புற்றீசலாகப் புறப்படும் பாலியல் அத்துமீறல்கள்

 சில நாள்களாகப் புற்றீசல் போல மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

வெளி உலகுக்கு விளம்பர வெளிச்சத்தில் தரத்தில் உயர்ந்ததாக, மேல் தட்டுக் கவுரவப் பள்ளிகளாக வலம் வந்தவற்றின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற ஆரம்பித்து விட்டன.

குறிப்பாக பத்மசேஷாத்திரி பள்ளியில் நீண்டகாலமாக நடந்து வந்த மாணவிகள் மீதான பாலியல் அத்து மீறலில்  ஓர் ஆசிரியர் சிக்கிக் கொண்டதன் மூலம் பொல பொலவென்று வீதிகளில் சிந்தி விகார ரூபம் எடுத்தது.

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற தன்மையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதில் தேவையில்லாமல் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையைக் கிளப்பி விட்டவர்கள் பார்ப்பனர்களே.

அரசியல் புரோக்கர் சு.சாமி, .தி.மு.. மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் சில பார்ப்பன  நடிகர்கள் - போதும் போதாததற்கு சதா பூணூல் கண் கொண்டே எதையும் பார்த்திடும் - தீர்மானிக்கும் கழுகான 'துக்ளக்' குருமூர்த்தி வகையறாக்கள் 'அய்யய்யோ, பார்ப்பனர் நடத்தும் பள்ளி என்றால் பழி தூற்றுகின்றனரே' என்று சந்திரமதி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டனர்.

செட்டிநாடு பள்ளியைப் பற்றிக்கூடத்தான் புகார் கிளம்பி இருக்கிறது. செட்டிநாடு பள்ளி என்ன அக்கிர காரத்தார் நடத்தும் பள்ளியா? அந்தப் பள்ளியிடத்திலும் விசாரணை நடந்து கொண்டுதானே இருக்கிறது!

இந்த வார இதழ் 'துக்ளக்'கில் கூட (16.6.2021) ராஜகோபாலன் லயோலா கல்லூரி ஆசிரியராக இருந்திருந்தால் அவருக்கு இந்தக்கதி நடந்திருக்காது என்று எழுதப் படுகிறது என்றால், இவர்களின் பார்வை எதிலும் பூணூல் தனம்தான் துருத்திக் கொண்டு எழும்.

பத்ம சேஷாத்திரி பள்ளி, மகரிஷிப் பள்ளிகளில் பாலியல் அத்துமீறல் நடந்தது உண்மையா? இல் லையா? என்பதற்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லும் பண்பாடு பார்ப்பனர்களிடம் எதிர் பார்க்க முடியாததுதான். அந்தப் பண்பாடு அவர்களுக்கு இருந்திருந்தால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்று தானே எழுத வேண்டும்.

பார்ப்பான் கொலை செய்தால் சிகைச் சேதம், சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம் என்ற மனுதர்மப் புத்தி அவர்கள் ரத்தத்தோடு ரத்தமாகப் பிறந்த காரணத்தால், அந்தத் தன்மையில் இருந்து அவர்கள் விடுபடுவதாக இல்லை என்பதுதான் கல்லுப்போன்ற உண்மை.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன் கொடுமைகள் பற்றி எழுதிவந்த 'துக்ளக்' குருமூர்த்தி தேவையில்லாமல் தந்தை பெரியாரை இழுத்து மூக்கறுபடவில்லையா?

'மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;  மானமற்ற ஒருவனுடன் போராடுவது கடினம்' என்பார் தந்தை பெரியார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

இப்பொழுது இன்னொரு பாலியல் பூகம்பம் கிளம்பி இருக்கிறது. 'டான்ஸ் சாமியார்' என்று அறிமுகமான சிவசங்கர் பாபா நடத்தும் உறைவிடப் பள்ளியில் அந்தப் பேர் வழியே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சங்கதி சிரிப்பாய் சிரிக்கிறதே!

அவர் கிருஷ்ண பரமாத்மாவாம்! - அதனால் லீலைகள் செய்ய உரிமைப் பெற்றவராகி விட்டாரா?

தமிழ்நாடு பெண்கள் ஆணையம் விசாரணைக்கு சிவசங்கர் பாபா, பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் உள்பட அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் மிரட்டலுக்கோ, செல்வாக்குக் காரணமான அழுத்தத்துக்கோ தமிழ்நாடு அரசு கிஞ்சிற்றும் அடிபணிந்து விடாது என்பதிலே நாட்டு மக்களுக்குத் தெளிவான உறுதி இருக்கிறது.

மன்னிக்கப்படவே முடியாத இத்தகைய குற்றங் களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் பட்சத்தில்தான் - பெண் என்றால் பேதை, காமப் பதுமை என்று நினைக்கும் மிருகத்தனத்திற்கு முடிவு ஏற்படும்.

பத்திரிகைகளில் பலவாறாக எழுதுவதும், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று எழுதுவதும் பிரச்சினையைத் திசை திருப்பும் யுக்தி என்பது தி.மு.. அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவாகத் தெரியும் என்று நாம் மட்டுமல்ல, நாட்டு மக்களும் திட்டவட்டமாக நம்புகிறார்கள்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image