கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 13, 2021

கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்

வேலூர், ஜூன் 13 கரோனா தொற்றின் கடுமையான பாதிப்பில் இருந்து பாதுகாப்பதில் கரோனா தடுப்பூசி பெருமளவு பங்கு வகிக்கிறது என சிஎம்சி மருத்துவ மனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டாலே தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மேத்யூ தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா முதல் அலை பாதிப்பைக் காட்டிலும் இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, இரண்டாம் அலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், அய்சியு படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடினர். இதற்கிடையில், கரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாப்பதுடன் தீவிர சிகிச்சை (அய்சியு) அளிக்க வேண்டிய அபாய நிலைக்கு செல்வதை தடுப்பதிலும் கரோனா தடுப்பூசிக்கு பெரும்பங்கு இருப்பது சிஎம்சி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலூர் சிஎம்சி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பீட்டர் ஜான் விக்டர், பிரசாத் மேத்யூ, ஹேமா பால், மாலதி முருகேசன், ஜாய் ஜெ.மேமன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தயாரித்துள்ள ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப் பணியாளர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்

பட்டுள்ளது.

வேலூர் சிஎம்சி மருத்துவமனை 2,600 படுக்கை வசதி கொண்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என சுமார் 10,600 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில், 8,991 பேருக்கு கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 93.4 சதவீதம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6.6 சதவீதம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல் மே மாதம் 19ஆம் தேதி வரை சுமார் 1,350 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண், ஆண் விகிதாச்சார படி 3:2 என்ற அடிப்படையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டா வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் 33 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிர பாதிப்பு குறைவு

ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களைக் காட்டிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 95 சதவீதம் பேரை தொற்றில் இருந்து பாதுகாப்பது தெரியவந்துள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை பாதுகாப்பதில் 61 சதவீதமும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் களை பாதுகாப்பதில் 65 சதவீத மாகவும் இருக்கிறது.

மேலும், ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் பாதுகாப் பதில் 70 சதவிகிதம், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிப்பதில் இருந்து பாதுகாப்பதில் 94 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வதில் இருந்து பாதுகாப்பதில் 95 சதவீதமாக இருக்கிறது. இரண்டுடோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மருத்துவ மனைக்கு செல்லாமல் பாதுகாப்பதில் 77 சதவிகிதமும், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையை தவிர்த்ததில் 92 சதவிகிதமும், அய்சியு சிகிச்சையை தவிர்ப்பதில் 94 சதவீதம் பங்களிப்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் கரோனா தடுப்பூசி தொற்றில் இருந்து பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது உறுதி செய்கிறது என தெரிவிக்கப்

பட்டுள்ளது.

No comments:

Post a Comment