நூலில் மிகத் தெளிவாக இருக்கிறது.

சிங்காரவேலர் பேசுகிறார்சிங்காரவேலர் சொல்கிறார்,

‘‘சுயமரியாதை இயக்கக் கூட்டத்தாரை நான் சந்தித்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது; அது முதல் உங்களுடைய இயக்கத்தையும், உங்கள் நோக்கங்களையும் கவனித்து வருகிறேன்; சுயமரியாதை இயக்கம் ஆரம்பமாகி, 7, 8 வருஷமாகிறதாகத் தெரி கிறது. இந்த 7, 8 வருஷமாக நீங்கள் செய்து வரும் வேலைகளை சற்று ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.

நமது சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் யாது? உங்கள் கூட்டங்களின் நடவடிக்கைகளையும், பிரசங்கங்களையும், உங்கள் இயக்கத்தை ஆதரித்துப் பேசும் குடிஅரசு, சண்ட மாருதம், புதுவை முரசு, குமரன், தமிழன் முதலிய பத்திரிகைகளையும், நியூஸ் பேப்பர்ஸ் சஞ்சீகைகளையும் ஜெர்னல் கேட்டும், வாசித்தும் வந்ததில், உங்கள் இயக்கத்தின் நோக்கம் இன்னது என்று விளங்குகிறது.

முதலாவது மதங்களையும், மதக் கோட்பாடுகளையும், அவை சம்பந்தமாக எழும் மூடநம்பிக்கைகளையும், நமது சமூக வாழ்க்கையினின்றும் நீக்கவேண்டும் என்ற கோரிக்கை முதன்மையானது என்று நான் எண்ணு கிறேன்.

இரண்டாவதாக ஜாதி வேற்றுமைகளையும் களைந்து, ஜாதி சமூக வித்தியாசங்களையும் நீக்க வேண்டும் என்பது உங்கள் கோரிக்கையாகும்.

இவ்விரண்டும் உங்கள் இயக்க நோக்கங்களில் முக்கிய சீர்திருத்தங்களாகும்.

(தந்தை பெரியார் சொல்வார், ஜாதி வேற்று மையை நீக்கவேண்டும் என்பது என்னுடைய கொள்கையல்ல; ஜாதியையே ஒழிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை. அம்பேத்கர் சொன்னதுபோன்று ஜாதியை அழிக்கவேண்டும்).

பெண்களின் சமூக தாழ்வையும் போக்கி, அவர்கள் நிலையையும் உயர்த்தி, ஆணுடன் பெண்ணும் சரி சமத்துவம் பெறவேண்டும் என்கிற கோரிக்கையும் உங்கள் நோக்கங்களில் முக்கியமானதாகும்.

உங்களுடைய சுயமரியாதை இயக்கம் இந்த சமூக சீர்திருத்தங்கள் யாவையும் கொள்ளத்தக்க இயக்கம் என்றே எண்ணத் தகும்.

இந்த இயக்கத்தைப் போன்று எந்த ஓர் இயக்கமும் இவ்விதமாக நமது சமூக ஊழல்களை, வேர்களைக் களைய ஒரே காலத்து எழுந்ததை அறியோம்.

உங்களுடைய இயக்கத்தை  One of the most comprehensive social reform organization  என்று கூறக் கூடும். அந்த காரிருளில் மூழ்கிக் கிடக்கும் நாட்டை, இரண்டொரு பிரசங்கத்தால் சீரடைய செய்ய சுயமரியாதை இயக்கத்தார் நினைக்கிறார்கள் போலும், உங்களுடைய ஆற்றல் இவ்வளவில் நிற்க, நமது'' என்று ஆரம்பிக்கிறார்கள்.

எனவே, சுயமரியாதை இயக்கத்தினுடைய மிக முக்கியமான தத்துவங்கள் இவற்றையெல்லாம் பேசி, தந்தை பெரியார் அவர்களுடைய சிறப்புகளைப் பற்றியெல்லாம் இந்த இடத்தில் மிக ஆழமாக எடுத்துச் சொல்கிறார்கள் முருகேசன் அவர்களும், அவருடன் இணைந்த சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்களும் பல பக்கங்களில் எழுதிவிட்டு, இறுதியாக ஒரு கருத்தை சொல்கிறார்கள்.

‘‘மீண்டும் துவக்கப்பட்டு விட்டது''

அது என்னவென்றால், உங்களுக்கே தெரியும்.

இங்கே கவிஞர் அவர்கள் சொன்னதுபோல, சுயமரியாதை இயக்கத்தின்மீது எப்படியோ அரசாங் கத்திற்கு ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை நசுக்கிவிடுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள் என்று 31.3.1932 ‘‘குடிஅரசு'' இதழில் ‘‘மீண்டும் துவக்கப்பட்டு விட்டது'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள்  கையொப்பமிட்டு, மன்னிப்பு விஷயத்தைப்பற்றி ஒரு தலையங்கம் எழுதினார்.

மன்னிப்பு கேட்டார் என்று சொன்னால், நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற புத்தகம் வெளியிட்டதற்காக, ஜீவானந்தத்தையும், கிருஷ்ணசாமியையும் கைது செய்தனர். அப்போது அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எழுதும்போது, அந்த மன்னிப்பு விஷயத்தைப்பற்றி எழுதினார்கள்.

‘‘சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக் கத்தைப் பரப்பும் இயக்கமாக வருகின்றது என்று அரசாங்கம் நினைப்பதால் அவ்வாறு சோஷலி சத்தையும் கம்யூனிஸத்தையும் பரவச் செய்யும் நடவடிக்கைகளை ஈவெரா. ஆதரிக்காமல் இருப்பது நல்லது என்று ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் யோசனை கூறினர். இந்தச் சமயத்தில் இத்தகைய ஆலோச னைகளின் விளைவாக .வெ.கிருஷ்ணசாமி அவர் களும் ஜீவானந்தமும் அரசாங்கத்துக்கு எதிராக, ராஜ விசுவாசத்தைக் குலைப்பதற்காக எதையும் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று கூறி வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோர நேர்ந்தது. 31.3.1935 ‘‘குடிஅரசில்'' (குடி அரசு மீண்டும் துவக்கப்பட்டு விட்டது). ஈவெரா. கையொப்பமிட்டு, இந்த மன்னிப்பு விஷயத்தைப்பற்றி ஒரு தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கம் .வெரா. எழுதுவது என்ற தலைப்பில் வெளிவந்தது.

அந்தத் தலையங்கத்தில் அவர் நிலைமையை மேலும் சற்று விளக்கும் வகையில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி எப்படியோ அரசாங்கத்தாருக்கு ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டு விட்டதாகவும், அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை நசுக்கி விடுவதென முடிவு செய்திருக்கிறார்கள் என்று தனக்குத் தெரிந்தது என்றும், தான் ருஷ்யாவுக்குச் சென்று திரும்பிய பின்னர் தனக்கும் தன் நண்பர்களுக்கும் சி.அய்.டி. போலீசாரால் பல தொல்லைகள் ஏற்பட்டு வந்துள்ளது என்றும் அத்தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தமிழ் நாட்டில் 175-க்கு மேற்பட்ட சுயமரியாதை இயக்கக் கினைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அவற்றில் பெரும்பாலானவைகளும் சி.அய்.டி தொல்லைகளுக் குட்பட்டிருப்பதாகவும், இந்த இயக்கம் தங்களுக்கு ஆபத்தானது என்று எண்ணி இயக்கத்திலிருந்து 'பல பெரிய ஆட்கள் என்பவர்களும் இயக்கத்தை விட்டு விட்டதாகவும் சிலர் செயலற்றுப் போய் விட்டதாகவும் அதே சமயத்தில் இயக்கத்தில் தீவிரப் பங்கேற்று வந்த தொண்டர்கள் சிலர் தம் வேலையில் அளவுக்கு மீறிய உற்சாகம் காட்டியதை சிஅய்டிகாரர்கள் அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் தந்ததாகவும் அந்தத் தலையங்கத்தில் கூறுகிறார்.

(தொடரும்)

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image